நிபந்தனையின்றி நெல் கொள்முதல்: இ.பி.எஸ்., வலியுறுத்தல்
நிபந்தனையின்றி நெல் கொள்முதல்: இ.பி.எஸ்., வலியுறுத்தல்
ADDED : ஜன 20, 2025 06:27 AM

சென்னை : 'பனி மற்றும் மழையால் பாதிக்கப்பட்ட நெல் மூட்டைகளை, நேரடி நெல் கொள்முதல் நிலையங்களில், நிபந்தனையின்றி கொள்முதல் செய்ய வேண்டும்' என, அ.தி.மு.க., பொதுச்செயலர் பழனிசாமி வலியுறுத்தி உள்ளார்.
அவரது அறிக்கை:
நடப்பாண்டு துவக்கத்தில் இருந்தே, தமிழகம் முழுதும், கடும் பனி பெய்து வருகிறது. இதனால், டெல்டா மாவட்டங்களில், அறுவடைக்கு தயாராக இருந்த, சம்பா நெற்பயிர்களில், நெல் மணிகள் ஈரப்பதம் அதிகரித்து, கனம் தாங்காமல் சாய்ந்து விட்டன.
இந்நிலையில், நான்கு நாட்கள் வரை கன மழை பெய்யும் என, வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
நேற்று முன் தினம் இரவு முதல், தமிழகம் முழுதும் பரவலாக மழை பெய்து வருகிறது. தஞ்சாவூர், திருவாரூர், நாகப்பட்டினம், மயிலாடுதுறை உள்ளிட்ட அனைத்து மாவட்டங்களிலும், மழைப் பொழிவின் காரணமாக, அறுவடைக்கு தயாராக இருந்த நெற்பயிர்கள், பெரும் பாதிப்புக்கு உள்ளாகி உள்ளன.
ஏற்கனவே, பனிப் பொழிவின் காரணமாக, நெல் மணிகள் பாதிக்கப்பட்ட நிலையில், நேற்று முதல் பெய்து வரும் மழையாலும், ஆயிரக்கணக்கான ஏக்கரில், அறுவடைக்கு தயாராக இருந்த, சம்பா நெற்பயிர்கள் பெரும் பாதிப்பிற்கு உள்ளாகி உள்ளன.
அறுவடை செய்து, நேரடி நெல் கொள்முதல் நிலையங்களுக்கு கொண்டு செல்லப்பட்ட நெல் மூட்டைகள், உடனுக்குடன் கொள்முதல் செய்யப்படாததால், பனி மற்றும் மழையில் நனைந்து, ஈரப்பதம் உள்ளதாக இருக்கின்றன.
எனவே, நேரடி நெல் கொள்முதல் நிலையங்களில், எந்தவித நிபந்தனையும் இல்லாமல், விவசாயிகள் கொண்டு வரும் அனைத்து நெல் மூட்டைகளையும், கொள்முதல் செய்ய வேண்டும்.
தற்போது, 17 சதவீதம் ஈரப்பதம் உள்ள நெல்லை கொள்முதல் செய்யும் நிலையில், 22 சதவீதம் வரை ஈரப்பதம் கொண்ட நெல்லை, கொள்முதல் செய்ய நடவடிக்கை எடுக்க வேண்டும்.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.