தற்காலிக ஆசிரியர் நியமனம் முன் அனுமதி வழங்க வலியுறுத்தல்
தற்காலிக ஆசிரியர் நியமனம் முன் அனுமதி வழங்க வலியுறுத்தல்
ADDED : மே 27, 2025 10:36 PM
பொதுத்தேர்வு வகுப்புகளில் மட்டும் 5,000 ஆசிரியர் பணியிடங்கள் காலியாக உள்ளதால், தற்காலிக ஆசிரியர்களை நியமிப்பதற்கான அனுமதியை முன்கூட்டியே வழங்க, தலைமை ஆசிரியர்கள் வலியுறுத்தி உள்ளனர்.
தமிழக அரசின் தொடக்க, நடுநிலை, உயர்நிலை, மேல்நிலைப் பள்ளிகளில், 2 லட்சத்துக்கும் மேற்பட்ட ஆசிரியர்கள் பணிபுரிகின்றனர். அவர்களில் ஆண்டுக்கு 8,000க்கும் மேற்பட்டோர் ஓய்வு பெறுகின்றனர்.
தொடக்க, நடுநிலைப் பள்ளிகளில், மாணவர்கள் எண்ணிக்கையை விட அதிகமாக ஆசிரியர்கள் இருப்பதால், பல ஆண்டாக இடைநிலை, பட்டதாரி ஆசிரியர் பணியிடங்கள் நிரப்பப்படவில்லை.
அதேநேரத்தில், 10ம் வகுப்பு, பிளஸ் 1, பிளஸ் 2 வகுப்பு மாணவர்கள் பொதுத்தேர்வுக்கு தயாராக வேண்டி உள்ளதால், அவர்களுக்கு ஆசிரியர் பற்றாக்குறை ஏற்பட்டால் தேர்ச்சி சதவீதம் பாதிக்கும்.
எனவே, கடந்த ஆண்டு, 4,989 தற்காலிக ஆசிரியர்களை, பள்ளி மேலாண் குழு வாயிலாக நியமித்துக்கொள்ள அரசு ஆணை பிறப்பித்தது.
இதுகுறித்து தலைமை ஆசிரியர்கள் கூறியதாவது:
கடந்த ஆண்டில் பள்ளிகள் திறந்து வகுப்புகள் துவங்கிய பின், தற்காலிக ஆசிரியர்கள் நியமனம் குறித்த உத்தரவு வெளியிடப்பட்டது. நடப்பாண்டு நிரந்தர ஆசிரியர்கள் நியமனம் குறித்து அறிவிப்பு வெளியிடப்படவில்லை.
நடவடிக்கை எடுத்தாலும் பல மாதங்கள் அவகாசம் தேவைப்படும். அதனால், தற்காலிக ஆசிரியர்கள் நியமனம் குறித்த அறிவிப்பை, பள்ளிக்கல்வித் துறை முன்கூட்டியே வெளியிட வேண்டும். அப்போது தான் கற்றல் பணி பாதிக்காமல் இருக்கும்.
இவ்வாறு அவர்கள் கூறினர்.
- - நமது நிருபர்-