"தீண்டாமை நடப்பதை வேடிக்கை பார்க்க முடியாது": உயர்நீதிமன்ற நீதிபதிகள் காட்டம்
"தீண்டாமை நடப்பதை வேடிக்கை பார்க்க முடியாது": உயர்நீதிமன்ற நீதிபதிகள் காட்டம்
ADDED : மே 16, 2024 06:07 PM

மதுரை: 'சில இடங்களில் தீண்டாமை நடைபெறுவதை நீதிமன்றம் வேடிக்கை பார்த்துக் கொண்டிருக்காது. கோயில் திருவிழா கொண்டாடுவதில் பாகுபாடு இல்லாமல் இருப்பதை உறுதி செய்ய வேண்டும்' என உயர்நீதிமன்ற மதுரைக்கிளை உத்தரவிட்டுள்ளது.
திண்டுக்கல் மாவட்டத்தை சேர்ந்த சாமிநாதன் என்பவர் உயர்நீதிமன்ற மதுரைக் கிளையில் ஒரு மனு தாக்கல் செய்திருந்தார். மனுவில், '' திண்டுக்கல் மாவட்டம் வேடசந்தூர் அருகே உள்ள வெள்ளப்பொம்மன் கிராமத்தில் பகவதி அம்மன், ஸ்ரீ முத்தாலம்மன், ஸ்ரீ காளியம்மன் மற்றும் ஸ்ரீ மாரியம்மன் கோயில்களில் வரும் மே 19ம் தேதி திருவிழா நடத்த திட்டமிடப்பட்டுள்ளது.
80க்கு மேற்பட்ட பட்டியலின குடும்பத்தினர் திருவிழாவில் பங்கேற்க அனுமதி மறுக்கப்படுகிறது. திருவிழாவில் பட்டியலின மக்கள் வழிபடும் வகையில் அனுமதி அளித்து உத்தரவிட வேண்டும்'' எனக் கூறியிருந்தார். இந்த மனு இன்று (மே 16) உயர்நீதிமன்ற மதுரைக்கிளையில் விசாரணைக்கு வந்தது.
வேடிக்கை பார்க்க முடியாது!
அப்போது நீதிபதிகள், '' சில இடங்களில் தீண்டாமை நடைபெறுவதை நீதிமன்றம் வேடிக்கை பார்த்துக் கொண்டிருக்காது. ஒரு மனிதன், மற்றொரு மனிதனை பாகுபாடு பார்ப்பது ஏற்புடையது அல்ல. கோயில் திருவிழா கொண்டாடுவதில் பாகுபாடு இல்லாமல் இருப்பதை உறுதி செய்ய வேண்டும். எந்த பிரச்னையும் ஏற்படாமல் வருவாய்த்துறையும், போலீசாரும் பார்த்துக்கொள்ள வேண்டும்'' என உத்தரவிட்டனர்.