ADDED : ஜன 03, 2024 12:01 AM

திருச்சி:''இந்தியா வலிமையான நாடாக மாறி இருப்பதற்கு, வலிமையான பல்கலை கழகங்கள் இருப்பதே காரணம்,'' என, பாரதிதாசன் பல்கலை பட்டமளிப்பு விழாவில், பிரதமர் மோடி பேசினார்.
திருச்சி பாரதிதாசன் பல்கலையின், 38வது பட்டமளிப்பு விழா நேற்று நடந்தது. விழாவில், பிரதமர் மோடி பங்கேற்று, பி.எச்டி., மற்றும் பட்டப்படிப்பில் பதக்கம் பெற்ற, 30 மாணவ - மாணவியருக்கு சான்றுகள் வழங்கினார். பிரதமருக்கு பல்கலை துணைவேந்தர் செல்வம் நினைவுப்பரிசு வழங்கினார்.
தொடர்ந்து, பிரதமர் மோடி, 'வணக்கம்... என் மாணவ குடும்பமே...' என்று பேச்சை துவங்கினார்; அவர் பேசியதாவது:
பல்கலைகள் துடிப்போடு செயல்படும் போது, நாடும் துடிப்பாக செயல்படும். இந்தியா வலிமையான நாடாக மாறி இருப்பதற்கு, வலிமையான பல்கலைகள் இருப்பதே காரணம். நம் நாட்டில் உள்ள பல்கலைகள், உலக தரவரிசை பட்டியலில் இடம் பெற்றுள்ளன.
நாளந்தா பல்கலை போல, பாரதிதாசன் பல்கலையும் பழமையானது. நல்ல அடித்தளத்தோடு உருவாகி உள்ள இந்த பல்கலையில் பயின்றவர்கள், மனித வளம், மொழி வளர்ச்சி, அறிவியல் போன்ற துறைகளில், தனி முத்திரை பதித்துள்ளனர்.
இங்கு படிக்கும் மாணவர்கள், பாரம்பரியம் மிக்க கல்வி அமைப்பின் அங்கமாக திகழ்கிறீர்கள். இந்த சமுதாயத்தை முன்னேற்ற, நீங்கள் கற்ற கல்வியை பயன்படுத்த வேண்டும். சங்க நுால்களை படிப்பவர்கள், அதிலுள்ளவற்றை வருங்கால சமுதாயத்துக்கு கொண்டு சேர்ப்பவர்களாக இருக்க வேண்டும்.
தாகூர் கூறியது போல, உயர் கல்வி, அறிவை பெறுவதாக மட்டுமின்றி, ஒற்றுமை மற்றும் சமாதானத்தை தருவதாக இருக்கிறது.
அறிவியல் கற்பவர்கள் விவசாயிகளுக்கும், தொழில்நுட்பம் கற்பவர்கள் தொழில் முனைவோர்களுக்கும் உதவுபவர்களாக இருக்கிறீர்கள். பொருளாதாரம் கற்போர் நாட்டின் வறுமையை ஒழிப்பதற்கான வாய்ப்பு, மொழியியல் படிப்பவர்கள் கலாசாரம், பண்பாட்டை வளர்ப்பவர்களாக இருக்கிறீர்கள்.
வரும், 2047ல், இந்தியாவை மிகப்பெரிய வளர்ச்சியடைந்த நாடாக விளங்க செய்வது, மாணவர்கள் கையில் தான் உள்ளது. அதை, நான் நம்பிக்கையோடு எதிர்நோக்கி இருக்கிறேன்.
'புதியதோர் உலகம் செய்வோம்' என்ற பாரதிதாசன் கூற்றை நனவாக்கும் வகையில், மாணவர் சமுதாயம் குறிக்கோளுடன் இருக்க வேண்டும். இந்தியாவில், 2014ம் ஆண்டில், 4,000 கண்டுபிடிப்புகளுக்கு காப்புரிமை பெற்றிருந்தனர். தற்போது, 50,000 கண்டுபிடிப்புகளுக்கு காப்புரிமை பெறப்பட்டுள்ளது.
விளையாட்டு வீரர்களும் பல்வேறு சாதனைகளை நிகழ்த்தி வருகின்றனர். இந்தியாவில், 74 விமான நிலையங்கள் இருந்த நிலையில், 10 ஆண்டுகளில், 150 விமான நிலையங்கள் உருவாக்கப்பட்டுள்ளன.
குறிப்பாக, சரக்குகளை கையாளும் விமான நிலையங்கள் அதிகரித்திருப்பதால், ஏற்றுமதி அளவும் உயர்ந்துள்ளது. பதிவு பெற்ற தொழில் முனைவோர் எண்ணிக்கையும், வெளிநாட்டு ஒப்பந்தங்களும் அதிகரித்துள்ளன. அவை, பட்டம் பெறும் மாணவர்களுக்கு ஏராளமான வாய்ப்புகளை வழங்கும்.
இவ்வாறு, அவர் பேசினார்.