ADDED : அக் 26, 2025 06:38 AM

சென்னை: தமிழகத்தில் நிலவும் தண்ணீர் பிரச்னை குறித்து விவாதிக்க, நாம் தமிழர் கட்சி சார்பில் , தண்ணீர் மாநாடு நடத்தப்பட உள்ளது.
நாம் தமிழர் கட்சி சார்பில், ஆடு, மாடுகள் மாநாடு, கடல் மாநாடு, மரங்களின் மாநாடு, மலைகள் மாநாடு என தொடர்ச்சியாக நடத்தப்பட்டு வருகின்றன. நாம் தமிழர் கட்சி தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் இந்த மாநாடுகளில் பங்கேற்று உணர்ச்சி பொங்க பேசினார்.
இதைதொடர்ந்து, தமிழகத்தில் நிலவும் தண்ணீர் பிரச்னை குறித்து விவாதித்து விழிப்புணர்வு ஏற்படுத்த, தஞ்சாவூர் மாவட்டம், கல்லணை அருகே பூதலுாரில், தண்ணீர் மாநாட்டை, அக்கட்சி நடத்த உள்ளது.
வரும் நவ., 15ம் தேதி நடக்கும் அந்த மாநாட்டில், தண்ணீர் பற்றாக்குறை, காவிரி நதிநீர் சிக்கல், நன்னீர் பாதுகாப்பு மற்றும் நீர்வள பிரச்னைகள் குறித்து விவாதிக்கப்பட உள்ளதாகவும், சீமான் பேச உள்ளதாகவும் அக்கட்சி தெரிவித்துள்ளது.

