ADDED : நவ 04, 2024 02:54 AM

சென்னை: 'தமிழகத்தில் செயல்பட்டு வரும், 64 சுங்கச் சாவடிகள் உட்பட, தேசிய நெடுஞ்சாலைகள் ஆணையத்தின் கீழ் செயல்படும், அனைத்து சுங்கச்சாவடிகளையும் அகற்ற ஒன்றிணைய வேண்டும்' என, தி.மு.க., எம்.பி., வில்சன் அழைப்பு விடுத்துள்ளார்.
அவரது அறிக்கை:
தமிழகத்தில், அக்., மாத நிலவரப்படி, 64 சுங்கச்சாவடிகள், தேசிய நெடுஞ்சாலைகள் ஆணையத்தின் கீழ் செயல்படுகின்றன.
நாடு முழுதும் சுங்கச்சாவடிகளை ஒழிப்பது தொடர்பாக, பார்லிமென்ட்டில் நான் எழுப்பிய, சிறப்பு கவன ஈர்ப்பு கேள்விக்கு பதில் அளித்தபோது, மத்திய இணை அமைச்சர் ஹர்ஷ் மல்ஹோத்ரா, இந்த தகவலை தெரிவித்தார்.
அமைச்சரின் எழுத்துப்பூர்வ பதிலில், முந்தைய தேசிய நெடுஞ்சாலைகள் கட்டண விதிகள் 1997ல், 60 கி.மீ., துாரம் குறித்து, எந்த அளவுகோலும் இல்லை என, தெரிவிக்கப்பட்டுள்ளது.
இது, 1997 விதிகள் குறித்த தவறான புரிதலை எடுத்துரைக்கிறது. உண்மையில், இந்த விதியானது, இரண்டு சுங்கச்சாவடிகளுக்கு இடையில், 80 கி.மீ., துாரத்தை குறிப்பிடுகிறது.
சென்னையில் உள்ள, பரனுார் சுங்கச் சாவடியில், சாலை பயனர்களுக்கு, 2008 கட்டண விதிகளின் விதி 6ல், கோடிட்டு உள்ள பலன்களை மறுப்பது அநீதியாகும். சுங்கக் கட்டணங்களில், 60 சதவீதம் குறைக்க, இந்த விதி அனுமதிக்கிறது.
தேசிய நெடுஞ்சாலைகள் ஆணையம், பரனுாரில் செய்த முதலீட்டைவிட, 28.54 கோடி ரூபாய் அளவுக்கு, கூடுதல் லாபம் ஈட்டியுள்ளது; விதிகளின்படி, சுங்கக் கட்டணத்தை குறைக்க தவறிவிட்டது என்பதை, அமைச்சர் ஒப்புக் கொள்கிறார்.
அதேபோல் வசூலித்த அதிகப்படியான நிதியானது, நாட்டின் ஒருங்கிணைந்த நிதியில் 'டிபாசிட்' செய்யப்படுகிறது. அது, தேசிய நெடுஞ்சாலைகளை மேம்படுத்தவும், விரிவாக்கவும் ஒதுக்கப்படுகிறது என்ற விளக்கமும், மிகவும் கேள்விக்குரியது.
இந்த நடைமுறை சுங்கச்சாவடி கட்டணம், சட்டங்களை மீறுவதாகவும், பொது நிதியை தவறாக பயன்படுத்துவதாகவும், சாலை பயனர்களின் செலவில், ஒரு சிலருக்கு பயன் அளிப்பதாகவும் தெரிகிறது.
இந்த முதலீடுகள், செலவுகள் மற்றும் வசூல்களை மறு ஆய்வு செய்ய, தனியாக தணிக்கை ஆணையம் என்று எதுவும் இல்லை.
கட்டண விதிகள், பெரும்பாலும் நெகிழ்வான விதிமுறைகளுடன், ஒப்பந்ததாரர்களுக்கு சாதகமாக உள்ளன.
அதேநேரத்தில், பொதுமக்கள் நியாய மற்ற தொகையை செலுத்த நிர்பந்திக்கப்படுகின்றனர். இந்த அநியாயமான சுரண்டலுக்கும், கொள்ளைக்கும் அஞ்சி, நாம் நம் வீட்டுக்குள்ளேயே முடங்கிக் கிடக்கும் நாள் விரைவில் வரும்.
இந்த நியாயமற்ற, சுங்கச்சாவடி கட்டணங்களை எதிர்க்கவும், நாடு முழுதும் சுங்கச்சாவடிகளை அகற்றவும், அனைவரும் ஒன்றுபட வேண்டும்.
இவ்வாறு, அதில் கூறப்பட்டுள்ளது.