இந்த ஆண்டு மறக்க முடியாத நிகழ்வுகள்; துல்லியமான சிறப்பு அலசல்; முழு லிஸ்ட் இதோ!
இந்த ஆண்டு மறக்க முடியாத நிகழ்வுகள்; துல்லியமான சிறப்பு அலசல்; முழு லிஸ்ட் இதோ!
UPDATED : டிச 30, 2024 01:31 PM
ADDED : டிச 30, 2024 12:51 PM

புதுடில்லி: நடப்பு 2024ம் ஆண்டு நாளையுடன் நிறைவு பெறுகிறது. இந்தாண்டு மறக்க முடியாத நிகழ்வுகள் குறித்து சிறப்பு அலசல் செய்யப்பட்டது.

ஆண்டு துவங்கும் போது, இந்தாண்டு சிறப்பாக இருக்க வேண்டும் என்பது அனைவரது விருப்பம். நடப்பு 2024ம் ஆண்டு நாளையுடன் (டிச.,31) முடிவடைகிறது. நாளை மறுநாள் ஜனவரி 1ம் தேதி அடுத்த ஆண்டு 2025ல் கால் எடுத்து வைக்கிறோம். இந்த சூழலில் நடப்பாண்டில் மறக்க முடியாத நிகழ்வுகள் குறித்து சிறப்பு அலசல் செய்யப்பட்டது. அதன் விபரம் பின்வருமாறு:
துக்க நிகழ்வுகள்!

* கள்ளக்குறிச்சி மாவட்டம், கருணாபுரத்தில், ஜூன் மாதம் 18ம் தேதி, மெத்தனால் கலந்த கள்ளச்சாராயம் குடித்ததால் உடல்நலம் பாதிக்கப்பட்ட 193 பேர் மருத்துவமனைகளில் அனுமதிக்கப்பட்டனர். அவர்களில் 67 பேர் உயிரிழந்தனர்.

* பகுஜன் சமாஜ் கட்சியின் மாநில தலைவராக இருந்த ஆம்ஸ்ட்ராங் கடந்த ஜூலை 5ம் தேதி பெரம்பூரில் வெட்டி படுகொலை செய்யப்பட்டார். இக்கொலை சம்பவம் நாடு முழுவதும் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியது. இந்த வழக்கில், கைது செய்யப்பட்ட 28 பேர் மீதும் போலீசார் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்துள்ளனர்.

* ஜூலை 30ம் தேதி, வயநாடு மாவட்டத்தில் மலைப்பகுதியில் அமைந்துள்ள சூரல்மலை, முண்டக்கை பகுதிகளில் கடுமையான நிலச்சரிவு ஏற்பட்டது. இந்த நிலச்சரிவில் சிக்கி, 300க்கும் அதிகமானோர் உயிரிழந்தனர்.

* மைசூரில் இருந்து புறப்பட்டு வந்து கொண்டிருந்த பாக்மதி எக்ஸ்பிரஸ் ரயில் திருவள்ளூர் மாவட்டம் கவரைப்பேட்டை ரயில் நிலையம் அருகே அக்.11ம் தேதி விபத்துக்குள்ளானது. 30க்கும் மேற்பட்டோர் பலத்த காயம் அடைந்தனர்.

* அக்., 9ம் தேதி, மஹாராஷ்டிராவின் மும்பையில் வசித்து வந்த பிரபல தொழிலதிபரும், டாடா குழுமத்தின் முன்னாள் தலைவருமான ரத்தன் டாடா, 86, உடல்நலக்குறைவால், காலமானார்.

* தமிழகத்தில் நவம்பர் 30ம் தேதி, பெஞ்சல் புயலின் காரணமாக பரவலான மற்றும் கடுமையான மழைப்பொழிவு தமிழகத்தின் வடமாவட்டங்களில் கொட்டி தீர்த்தது. குறிப்பாக, விழுப்புரம், கள்ளக்குறிச்சி, கடலூர் ஆகிய மாவட்டங்களில் இதன் தாக்கம் மிக அதிகமாக இருந்தது.

* டிசம்பர் 27ம் தேதி முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங் உடல்நலக்குறைவால் காலமானார். 21 குண்டுகள் முழங்க ராணுவ மரியாதையுடன் அவரது உடல் தகனம் செய்யப்பட்டது.

* அஜர்பைஜான் நாட்டு பயணிகள் விமானம் கஜகஸ்தான் மீது பறந்தபோது, விழுந்து நொறுங்கியது. அதில் சென்ற பயணிகளில் 38 பேர் உயிரிழந்தனர். 29 பேர் காயங்களுடன் மீட்கப்பட்டனர்.

* தாய்லாந்தின் பாங்காக்கில் இருந்து, 175 பயணிகள், 6 ஊழியர்கள் என 181 பேருடன் தென்கொரியாவுக்கு புறப்பட்ட பயணியர் விமானம், அந்நாட்டின் முவான் விமான நிலையத்தில் தரையிறங்கும் போது, ஓடுபாதையில் இருந்து விலகி, கான்கிரீட் தடுப்புச் சுவர் மீது மோதி விபத்துக்கு உள்ளானதில், 179 பேர் உயிரிழந்தனர்.
2024ல் கவிழ்ந்த அரசுகள்!

* வங்கதேசத்தின் முன்னாள் பிரதமர் ஆன 77 வயதான ஷேக் ஹசீனா, மாணவர்கள் போராட்டங்களால் ஆட்சியை இழந்து, நாட்டை விட்டு வெளியேறினார். கடந்த ஆகஸ்ட் 5 முதல் இந்தியாவில் தஞ்சம் அடைந்து வாழ்ந்து வருகிறார்.
* பிரான்ஸ் நாட்டில் மூன்று மாதங்களுக்கு முன் பதவியேற்ற மைக்கேல் பார்னியர் தலைமையிலான அரசுக்கு எதிர்க்கட்சிகள் கோர்க்கொடி தூக்கினர். இதனால் பிரான்சில் ஆட்சி கவிழ்ந்தது.
* ஐரோப்பிய நாடான ஜெர்மனியில் 'தி கிரீன்ஸ்' மற்றும் சுதந்திர ஜனநாயக கட்சியுடன் கூட்டணி அமைத்து சோஷியல் ஜனநாயக கட்சி ஆட்சி அமைத்தது. ஜெர்மனியின் பார்லிமென்டை திடீரென கலைக்க உத்தரவிட்ட அந்நாட்டு அதிபர் பிராங்க் வால்டர் ஸ்டெயின்மியர், அடுத்த ஆண்டு பிப்ரவரியில் தேர்தல் நடக்கவுள்ளதாக அறிவித்துள்ளார்.

* சிரியாவில் 50 ஆண்டு கால ஆசாத் குடும்ப ஆட்சி கவிழ்ந்தது. ஹயாத் தஹ்ரிர் அல்-ஷாம் தலைமையிலான கிளர்ச்சிக் குழு ஆட்சியை கைப்பற்றியது.
டாப் 10 அரசியல் நிகழ்வுகள்

* ஏப்ரல் 19ம் தேதி முதல் ஜூன் 1ம் தேதி வரை ஏழு கட்டங்களாக சட்டசபை தேர்தல் நடந்தது. லோக்சபா தேர்தலில் பா.ஜ., தலைமையிலான தே.ஜ., கூட்டணி அபார வெற்றி பெற்றது. மோடி 3வது முறையாக பிரதமர் ஆனார். இதனால் பிரதமர் மோடி ஹாட்ரிக் அடித்தார்.
* லோக்சபா தேர்தலில், தனது குடும்ப கோட்டையான ரேபரேலி தொகுதியில் ராகுல் வெற்றி பெற்றார்.
*மஹாராஷ்டிரா சட்டசபை தேர்தல் முடிவுகள் அரசியல் வல்லுனர்கள் மத்தியில் ஆச்சரியத்தை ஏற்படுத்தியது. லோக்சபா தேர்தலில், அதிக இடங்களில் தோல்வி அடைந்த பா.ஜ., சட்டசபை தேர்தலில் அபார வெற்றி பெற்றது.
* 10 ஆண்டுகளுக்கு பிறகு நடந்த, ஜம்மு காஷ்மீர் சட்டசபை தேர்தலில், தேசிய மாநாட்டு கட்சி வெற்றி பெற்றது. உமர் அப்துல்லா முதல்வர் ஆனார்.
*ஹரியானா சட்டசபை தேர்தலில் கருத்துக்கணிப்புகளை பொய்யாக்கி, பா.ஜ., ஆட்சியை தக்க வைத்து கொண்டது.
* செப்டம்பர் 17ம் தேதி அரவிந்த் கெஜ்ரிவால் முதல்வர் பதவியை ராஜினாமா செய்தார். அதிஷி முதல்வர் ஆனார்.
*ஊழல் வழக்கில் சிறையில் அடைக்கப்பட்ட, முதல்வர் ஹேம்ந்த் சோரன் ஜார்க்கண்ட் மாநில சட்டசபை தேர்தலில் அபார வெற்றி பெற்று முதல்வர் ஆனார்.

* வயநாடு இடை த்தேர்தலில் வெற்றி பெற்று பிரியாங்கா எம்.பி.,ஆனார். அவர் நேரு- காந்தி குடும்பத்தின் மற்றொரு எம்.பி.,யாக உருவெடுத்தார்.
*நவீன் பட்நாயக் ஒடிசாவில் முக்கிய அரசியல்வாதியாக இருந்தார். ஆனால் சட்டசபை தேர்தலில் தோல்வி அடைந்து, முதல்வர் பதவியை இழந்தார்.
தமிழக அரசியல் மாற்றங்கள்!
* கடந்த மார்ச் 12ம் தேதி, அகில இந்திய சமத்துவ கட்சி நடத்தி வந்த சரத்குமார், தனது கட்சியை பா.ஜ.,வுடன் இணைத்து கொண்டார்.

* 2024ம் ஆண்டு லோக்சபா தேர்தலுக்கான கூட்டணியில் தி.மு.க.,வுடன், மக்கள் நீதி மய்யம் கட்சி கை கோர்த்தது.

* நடிகர் விஜய் அரசியலுக்கு கால் பதித்தார். அக்டோபர் 27ம் தேதி, முதல் தமிழக வெற்றிக் கழக மாநாட்டை விஜய் நடத்தினார். கட்சி கொடி, சின்னம் ஆகியவற்றை அறிமுகம் செய்து, 2026ம் ஆண்டு சட்டசபை தேர்தலில் போட்டியிட விஜய் தயாராக உள்ளார்.

* அமைச்சர் உதயநிதிக்கு துணை முதல்வர் கொடுத்து முதல்வர் ஸ்டாலின் உத்தரவிட்டார். அமைச்சரவையில் மாற்றம் செய்யப்பட்டது. தற்போது தமிழகத்தின் துணை முதல்வராக உதயநிதி பதவி வகிக்கிறார்.
![]() |
விளையாட்டு...!
சென்னையை சேர்ந்த கிரிக்கெட் வீரர் தான் அஸ்வின். இவருக்கு வயது 38. டிசம்பர் 18ம் தேதி சர்வதேச கிரிக்கெட்டில் இருந்து ஓய்வு பெறுவதாக அறிவித்தார்.


