sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

புதன், நவம்பர் 19, 2025 ,கார்த்திகை 3, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

செய்திகள்

/

தமிழகம்

/

 சபரிமலையில் வரலாறு காணாத கூட்டம்; சாமியை தரிசிக்காமல் திரும்பிய பக்தர்கள்

/

 சபரிமலையில் வரலாறு காணாத கூட்டம்; சாமியை தரிசிக்காமல் திரும்பிய பக்தர்கள்

 சபரிமலையில் வரலாறு காணாத கூட்டம்; சாமியை தரிசிக்காமல் திரும்பிய பக்தர்கள்

 சபரிமலையில் வரலாறு காணாத கூட்டம்; சாமியை தரிசிக்காமல் திரும்பிய பக்தர்கள்

2


ADDED : நவ 19, 2025 04:54 AM

Google News

2

ADDED : நவ 19, 2025 04:54 AM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

சபரிமலை: கேரள மாநிலம், சபரிமலையில் மண்டல சீசன் துவங்கிய முதல் இரு நாட்களிலேயே பக்தர்கள் கூட்டம் அலைமோதுகிறது. கூட்டத்தை கட்டுப்படுத்த முடியாமல் போலீசும், தேவசம் போர்டு நிர்வாகமும் தடுமாறுகிறது.

பக்தர்கள் ஆங்காங்கே தடுத்து நிறுத்தப்படுவதால் பெரும் சிரமப் படுகின்றனர். சேலத்தை சேர்ந்த நுாற்றுக்கணக்கான பக்தர்கள், சபரிமலை வர முடியாமல் பந்தளத்தில் தங்கள் பயணத்தை முடித்துள்ளனர்.

சபரிமலையில் இந்த ஆண்டுக்கான மண்டல காலம் நேற்று முன் தினம் காலை துவங்கியது. இதற்காக நவ.,16 மாலை நடை திறந்தது முதல் பக்தர்கள் கூட்டம் அலைமோதுகிறது.

ஆன்லைன் முன்பதிவு மூலம் தினமும் 70,000 பேரும், ஸ்பாட் புக்கிங்கில் 20,000 பேரும் அனுமதிக்கப்படுவர் என, அறிவிக்கப்பட்டிருந்தது.

முன்பதிவு துவங்கிய சில நாட்களிலேயே நவ., மாதத்தின் அனைத்து நாட்களிலும் முன்பதிவு நிறைவு பெற்றது. தற்போது டிச.,10 வரையிலும் முன்பதிவு நிறைவு பெற்றுள்ளது.

கார்த்திகை 1ம் தேதியான நேற்று முன்தினமே, பம்பையிலும், சன்னிதானத்திலும் கூட்டத்தை கட்டுப்படுத்த போதிய திட்டமிடல்கள் இல்லாததால், எருமேலியில் இருந்து சென்ற பக்தர்கள் சன்னிதானம் வர முடியாமல், பாதி வழியில் நிறுத்தப்பட்டனர்.

தொடர்ந்து, நிலக்கல்லிலும் பக்தர்களுக்கு கட்டுப்பாடு ஏற்படுத்தப்பட்டது. பம்பையில் பல மணி நேரம் காத்திருந்த பின்னரே மலை ஏற அனுமதிக்கப்பட்டனர். இந்நிலை நேற்றும் நீடித்தது. எட்டு மணி நேரம் வரிசையில் நிற்கும் பகுதியில் தண்ணீர் இல்லை, உணவு இல்லை என, பக்தர்கள் குமுறுகின்றனர்.

கேரளாவை ஆளும் மார்க்சிஸ்ட் தலைமையிலான அரசும், தேவசம் போர்டும் பக்தர்கள் குறித்து கவலைப்படவில்லை; பக்தர்கள் செலுத்தும் காணிக்கை வேண்டும் என்பதில் மட்டும் கவனமாக இருக்கின்றனர். எந்த அடிப்படை வசதியும் செய்யவில்லை. வாகனங்களை, பக்தர்களை ஒழுங்குப்படுத்த போதிய போலீசார் இல்லை' என, பக்தர்கள் குற்றம்சாட்டினர்.

தமிழகத்தில், சேலத்தில் இருந்து மூன்று பஸ்களில் வந்த பக்தர்கள், பம்பையில் இருந்து சன்னிதானம் வர முடியாமல், பல மணி நேரம் காத்திருக்க வேண்டிய நிலை ஏற்பட்டதால், பந்தளத்துக்கு சென்று அங்குள்ள கோவிலில் தங்கள் பயணத்தை முடித்து ஊர் திரும்பினர். இதுபோல ஏராளமான பக்தர்கள் ஊர் திரும்புவதாக தகவல்கள் வெளியாகின்றன.

இதுகுறித்து, திருவிதாங்கூர் தேவசம் போர்டு புதிய தலைவராக பொறுப்பேற்றுள்ள கே.ஜெயக்குமார் கூறியதாவது:

பம்பையில் பக்தர்களை அதிக நேரம் காத்திருக்க வைக்காமல் மலையேற்ற நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. இதன்படி, பம்பையில் இருக்கும் பக்தர்களின் எண்ணிக்கைக்கு ஏற்ப, நிலக்கல்லில் இருந்து வரும் பக்தர்களின் எண்ணிக்கையில் கட்டுப்பாடுகள் ஏற்படுத்தப்படும்.

மரக்கூட்டம் முதல் சரங்குத்தி வரை, 20 கியூ காம்ப்ளக்ஸ்கள் உள்ளன. இங்கு பக்தர்கள் ஓய்வெடுக்க வசதி செய்யப்பட்டு, அங்கு தண்ணீர், பிஸ்கட் வழங்கப்படும். குடிநீர் மற்றும் பிஸ்கட் வழங்குவதில் 200 ஊழியர்கள் கூடுதலாக நியமிக்கப்பட்டுள்ளனர்.

ஸ்பாட் புக்கிங் செய்வதற்காக பம்பையில் அதிக பக்தர்கள் வருவதை கட்டுப்படுத்துவதற்கு, நிலக்கல்லில் உடனடியாக ஏழு கவுன்டர்கள் திறக்கப்படும். இவ்வாறு அவர் கூறினார்.

சபரிமலையில் நவ.,16- மாலை 5:00 மணி முதல் நேற்று மதியம், 12:00 மணிவரை, ஒரு லட்சத்து 96,594 பக்தர்கள் தரிசனம் செய்துள்ளதாக போலீசார் தெரிவித்தனர்.

மார்க்சிஸ்ட் அமைச்சருக்கு மனமில்லை வழக்கமாக சீசன் துவங்க ஒரு மாதம் முன், தேவசம்போர்டு அமைச்சர் உள்ளிட்ட பல்துறை அமைச்சர்கள், பம்பையில் கூடி அதிகாரிகளுடன் ஆலோசனை நடத்தி, ஏற்பாடுகளை முடுக்கி விடுவது வழக்கம். இந்த ஆண்டு அதுபோன்ற முன்னேற்பாடு கூட்டம் ஏதும் நடைபெறவில்லை. கார்த்திகை முதல் தேதி நடை திறந்த போது, தேவசம்போர்டு அமைச்சர் சன்னிதானம் வந்து அதிகாரிகள் ஆலோசனை கூட்டத்தை நடத்தி, ஆலோசனைகளை வழங்குவார். இந்தாண்டு, மார்க்சிஸ்ட் கட்சி அமைச்சர் வாசவன் சன்னிதானத்துக்கு வரவில்லை. அவர் தரிசனம் செய்யாவிட்டாலும், பக்தர்களுக்கான ஏற்பாடுகளை கவனிக்க வந்திருக்க வேண்டும். தேவசம்போர்டின் பதவி காலம் இரண்டு ஆண்டுக்கு ஒரு முறை நவ.,15ல் நிறைவு பெறுகிறது. இதனால், இந்தாண்டு பதவி விலகி செல்லும் தலைவர், உறுப்பினர்கள், சீசன் முன்னேற்பாடுகளில் போதிய கவனம் செலுத்தவில்லை. புதிதாக பொறுப்பு ஏற்பவர்களுக்கு, இரண்டு நாட்களுக்குள் நடை திறக்கும் போது, இங்கு என்ன செய்ய வேண்டும் என்பதில் எந்த திட்டமிடலும் இருக்காது. இந்தாண்டு குழப்பத்திற்கு இதுவும் காரணம்.



மத்திய படை என்னாச்சு? மண்டல, மகர விளக்கு சீசனில் மத்திய அதிவிரைவு படை போலீசாரும், தேசிய பேரிடர் நிவாரண படை வீரர்களும் பணியில் ஈடுபடுத்தப்படுவர். ஆனால் நேற்று வரை இவர்கள் வரவில்லை. கேரள அரசு தரப்பில் இருந்து கடிதம் தாமதமாக சென்றதாலும், பீஹார் தேர்தல் மற்றும் டில்லி குண்டு வெடிப்பை தொடர்ந்து, பாதுகாப்பு பணியில் இவர்கள் ஈடுபடுத்தப்பட்டுள்ளதாலும் வருவது தாமதமாவதாக தெரிவிக்கப்பட்டது.








      Dinamalar
      Follow us