மத்திய பட்ஜெட்; தொழில்துறையினர், பொதுமக்கள் என்ன சொல்கிறார்கள்?
மத்திய பட்ஜெட்; தொழில்துறையினர், பொதுமக்கள் என்ன சொல்கிறார்கள்?
UPDATED : பிப் 06, 2026 05:34 PM
ADDED : பிப் 02, 2026 07:59 AM

மத்திய பட்ஜெட் குறித்து கலவையான கருத்துக்களை நம்முடன் பகிர்ந்து கொண்டனர், கோவையின் சில தொழில்முனைவோர்.
ஐ.சி.ஏ.ஐ.,கோவை துணைத் தலைவர் சுர்வஜித் கிருஷ்ணன் கூறியதாவது: நீண்டகால கட்டமைப்பு சீர்திருத்தங்களுக்கும், அடிப்படை வசதி மேம்பாட்டுக்கும், தொழில் வளர்ச்சிக்கும் முக்கியத்துவம் அளிக்கும் பட்ஜெட். வருமான வரி சட்ட எளிமைப்படுத்தல், அபராதங்களுக்கு பதிலாக கட்டண முறை, சிறிய தவறுகளுக்கு குற்றவியல் தண்டனை நீக்கம் உள்ளிட்டவை வரி செலுத்துநர்களின் சுமை, வழக்குகள் மற்றும் தேவையற்ற தணிக்கைகளை குறைக்கும். இதனால் தொழில்கள் மற்றும் நிபுணர்களுக்கு தெளிவான, நம்பிக்கையூட்டும் வரிச் சூழல் உருவாகும்.
கோவையைப் பொறுத்தவரை, எம்.எஸ்.எம்.இ.,க்கு பெரிய பலன் கிடைக்கும். சிறு தொழில்களின் பணப்புழக்க சிக்கல் தீரும். உள்ளூர் தொழில்கள் விரிவாக்கம், நவீனமயமாக்கல் மற்றும் வேலைவாய்ப்பு உருவாக்கம் ஆகியவை எளிதாகும். திருப்பூர்-கோவை-ஈரோடு ஜவுளி கேந்திரத்துக்கு இந்த பட்ஜெட் பேரூக்கம் தரும். ஜவுளித் துறைக்கு உலகளாவிய போட்டித்திறன் அதிகரிக்கும். இந்த பட்ஜெட் சலுகைகளை விட நிலையான வளர்ச்சிக்கும், சிக்கல்களை விட எளிமைக்கும் முன்னுரிமை அளிக்கிறது. கோவையின் எம்.எஸ்.எம்.இ., துணிநூல் மற்றும் உற்பத்தித் துறைகளுக்கு முக்கியமான வளர்ச்சி வாய்ப்புகளை உருவாக்கும்.
நிதி மற்றும் மூலதன உதவி, பணப்புழக்க ஆதரவு, தொழில்முறை ஆதரவு, உள்கட்டமைப்பு மற்றும் கிளஸ்டர் மேம்பாடு, மகாத்மா காந்தி கிராம ஸ்வராஜ், விளையாட்டுப் பொருட்கள் உற்பத்தி போன்ற அறிவிப்புகள் அனைத்தும் சிறு மற்றும் குறுந்தொழில் நிறுவனங்களை நாட்டின் பொருளாதார வளர்ச்சியின் முக்கிய இயந்திரமாக மாற்றுவதை நோக்கமாகக் கொண்டுள்ளன. - திருமலை ரவி, தலைவர், கோஜிம்வா
ஜவுளித்துறை திட்டங்களால் தமிழகத்துக்கு பயன்கள் கிடைக்கும். மாநில அரசு இணைந்து செயல்பட்டால் பெரிய வளர்ச்சியைக் காண முடியும். வயது முதிர்ந்தோர் எண்ணிக்கை தமிழகத்தில் அதிகரித்து வரும் நிலையில், அவர்கள் நலனுக்கான திட்டம் பெரும் வரவேற்புக்குரியது. மாநகராட்சி போன்ற உள்ளாட்சி அமைப்புகள் தங்கள் திட்டங்களுக்காக பத்திர வெளியீட்டில் நிதி திரட்டும் திட்டம் பெரிய அளவில் ஊக்குவிக்கும். 5 கல்வி மண்டலங்களில் தமிழகத்துக்கு ஒன்றை எதிர்பார்க்கிறோம். - பாலசுந்தரம், முன்னாள் தலைவர், வர்த்தக சபை, கோவை
வருமான வரிதாக்கல் வழிமுறைகள் எளிமையாக்கப்படும் அறிவிப்பை வரவேற்கிறோம். தொழில் வளர்ச்சிக்கு ஆதாரமான மூலப்பொருட்கள் சீரான விலையில் கிடைப்பதற்கான அறிவிப்பு இல்லை. வங்கி வட்டி விகிதங்களில் மாற்றம் இல்லை. எம்.எஸ்.எம்.இ., வளர்ச்சிக்கு பிரத்யேக அறிவிப்புகள் இல்லை. முத்ரா கடன், குறுந்தொழில்களுக்கு தனி வங்கிக் கிளை தேவை போன்ற தொழில்முனைவோரின் கோரிக்கைகள் குறித்த அறிவிப்பு இல்லை. மூலப்பொருள் வாங்க கடன் அட்டை வழங்கப்படும் என்ற அறிவிப்பு இதுவரை செயல்படுத்தாதது ஏமாற்றமாக உள்ளது. - சிவகுமார், தலைவர், காட்மா
சிறு மற்றும் நடுத்தர தொழில்களுக்கு ரூ.10 ஆயிரம் கோடி என்பதும், குறுந்தொழில்களுக்கு ரூ.2,000 கோடி ஒதுக்கீடு என்பதும் வரவேற்கத்தக்கது. ஆனால், போதுமானதாக இல்லை. பெண் தொழில்முனைவோர்க்கான ஷீமார்க் திட்டத்தை வரவேற்கிறோம். காப்பர், இரும்பு போன்ற மூலப்பொருட்களின் விலை உயர்வைக் கட்டுப்படுத்த எவ்வித நேரடி நடவடிக்கையும் அறிவிக்கப்படாதது எம்.எஸ்.எம்.இ.,களுக்கு ஏமாற்றம். - தேவகுமார், தலைவர், சியா.
பெண்கள் கல்வியை ஊக்குவிக்கும் வகையில், நாட்டில் ஒவ்வொரு மாவட்டத்திலும் உயர் தரத்தில் மக ளிர் விடுதிகள் அமைக்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது, வரவேற்கத் தக்கது. தொழில்நுட்ப ஆர்வமுள்ள மாணவர்களின் நலன் கருதி, 15 ஆயி ரம் பள்ளிகள், 500 கல்லுாரிகளில், கன்டென்ட் கிரி யேட்டர் லேப்ஸ் அமைக்கப்படும் என்ற அறிவிப்பு, மாணவர்களின் திறனை இன்னும் மேம்படுத்தும். -ராஜேஷ், பாப்பநாயக்கன் பாளையம்
மாநிலங்களின் வளர்ச்சிக்கு நிதி ஆணையத்தின் கீழ், ரூ.1.4 லட்சம் கோடி மானியம் வழங்க, பட்ஜெட்டில் நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளதால், தமிழகம் உள்ளிட்ட மாநிலங்களுக்கு தடையற்ற நிதி கிடைக்கும். இதன் வாயிலாக பல்வேறு திட்டங்களை செயல்படுத்த உதவியாக இருக்கும். மாவட்டம் தோறும் பெண்களுக்கு விடுதி அமைக்கப்படுவதால், பணிபுரியும் பெண்களுக்கு உதவியாக இருக்கும்.- கவுதமன், வீரகேரளம்
பாரம்பரிய தொழில்களை ஊக்கு விக்க தனி பூங்காங்கள், புதிய மெகா ஜவுளி பூங்காக்கள்,சிறு, குறு தொழில் நிறுவனங்களை ஊக்குவிக்க, ரூ.10 ஆயிரம் கோடி நிதி ஒதுக்கீடு, காதி மற்றும் கைத் தறித் தொழில்களை வலுப்படுத்த, 'மகாத்மா காந்தி கிராம சுயராஜ்ய முன்னெடுப்பு திட்டம் உள்ளிட்ட பல நல்ல திட்டங்கள் இந்த பட்ஜெட்டில் உள்ளன. - இளங்கோவன், வீரகேரளம்
இந்த பட்ஜெட்டில், 17 வகையான புற்றுநோய் மருந்துகளுக்கு சுங்கவரி விலக்கு அளிக்கப் பட்டு இருப்பது, நல்ல விஷயம். உயிர் காக்கும் மருந்துகளை உற்பத்தி செய்யும் மையமாக இந்தியாவை மேம்படுத்த, 10 ஆயிரம் கோடியில் 'பயோ பார்மா சக்தி' திட்டம் இவை எல்லாம் இந்த பட்ஜெட்டில் வரவேற்கலாம்.-ஆசை தம்பி, துடியலுார்

