கேலி, கிண்டலுக்கு முடிவு வரப்போகுது; பிரிட்டீஷ் போர் விமானம் அடுத்த வாரம் தாய்நாட்டுக்கு பறக்க போகுது!
கேலி, கிண்டலுக்கு முடிவு வரப்போகுது; பிரிட்டீஷ் போர் விமானம் அடுத்த வாரம் தாய்நாட்டுக்கு பறக்க போகுது!
ADDED : ஜூலை 11, 2025 09:38 AM

திருவனந்தபுரம்: ஜூன் 14ம் தேதி முதல் கேரளாவில் சிக்கித் தவிக்கும், ரூ.640 கோடி பிரிட்டீஷ் போர் விமானம், அடுத்த வாரம் தாய்நாட்டிற்குத் திரும்பக்கூடும் என தகவல் வெளியாகி உள்ளது. இதனால் கேலி, கிண்டல் முடிவுக்கு வரும் என கருதப்படுகிறது.
அரபிக்கடலில் கண்காணிப்பு பணியில் ஈடுபட்டிருந்த பிரிட்டீஷ் கடற்படையின் எப் 35 பி போர் விமானம், ஜூன் 14ம் தேதி திருவனந்தபுரம் விமான நிலையத்தில் அவசரமாக தரை இறங்கியது. எரிபொருள் பிரச்னையால் தரை இறங்கிய விமானம், எரிபொருள் நிரப்பிய நிலையில் பழுதாகி நின்று விட்டது. பல நாள் முயன்றும், வெளிநாட்டில் இருந்து பொறியாளர்கள் வந்து முயற்சித்தும் பறக்க வைக்க முடியவில்லை.
கேலி, கிண்டல்
பழுதான நிலையில், திருவனந்தபுரம் விமான நிலையத்தில் நிறுத்தப்பட்டிருக்கும்,
ரூ.640 கோடி பிரிட்டீஷ் கடற்படை போர் விமானம், இணையத்தில் நெட்டிசன்களின் கேலி கிண்டலுக்கு ஆளானது. போர் விமானத்தின் படத்தை வெளியிட்டு தாறுமாறாக விமர்சித்து இருந்தனர். இது பிரிட்டன் அரசுக்கு அவமானமாக கருதப்பட்டது.
இதையடுத்து பழுதாகி நிற்கும், விமானத்தை ஆய்வு செய்வதற்காக, பிரிட்டீஷ் விமானப்படையின் பொறியாளர்கள் 24 பேர் கொண்ட குழு, திருவனந்தபுரம் வந்துள்ளது.ஒரு வழியாக, விமான நிலையத்தின் ஓடுபாதை அருகே நிறுத்தப்பட்டிருந்த அந்த விமானம், பழுது பார்க்கும் ஹேங்கருக்கு கொண்டு செல்லப்பட்டது.
விமானத்தில் பழுதுபார்க்கும் பணிகள் நடந்து வருகின்றன. தற்போது, கேரளாவில் சிக்கித் தவிக்கும் பிரிட்டீஷ் போர் விமானம், அடுத்த வாரம் தாய்நாட்டிற்குத் திரும்பக்கூடும் என தகவல் வெளியாகி உள்ளது. “ஹைட்ராலிக் கோளாறு காரணமாக ஏற்பட்ட தொழில்நுட்பக் கோளாறை சரிசெய்ய பிரிட்டீஷ் பொறியாளர்கள் குழு தற்போது பணியாற்றி வருகின்றனர்,
அடுத்த சில நாட்களில் பிரிட்டீஷ் போர் விமானம் பறக்கத் தகுதியான நிலைக்குத் திரும்பும். அடுத்த வாரம் தாய்நாட்டிற்குத் திரும்பக்கூடும்' என பெயர் வெளியிட விரும்பாத இந்திய அதிகாரி ஒருவர் கூறியதாக செய்தி நிறுவனம் தெரிவித்துள்ளது. இதனால் கேலி, கிண்டல் முடிவுக்கு வரும் என கருதப்படுகிறது.