இந்தியா -- ரஷ்யா இடையே கிழக்கு கடல்சார் வர்த்தகம் மத்திய அமைச்சர் நம்பிக்கை
இந்தியா -- ரஷ்யா இடையே கிழக்கு கடல்சார் வர்த்தகம் மத்திய அமைச்சர் நம்பிக்கை
ADDED : ஜன 25, 2024 01:04 AM

சென்னை:''இந்தியா -- ரஷ்யா கடல்சார் வர்த்தகத்தில், மேற்கு கடல் வழித்தடத்தை விட, கிழக்கு கடல் வழித்தடத்தில், 40 சதவீதம் பயண துாரம் குறையும்,'' என, மத்திய கப்பல் மற்றும் நீர்வழி போக்குவரத்து துறை அமைச்சர் சர்பானந்த சோனாவால் கூறினார்.
இந்தியா- - ரஷ்யா இடையிலான கிழக்கு கடல்சார் வழித்தடத்தை மேம்படுத்துவது குறித்த ஒரு நாள் கருத்தரங்கம், சென்னையில் நடந்தது.
கருத்தரங்கை துவக்கி வைத்து, அமைச்சர் சர்பானந்த சோனாவால் பேசியதாவது:
கடல்சார் வர்த்தகத்தில் இந்தியா பல மடங்கு முன்னேறி உள்ளது. கடல்சார் போக்குவரத்து கட்டமைப்பை நவீனப்படுத்தவும், துறைமுகங்களில் சுற்றுச்சூழல் மாசை தடுக்கவும், பல்வேறு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு உள்ளன.
இந்தியா- - ரஷ்யா இடையிலான கடல் மார்க்க வர்த்தகத்தின் பெரும்பகுதி, மேற்கு கடல் வழித்தடம் வழியாக நடந்து வருகிறது. இதற்கு மாற்றாக கிழக்கு கடல் வழித்தடம் வழியாக வர்த்தகத்தை, இரு நாடுகளும் இணைந்து மேற்கொள்ள உள்ளன.
இந்த வழித்தடம், கிழக்கு கடற்கரையில் உள்ள இரு நாட்டு துறைமுகங்களை இணைக்கிறது. மேற்கு கடல் வழித்தடத்தை விட, 40 சதவீதம் குறைந்த துாரம் உடையது; பயண நேரமும், 18 நாட்கள் குறையும்.
இதனால், கச்சா எண்ணெய், எரிவாயு, உரம், நிலக்கரி போன்ற சரக்குகளை கையாளும் செலவும், நேரமும் குறையும். இரு நாட்டின் வர்த்தக உறவும் மேம்படும். இதற்கு, இந்த கருத்தரங்கம் பெரும் உதவியாக இருக்கும்.
இவ்வாறு அவர் பேசினார்.
இந்நிகழ்ச்சியில், ரஷ்ய கூட்டமைப்பின் கலை துறைக்கான துணை அமைச்சர் அனடோலி யூரிவிச் போப்ராகோவ், மத்திய கப்பல் மற்றும் நீர்வழி போக்குவரத்து துறை செயலர் ராமச்சந்திரன், சென்னை துறைமுக தலைவர் சுனில்பாலிவால் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.