அமெரிக்கா வரி உயர்வு எதிரொலி: இந்திய ஏற்றுமதி பாதிக்குமா: திருப்பூர் ஏற்றுமதியாளர்கள் கூறுவது இதுதான்!
அமெரிக்கா வரி உயர்வு எதிரொலி: இந்திய ஏற்றுமதி பாதிக்குமா: திருப்பூர் ஏற்றுமதியாளர்கள் கூறுவது இதுதான்!
UPDATED : ஆக 03, 2025 08:21 PM
ADDED : ஆக 03, 2025 06:21 PM

திருப்பூர் : இந்தியாவின் ஒட்டுமொத்த ஆயத்த ஆடை ஏற்றுமதியில், திருப்பூர் முதலிடத்தில் இருக்கிறது. குறிப்பாக, பின்னலாடை ஏற்றுமதியில், 34 சதவீத பங்களிப்புடன் முன்னிலை வகிக்கிறது. கடந்த நிதியாண்டில் (2024-25), அமெரிக்காவுக்கு மட்டும், 22 ஆயிரத்து, 486 கோடி ரூபாய்க்கு பின்னலாடை ஏற்றுமதி நடந்துள்ளது.
அமெரிக்கா, இந்தியாவுக்கான வரியை, திடீரென உயர்த்தியுள்ளது, கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. அதேநேரம், பாகிஸ்தான், வியட்நாம், வங்கதேசம் போன்ற போட்டி நாடுகளுக்கான வரியை கணிசமாக குறைந்துள்ளதால், சர்வதேச சந்தையில் இந்தியாவின் போட்டி பலமடங்கு அதிகரிக்கும் சூழல் உருவாகியுள்ளது.
பின்னலாடை ஏற்றுமதிக்கு, அமெரிக்காவில் 26.50 சதவீதமாக இருந்த வரி, தற்போது 41.50 சதவீதமாக உயர்த்தப்பட்டுள்ளதாக, திருப்பூர் ஏற்றுமதியாளர்கள் கவலை தெரிவித்துள்ளனர்.
வங்கதேச வரி, 30 சதவீதம் என்பது, 20 சதவீதமாக குறைக்கப்பட்டுள்ளது. பாகிஸ்தானுக்கு, 19 சதவீதமும், இலங்கைக்கு, 20 சதவீதமும் வரி விதிக்கப்பட்டுள்ளது.
இந்தியாவுக்கான வரி, 25 சதவீதமாக உயர்ந்துள்ளதால், திருப்பூருக்கான ஏற்றுமதி ஆர்டர்கள் இந்தாண்டில் தடைபட வாய்ப்புள்ளது. இந்தியாவுக்கு வரியை உயர்த்தியதுடன், போட்டி நாடுகளுக்கு வரியை குறைத்துள்ளதால், கடும் நெருக்கடியை சந்திக்க வேண்டிய நிலை உருவாகியுள்ளது.
மத்திய அரசு போர்க்கால அடிப்படையில் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று, தொழில்துறையினர் நம்பிக்கையுடன் காத்திருக்கின்றனர்.
இதுகுறித்து திருப்பூர் ஏற்றுமதியாளர்கள் சங்க தலைவர் சுப்பிரமணியன் கூறியதாவது:
இந்தியாவில், சில நிறுவனங்கள், அமெரிக்காவை மட்டும் நம்பி, 100 சதவீதம் வர்த்தகம் செய்கின்றன. அனைத்து நாடுகளுக்கும் ஏற்றுமதி செய்யும் நிறுவனங்கள் சமாளிக்கலாம். அமெரிக்காவுக்கு மட்டும் ஏற்றுமதி செய்வோர், 'டேரிப்' உயர்வால் நிச்சயம் பாதிக்கப்படுவர். மத்திய அரசு நிச்சயம் மாற்று நடவடிக்கை எடுக்கும்; அரசுக்கு பக்கபலமாக நிற்போம். சர்வதேச சந்தையில், வங்கதேசம், பாகிஸ்தான் போன்ற நாடுகளுடன் ஒப்பிடுகையில், 5 சதவீத வரி வித்யாசம் இருக்கிறது. அதை ஈடுகட்டும் வகையில், 'டியூட்டி டிராபேக்' மற்றும் வட்டி மானியத்தை உயர்த்தி வழங்க வேண்டும்.
பிரிட்டன், ஐரோப்பிய நாடுகளுக்கான ஏற்றுமதி அதிகரிக்கும் என்பதால், ஒட்டுமொத்த வர்த்தக குறைபாடு ஏற்படாது. இருப்பினும், குறு, சிறு நிறுவனங்கள் பாதிக்கப்படும்; வேலை வாய்ப்பும் பாதிக்கப்படும். அமெரிக்காவின் வரி உயர்வை சமாளிக்கும் வகையில், தற்காலிகமாக, வர்த்தக பாதுகாப்பு நடவடிக்கை எடுக்க வேண்டும்; நிரந்தரமாக, சுமூக தீர்வை கண்டறிய வேண்டும். இவ்வாறு, அவர் கூறினார்.