பொன்முடியின் மந்திரி பதவியை பறிங்க; மத்திய அமைச்சர் முருகன் வலியுறுத்தல்
பொன்முடியின் மந்திரி பதவியை பறிங்க; மத்திய அமைச்சர் முருகன் வலியுறுத்தல்
ADDED : ஏப் 15, 2025 03:22 AM

சென்னை : ''பெண்களை இழிவுப்படுத்தி பேசிய அமைச்சரை, அமைச்சரவையில் வைத்திருப்பது மிகப்பெரிய பாவம். உடனே, அவரை அமைச்சர் பதவியில் இருந்து நீக்க வேண்டும்,'' என, மத்திய அமைச்சர் முருகன் தெரிவித்தார்.
'ஒரே நாடு' இதழின் வெள்ளி விழா மலர் வெளியீட்டு விழா, சென்னை தி.நகரில் நேற்று நடந்தது. மத்திய அமைச்சர் முருகன் மலரை வெளியிட, தமிழக பா.ஜ., தலைவர் நயினார் நாகேந்திரன் பெற்றுக் கொண்டார்.
'ஒரே நாடு' இதழின் ஆசிரியர் நம்பி நாராயணன் பேசும் போது, ''வெள்ளி விழா மலரானது, வெள்ளி விழா மலர், ஆர்.எஸ்.எஸ்., நுாற்றாண்டு, 11ம் ஆண்டில் மோடி என, மூன்று பாகங்களாக வெளியாகி உள்ளது,'' என்றார்
நயினார் நாகேந்திரன் பேசியதாவது:
'நீட்' தேர்வு விலக்கு வராது என தெரிந்தும் தி.மு.க., அரசு, சட்டசபையில் தீர்மானம் நிறைவேற்றி மக்களை ஏமாற்றுகிறது. தி.மு.க., - காங்கிரஸ் கொண்டு வந்த, 'நீட்' தேர்வை, தற்போது, அக்கட்சிகளே வேண்டாம் என்கின்றன.
ஒரே நாடு, ஒரே தேர்தல் வந்தால், பா.ஜ., வெற்றி பெற்று விடும் என, தி.மு.க.,வுக்கு அச்சம். இதனால், ஒரே நாடு, ஒரே தேர்தலை எதிர்க்கிறது.
நாடு முழுதும் ஒன்றாக தேர்தலை நடத்தினால், அரசுக்கு செலவு மிச்சம். மக்களுக்கு திட்டங்களை விரைவாக செயல்படுத்த முடியும். கருணாநிதியே, ஒரே நாடு, ஒரே தேர்தல் வேண்டும் என, தெரிவித்துள்ளார்.
ஒரு நாடு செழிக்க, வேதங்கள் முழங்க வேண்டும். காலங்கள் செய்யாததை கிரகங்கள் செய்யும். அந்த கிரகங்கள், பா.ஜ.,வுக்கு சாதகமாக வருகின்றன.
பா.ஜ.,வின் சொத்து அண்ணாமலை. அவரை யாராலும் ஒன்றும் செய்ய முடியாது. தி.மு.க., ஆட்சியை துாக்கி எறிந்து, வரும் சட்டசபை தேர்தலில், தேசிய ஜனநாயக கூட்டணி ஆட்சி அமைக்கும்.
இவ்வாறு அவர் பேசினார்.
மத்திய அமைச்சர் முருகன் பேசியதாவது:
முதல்வராக இருப்பவர் அனைத்து சமூகத்தினரையும், மக்களையும் அரவணைத்து செல்ல வேண்டும். ஆயுத பூஜை, தீபாவளி தவிர, பிற நிகழ்ச்சிகளுக்கு சென்று கேக் வெட்டுவார். கஞ்சி குடிப்பார். எங்களின் விழாக்களுக்கும் வாழ்த்துச் சொல்லுங்கள் என்பது தான் மக்களின் எண்ணமாக இருக்கிறது.
தி.மு.க., தலைவராக ஸ்டாலின், வாழ்த்து சொல்லாமல் போகலாம். ஆனால், முதல்வராக இருப்பவர், மக்களுக்கு வாழ்த்து சொல்வது கடமை. அப்படிப்பட்ட கடமையில் இருந்து மீறும் ஸ்டாலின், விரைவில் துாக்கி எறியப்படுவார்.
தி.மு.க., போலி சமூக நிதி பேசுகிறது. பெண்களை இழிவுப்படுத்தி பேசிய அமைச்சர் பொன்முடியை, அமைச்சரவையில் வைத்திருப்பது மிகப்பெரிய பாவம்.
உடனே, அமைச்சர் பதவியில் இருந்து அவரை நீக்க வேண்டும். வரும் சட்டசபை தேர்தலில், தி.மு.க., என்ற நரகாசுரனை அழிக்க வேண்டும்.
இவ்வாறு அவர் பேசினார்.