ADDED : நவ 09, 2025 02:10 AM
சென்னை: 'மாணவர் சேர்க்கையை ரத்து செய்த, மாணவ - மாணவியரின கல்வி கட்டணத்தை திரும்ப ஒப்படைக்காத கல்வி நிறுவனங்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும்' என, யு.ஜி.சி., எச்சரிக்கை விடுத்துள்ளது.
நாடு முழுதும் உள்ள உயர்கல்வி நிறுவனங்களில், இளநிலை, முதுநிலை பட்டப்படிப்பில் சேரும் மாணவ - மாணவியர், தங்கள் சேர்க்கையை குறிப்பிட்ட காலத்திற்குள் ரத்து செய்யும்போது, கல்வி கட்டணம் திரும்ப ஒப்படைக்கப்படும்.
அதற்கான கொள்கையை, யு.ஜி.சி., எனும் பல்கலை மானியக் குழு, சில ஆண்டுகளுக்கு முன் வெளியிட்டது. இந்த கொள்கை, கடந்த கல்வியாண்டுடன் காலாவதியானது.
இந்நிலையில், புதிய கொள்கை வகுக்கும் வரை, நடப்பு கல்வியாண்டில் அதே கொள்கையை பின்பற்ற, யு.ஜி.சி., அறிவுறுத்தி உள்ளது.
அதன்படி, கல்லுாரி சேர்க்கையை ரத்து செய்த மாணவ - மாணவியரின் கல்வி கட்டணத்தை, கல்லுாரி நிர்வாகங்கள் உடனடியாக திரும்ப ஒப்படைக்க வேண்டும். மாணவ - மாணவியரிடம் அசல் சான்றிதழ்களை பெறக்கூடாது.
இந்த விதிகளை மீறும் கல்வி நிறுவனங்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என, யு.ஜி.சி. எச்சரித்துள்ளது.

