மக்கள் பிரச்னைக்காக போராட்டம் நடத்த முடியவில்லை: முத்தரசன்
மக்கள் பிரச்னைக்காக போராட்டம் நடத்த முடியவில்லை: முத்தரசன்
ADDED : டிச 12, 2024 07:57 PM
தஞ்சாவூர்,:தஞ்சாவூர் மாவட்டம் கும்பகோணத்தில் நேற்று இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில நிர்வாகக் குழு மற்றும் மாநிலக் குழு கூட்டம் நடந்தது. இதில் கலந்து கொண்ட அக்கட்சியின் மாநிலச் செயலர் முத்தரசன் அளித்த பேட்டி:
இந்த நாட்டை சூறையாட அதானி போன்றவர்கள், பிரதமர் மோடி அரசை தவறாக பயன்படுத்துகின்றனர். மோடி அரசும் அதானி போன்றவர்களுக்கு ஆதரவாக உள்ளது. நாட்டை அதிலிருந்து மீட்க வேண்டும். ஜாதி, மதவாதத்தை பின்பற்றி ஆட்சி நடத்தும் மோடி அரசு அதை கைவிட வேண்டும்.
மின்சார கட்டண உயர்வு, வீட்டு வரி உயர்வு, சொத்து வரி உயர்வு எல்லாம் ஆண்டுக்கு 6 சதவீதம் உயர்த்த வேண்டும் என தமிழக அரசை மட்டுமல்ல, அனைத்து மாநில அரசுகளுக்கும் மத்திய அரசு கெடுபிடி விதித்து, கழுத்தை நெறிப்பதாலேயே தமிழகத்தில் பல விஷயங்களுக்கு கட்டணத்தை அரசு உயர்த்தி இருக்கிறது. இது பொது மக்களுக்கு பெரும் பாதிப்பை ஏற்படுத்தி இருக்கிறது. தொழில்கள் பாதிக்கப்பட்டுள்ளன.
இந்த விஷயத்திலும் தமிழக அரசு, மத்திய அரசை எதிர்த்து போராட வேண்டும்.
தமிழகத்தில் மக்கள் பிரச்னைகளுக்காகக்கூட போராட முடியவில்லை. போராட்டம், ஆர்ப்பாட்டம், ஊர்வலம் நடத்துவதற்கு போலீசார் அனுமதி மறுக்கின்றனர். இதனால், அரசு மீது கடும் அதிருப்தி ஏற்பட்டுள்ளது.
போராட்டம் என்பது அரசுக்கு எதிரானது அல்ல; அரசின் கவனத்தை ஈர்ப்பதற்காக நடத்தப்படும் வழிமுறைகளில் ஒன்று அவ்வளவுதான். போராட்டம் நடத்த விடாமல் நெருக்கடி கொடுப்பதும் ஜனநாயக விரோத போக்குதான். இதை முதல்வர் கவனத்துக்கு எடுத்துச் செல்லப் போகிறோம்.
வரும் பொங்கலுக்குள் கும்பகோணத்தை அரசு, மாவட்ட தலைநகராக அறிவிக்க வேண்டும்.
இவ்வாறு அவர் கூறினார்.

