சமூக ஊடகங்களின் வருவாய்: மத்திய அமைச்சர் எச்சரிக்கை
சமூக ஊடகங்களின் வருவாய்: மத்திய அமைச்சர் எச்சரிக்கை
UPDATED : பிப் 27, 2026 04:42 AM
ADDED : பிப் 27, 2026 03:40 AM

புதுடில்லி: சமூக ஊடகங்கள், தங்கள் தளங்களில் பயனர்களால் வெளியிடப்படும் பதிவுகள் வாயிலாக கிடைக்கும் வருவாயை, அதை உருவாக்கியவர்களுடன் நியாயமாக பகிர்ந்துகொள்ளவில்லை என்றால் சட்டரீதியான நடவடிக்கைகள் எடுக்கப்படும் என்று, தகவல் தொழில்நுட்ப அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவ் எச்சரித்துள்ளார்.
டில்லியில் நேற்று நடந்த நிகழ்ச்சியில் அவர் பேசியதாவது:
சமூக ஊடக தளங்கள், பெரிய ஊடகங்கள் மட்டுமின்றி சாதாரண பதிவாளர்களின் ஊடக பணிகள் மற்றும் படைப்புகளின் வாயிலாகவும் கணிசமான வருவாய் ஈட்டுகின்றன. எனவே, அந்த வருவாயை அவை நியாயமாக அவற்றுடன் பகிர்ந்துகொள்ள வேண்டும். இதை, சமூக ஊடகங்கள் தாமாக முன்வந்து செய்ய வேண்டும். இல்லையெனில், அதை சட்ட வழியில் செய்ய வைப்போம்.
பொருளாதார மற்றும் கலாசார முன்னேற்றத்துக்கு அறிவுசார் சொத்து அடிப்படையாக இருந்து வருகிறது. அதை மதித்து, நியாயமாக சன்மானம் வழங்காமல் இருந்தால் சமூக வளர்ச்சி, அறிவியல், தொழில்நுட்பம், கலை, இலக்கியம் ஆகியவற்றின் வளர்ச்சி தடைபடும். இவ்வாறு அமைச்சர் கூறினார்.

