உலக பாரம்பரிய சின்னமாகுமா செஞ்சிக்கோட்டை: 27ல் யுனெஸ்கோ குழுவினர் ஆய்வு
உலக பாரம்பரிய சின்னமாகுமா செஞ்சிக்கோட்டை: 27ல் யுனெஸ்கோ குழுவினர் ஆய்வு
ADDED : செப் 21, 2024 04:39 PM

விழுப்புரம்: விழுப்புரத்தில் உள்ள செஞ்சி கோட்டையை, யுனெஸ்கோ அமைப்பினர் வரும் 27ம் தேதி நேரில் ஆய்வு செய்ய உள்ளனர்.
நடப்பு 2024- 25ம் ஆண்டில் இந்தியாவில் செஞ்சி கோட்டை உட்பட 12 இடங்களை உலக பாரம்பரிய சின்னமாக அறிவிக்க வேண்டும் என யுனெஸ்கோ அமைப்பிற்கு மத்திய அரசு பரிந்துரை செய்துள்ளது. இந்த பரிந்துரையில் தமிழகத்தில் இருந்து செஞ்சி கோட்டை மட்டுமே இடம்பெற்றுள்ளது.
இதனையடுத்து யுனெஸ்கோ அமைப்பினர் மற்றும் நினைவுச்சின்னங்கள் மற்றும் தலங்களுக்கான சர்வதேச ஆணைய உறுப்பினர்கள் அடங்கிய குழுவினர் வரும் 27ம் தேதி செஞ்சிக்கோட்டையை நேரில் வந்து ஆய்வு செய்து அறிக்கை அளிக்க உள்ளனர். இதன் அடிப்படையில் செஞ்சிக்கோட்டையை உலக பாரம்பரிய சின்னமாக யுனெஸ்கோ அறிவிக்கும்.
இது தொடர்பாக தொல்லியல் துறை அதிகாரி ஒருவர் கூறுகையில், இயற்கை, கலை மற்றும் பாரம்பரியத்திற்கான வளர்ச்சி மற்றும் ஆராய்ச்சி அமைப்பு(DRONAH) செஞ்சி கோட்டையை பாரம்பரிய சின்னமாக அறிவிக்க வேண்டும் என பரிந்துரை செய்தது. யுனெஸ்கோ அமைப்பின் பரிந்துரைப்படி இதற்கான ஆவணங்கள் தயார் செய்யப்பட்டன.
யுனெஸ்கோ அணைய குழுவினர் கோட்டையின் வரலாற்று முக்கியத்துவத்தை உணர்ந்து உலக பாரம்பரிய சின்னமாக அறிவிக்க பரிந்துரை செய்வார்கள் என்ற நம்பிக்கை உள்ளது. இது கிடைத்தால் செஞ்சி கோட்டை ஏராளமான சுற்றுலா பயணிகளை ஈர்க்கும். இவ்வாறு அவர் கூறினார்.