மக்களை தேடி மருத்துவம் திட்டத்திற்கு ஐ.நா., விருது
மக்களை தேடி மருத்துவம் திட்டத்திற்கு ஐ.நா., விருது
ADDED : நவ 08, 2024 11:03 PM
சென்னை:'மக்களை தேடி மருத்துவம்' திட்டத்திற்கு ஐ.நா., விருது; உணவு பாதுகாப்புத் துறைக்கு, மத்திய அரசு விருது என, இரண்டு விருதுகளை, மக்கள் நல்வாழ்வு துறை பெற்றுள்ளது.
தமிழகத்தில், 2021 ஆகஸ்ட், 5ல், மக்களை தேடி மருத்துவ திட்டம் செயல்படுத்தப்பட்டது.
இதில், 18 வயதிற்கு மேற்பட்டோருக்கு, உயர் ரத்த அழுத்தம் மற்றும் நீரிழிவு நோய்க்கான பரிசோதனை நடத்தப்படுகிறது.
மேலும், 45 வயதுக்கு மேற்பட்டோர் மற்றும் இயலாமையில் உள்ள நபர்களுக்கு, தொற்றா நோய்க்கான மருந்து பெட்டகம் வழங்கப்படுகிறது.
அத்துடன், இயன்முறை சிகிச்சை, நோய் ஆதரவு சிகிச்சை, 'டயாலிஸிஸ் பேக்' போன்றவையும் வழங்கப்படுகின்றன.
இத்திட்டத்தில், 4.23 கோடி பேர் தொடர் சேவை பெற்று வருகின்றனர்.
இந்நிலையில், அமெரிக்காவில் உள்ள நியூயார்க்கில், கடந்த செப்டம்பரில் நடந்த, 79வது ஐ.நா., பொது சபையின், 'லெவன்த் பிரண்ட்ஸ் ஆப் தி டாஸ்க் போர்ஸ்' கூட்டத்தில், மக்களை தேடி மருத்துவம் திட்டத்திற்கு விருது வழங்கப்பட்டது.
அதேபோல, டில்லியில் மத்திய உணவு பாதுகாப்பு மற்றும் தர நிர்ணய ஆணையத்தால் நடத்தப்பட்ட நிகழ்ச்சியில், 2023 - 24ம் ஆண்டுக்கான, மாநில உணவு பாதுகாப்பு குறியீட்டிற்கான செயல்பாட்டில், இந்திய அளவில் தமிழகம் இரண்டாம் இடம் பிடித்து விருது பெற்றது.
இரண்டு விருதுகளையும், நேற்று தலைமை செயலகத்தில், முதல்வர் ஸ்டாலினிடம் வழங்கி, மக்கள் நல்வாழ்வுத் துறை அமைச்சர் சுப்பிரமணியன் வாழ்த்து பெற்றார். தலைமைச் செயலர் முருகானந்தம், மக்கள் நல்வாழ்வுத் துறை செயலர் சுப்ரியா சாஹு உடனிருந்தனர்.