அரசு பணி மூலம் நாட்டின் வளர்ச்சிக்கு இளைஞர்களின் பங்களிப்பு அதிகரிக்கும்; மத்திய இணை அமைச்சர் பூபதிராஜூ பேச்சு
அரசு பணி மூலம் நாட்டின் வளர்ச்சிக்கு இளைஞர்களின் பங்களிப்பு அதிகரிக்கும்; மத்திய இணை அமைச்சர் பூபதிராஜூ பேச்சு
ADDED : டிச 24, 2024 03:24 AM

சிவகங்கை: இளைஞர்களுக்கு வேலைவாய்ப்பு வழங்குவதன் மூலம் நாட்டின் வளர்ச்சிக்கு அவர்களது பங்களிப்பை அதிகரிக்க செய்யலாம் என சிவகங்கை மாவட்டம் இலுப்பக்குடியில் நடந்த மத்திய அரசு பணிக்கான ஆணை (ரோஜ்கர் மேளா) வழங்கும் விழாவில் மத்திய இணை அமைச்சர் பூபதிராஜூ ஸ்ரீனிவாச சர்மா பேசினார்.
சிவகங்கை அருகே இலுப்பக்குடி இந்தோ திபெத் எல்லை போலீஸ் பயிற்சி படை மையத்தில் நடந்த 'ரோஜ்கர் மேளா' மூலம் 455 பேருக்கு ஸ்டீல் மற்றும் கனரக தொழிற்சாலை துறை மத்திய இணை அமைச்சர் பூபதிராஜூ ஸ்ரீனிவாச வர்மா மத்திய அரசு பணிகளில் சேர்வதற்கான பணி நியமன உத்தரவை வழங்கினார். பயிற்சி படை டி.ஐ.ஜி., அச்சல் சர்மா வரவேற்றார். மதுரை தபால்துறை உதவி இயக்குனர் எம்.பொன்னையா, தேனி கனரா வங்கி கோட்ட மேலாளர் ஆர்.ஜெயலட்சுமி, என்.ஐ.சி., (தேசிய தகவல் தொழில்நுட்பவியல்) இயக்குனர் ராஜகுரு பங்கேற்றனர்.
அமைச்சர் பேசியதாவது: இந்தியா தன்னிறைவு பெற்ற நாடாக மாறி வருகிறது. 10 ஆண்டில் அரசின் முயற்சியால் வேலைவாய்ப்பு ஒரு மைல்கல்லாக அமைந்துள்ளது. மத்திய அரசின் 30 க்கும் மேற்பட்ட அமைச்சகம், துறைகள் மூலம் பணி நியமனம் நடந்துள்ளது. இந்தியா 'மேக் இன் இந்தியா' மற்றும் பல துறைகளில் உலகளாவிய மையமாக மாறிவிட்டது. இறக்குமதியை நம்பி இருந்த துறைகள் இன்றைக்கு ஏற்றுமதியில் சாதனை படைக்கின்றன. ரயில் பெட்டிகள் முதல் சிறிய பொருட்கள் வரை அனைத்தும் நாட்டில் உற்பத்தி செய்யப்பட்டு புதிய வேலைவாய்ப்புகளை உருவாக்குகின்றன.
இந்தியா உற்பத்தி மையமாகவும், தகவல் தொழில்நுட்ப துறையில் தன்னை நிலை நிறுத்திகொள்கிறது. இதன் மூலம் இளைஞர்களுக்கு வேலைவாய்ப்பை உருவாக்கியது. இந்தியாவில் 2014 ல் புதுமையான தொழில் துவங்கும் திட்டம் (ஸ்டார்ட் அப்' இந்தியா) எண்ணிக்கை 350 ஆக இருந்து, இன்றைக்கு 1.27 லட்சமாக
உயர்ந்துள்ளது. ரோஜ்கர் திட்டம் மூலம் வேலைவாய்ப்பை உருவாக்க பிரதமர் மோடி அதிக முக்கியத்துவம் தருகிறார். வேலைவாய்ப்பை உருவாக்குவது தேசிய வளர்ச்சியில் இளைஞர்கள் பங்கேற்கும் வாய்ப்பை அதிகரிக்கும் என்றார்.