யு.ஜி.சி.,யிடம் போலி ஆவணம்; தனியார் பல்கலைக்கு எச்சரிக்கை
யு.ஜி.சி.,யிடம் போலி ஆவணம்; தனியார் பல்கலைக்கு எச்சரிக்கை
ADDED : ஜன 31, 2026 06:41 AM

சென்னை: அகில இந்திய தொழில்நுட்ப கல்வி கவுன்சிலான ஏ.ஐ.சி.டி.இ., உறுப்பினர் செயலர் ஷியாம் ராத் வெளியிட்டுள்ள அறிக்கை:
திருவள்ளூர் மாவட்டம், மதுரவாயலில், டாக்டர் எம்.ஜி.ஆர்., கல்வி மற்றும் ஆராய்ச்சி நிறுவனம் என்ற நிகர்நிலை பல்கலை இயங்கி வருகிறது.
இந்த நிறுவனம், 2025 - 26ம் ஆண்டுக்கான, ஏ.ஐ.சி.டி.இ., அங்கீகாரம் நீட்டிப்பு கடிதத்தை போலியாக உருவாக்கி, ஆன்லைன் வழி பி.பி.ஏ., - பி.சி.ஏ., படிப்புகள் நடத்த ஒப்புதல் பெற, பல்கலை மானியக்குழுவான யு.ஜி.சி.,யை நாடி உள்ளது.
ஆன்லைன் வழியாக, பி.பி.ஏ., - பி.சி.ஏ., படிப்புகளை நடத்த, இக்கல்வி நிறுவனத்துக்கு எந்தவித அனுமதியும் வழங்கப்படவில்லை.
யு.ஜி.சி.,யிடம் போலி ஆவணங்களை சமர்ப்பிப்பது தவறானது மற்றும் மோசடிக்கு சமம். இது, ஏ.ஐ.சி.டி.இ., விதிகளுக்கு எதிரானது மற்றும் தண்டனைக்குரியது.
எனவே, டாக்டர் எம்.ஜி.ஆர்., கல்வி மற்றும் ஆராய்ச்சி நிறுவனம் நடத்தும் அங்கீகாரமற்ற பி.பி.ஏ., மற்றும் பி.சி.ஏ., பாடங்களில் மாணவர்கள் சேர வேண்டாம்.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

