ADDED : நவ 15, 2024 02:42 AM
விருதுநகர்:கேங்மேன்களில் 10 சதவீதம் பணியிட மாறுதல் பெற்றவர்களுக்கு பணிவிடுவிப்பு செய்து உத்தரவிட வேண்டும் என தமிழ்நாடு மின்சார வாரிய கேங்மேன் தொழிற்சங்கம் வலியுறுத்தி உள்ளது.
இதன் மாநில பொதுச்செயலாளர் யுவராஜ் கூறியதாவது: மின்வாரியத்தில் பணியாற்றும் கேங்மேன் பணியாளர்கள் தங்கள் சொந்த மாவட்டத்தில் இருந்து வெவ்வேறு மாவட்டங்களுக்கு 300, 400, 500 கி.மீ., தொலைவுக்கு பணியமர்த்தப்பட்டுள்ளனர். பல்வேறு கட்ட போராட்டம், ஆர்ப்பாட்டத்திற்கு பிறகு தலைமை பொறியாளர் பணியமைப்பு, 10 சதவீதம் பணியிட மாறுதல் வழங்கி உள்ளார்.
இவ்வாறு மாறுதல் பெற்ற நிலையில் மறு நியமன உத்தரவு பெற்றும் முறையான பணி விடுவிப்பு செய்யப்படவில்லை. குறிப்பாக கோவை வடக்கு வட்டம், ஒரு சில வட்டத்தில் ஒரு சில பணியாளர்களை மட்டும் பணி விடுவிப்பு செய்யப்பட்டுள்ளது. இது போன்ற செயல்பாடுகள் கேங்மேன் பணியாளர்கள் மத்தியில் பெரும் மன உளைச்சலை ஏற்படுத்துகிறது.
இப்பணியாளர்களின் நலனுக்காகவும், வாரிய பணிகள் தொய்வின்றி நடக்கவும் 10 சதவீத பணியிட மாறுதல் பெற்றவர்களுக்கு உடனடியாக பணிவிடுவிப்பு செய்து உத்தரவிடவேண்டும் என்றார்.