துணை முதல்வர் பதவி அல்ல; பொறுப்பு என்கிறார் உதயநிதி!
துணை முதல்வர் பதவி அல்ல; பொறுப்பு என்கிறார் உதயநிதி!
UPDATED : செப் 29, 2024 10:10 PM
ADDED : செப் 29, 2024 09:52 AM

சென்னை: தமிழக துணை முதல்வராக இன்று பொறுப்பேற்ற உதயநிதி, 'துணை முதல்வர் என்பது பதவி அல்ல, பொறுப்பு' என செய்தியாளர்களிடம் அவர் தெரிவித்தார்.
திமுக கூட்டணி கட்சித் தலைவர்கள் உதயநிதி பதவியேற்பு ஆதரவு தெரிவித்து ஒரே குரலில் பேசி வருகின்றனர். அதிமுக, பாஜக உள்ளிட்ட எதிர்க்கட்சித் தலைவர்கள் விமர்சனம் செய்து வருகின்றனர். தமிழக பா.ஜ., முன்னாள் தலைவர் தமிழிசை, உதயநிதிக்கு துணை முதல்வர் பதவி அளிப்பதற்கும், செந்தில் பாலாஜியை அமைச்சராக நியமனம் செய்வதற்கும் கடும் கண்டனம் தெரிவித்துள்ளார். வாரிசு அரசியலில் இல்லாதவர்கள் உதயநிதிக்கு துணை முதல்வர் பதவி வழங்கியது குறித்து பேசலாம்' என அமைச்சர் மா.சுப்பிரமணியன் தெரிவித்தார்.
சென்னை தீவுத்திடலில் போதையில்லா தமிழகம் என்ற மாரத்தான் போட்டியை, மா.சுப்பிரமணியன் துவக்கி வைத்தார். பின்னர் அவர் நிருபர்களுக்கு அளித்த பேட்டி: முதல்வர் ஸ்டாலின் செல்லும் இடத்தில் எல்லாம் பொதுமக்கள் உதயநிதிக்கு எப்பொழுது துணை முதல்வர் பதவி வழங்கப்படும் என்ற கோரிக்கை விடுத்துக் கொண்டு இருந்தார்கள்.
நல்ல நாள்
பொதுமக்களின் கோரிக்கை மட்டுமல்லாமல், ஒட்டுமொத்த திராவிட தொண்டர்களின் எதிர்பார்ப்பை முதல்வர் ஸ்டாலின் நிறைவேற்றி இருக்கிறார். தமிழக அரசியல் வரலாற்றில் இன்று மகிழ்ச்சி நிறைந்த, பெருமை கொள்கிற, நல்ல நாள். உதயநிதி துணை முதல்வர் ஆவதற்கு முன்பாகவே, இளைஞர்கள் நலன் மேம்பாட்டு துறை அமைச்சராக பொறுப்பேற்ற பிறகு விளையாட்டுத்துறையில் தமிழகத்தை தலைமை இடமாக மாற்றி தந்திருக்கிறார்.
உதயநிதி விளையாட்டுத்துறை அமைச்சராக பொறுப்பேற்ற பிறகு தான் பல்வேறு துறைகளில் பல்வேறு தரப்பினர் பெருமை அடைந்து இருக்கிறார்கள். பார்முலா கார் பந்தயமாக இருந்தாலும் சரி, முதல்வரின் கோப்பை என்ற போட்டியாக இருந்தாலும் சரி 2 கோடி இளைஞர்கள் சமுதாய சக்தியின், விழிப்புணர்வுக்காக விளையாட்டு துறையை உதயநிதி மிகச் சிறப்பாக வழி நடத்தி வருகிறார். 100 இளைஞர்களுக்கு அரசு பணி வழங்கப்பட்டுள்ளது.
வாரிசு அரசியல்
வாரிசு அரசியலில் இல்லாதவர்கள் உதயநிதிக்கு துணை முதல்வர் பதவி வழங்கியது குறித்து பேசலாம். விமர்சிப்பவர்கள் வாரிசு அரசியலில் இருக்கிறார்களா என பார்க்க வேண்டும். வாரிசு இல்லாதவர்கள் இது குறித்து முன்னெடுத்து பேசுவது தான் சிறப்பாக இருக்கும். இவ்வாறு அமைச்சர் மா.சுப்பிரமணியன் கூறினார்.