லோக்சபா தேர்தலில் சமூகவலைத்தள பயன்பாட்டை அதிகரிக்க வேண்டும்: பா.ஜ., பொதுச்செயலர் ராம.ஸ்ரீனிவாசன் பேச்சு
லோக்சபா தேர்தலில் சமூகவலைத்தள பயன்பாட்டை அதிகரிக்க வேண்டும்: பா.ஜ., பொதுச்செயலர் ராம.ஸ்ரீனிவாசன் பேச்சு
ADDED : ஜன 30, 2024 07:31 AM

மதுரை : ''லோக்சபா தேர்தலில் சமூகவலைத்தள பயன்பாட்டை அதிகரிக்க வேண்டும்,'' என, மதுரையில் பா.ஜ., ஊடக, சமூக ஊடக நிர்வாகிகள் ஆலோசனை கூட்டத்தில் பா.ஜ., மாநில பொதுச் செயலர் ராம.ஸ்ரீனிவாசன் பேசினார்.
மாநிலம் முழுவதும் இருந்து சமூகவலைத் தள ஆர்வலர்கள் பங்கேற்றனர். அவர்கள் மாநில அளவில் தேர்தல் பணிபுரிவதற்கு முன்னோடி திட்டமாக விருதுநகர் லோக்சபா தொகுதியில் பணிபுரிய ஆலோசனைகள் வழங்கப்பட்டன.
மாவட்ட தலைவர்கள் மகாசுசீந்திரன், சசிகுமார், தகவல் தொழில்நுட்ப பிரிவு மாநில பொதுச் செயலாளர் விஷ்ணுபிரசாத், துணைத்தலைவர் அனந்தகிருஷ்ணன், ஊடக பிரிவு மாநில செயலாளர் நாகராஜன் பங்கேற்றனர்.
ராம.ஸ்ரீனிவாசன் பேசியதாவது: தமிழகத்தில் சுதந்திர போராட்ட காலத்தில் எழுச்சியை ஏற்படுத்த காங்கிரசார் நாடகங்களை பயன்படுத்தினர். அடுத்து திரைப்படங்கள், பின்னர் டிவி.,க்கள் மூலம் தி.மு.க.,வினர் கருத்துக்களை மக்களிடம் கொண்டு போய் சேர்த்தனர். அடுத்த நிலையாக சமூகவலைத்தளங்கள் உள்ளன. இதனை பிற கட்சிகளை விட பா.ஜ.,தான் துடிப்புடன் செயல்பட்டு மக்களிடம் கருத்துக்களை சேர்க்கிறது.
மற்ற பிரிவினர் குறிப்பிட்ட நேரத்தில், நேரடியாக சென்றுதான் மக்களிடம் தொடர்பு கொள்ள முடியும். ஆனால் சமூகவலைத்தளத்தில் 24 மணி நேரமும், எங்கிருந்தும் செயல்பட முடியும். களத்திற்கு நேரடியாக செல்ல வேண்டியதில்லை. பா.ஜ.,வினரும், ஆதரவாளர்களும், அரசு பணியில் உள்ளோரும், யாராக இருந்தாலும் பா.ஜ.,வுக்கு ஆதரவான கருத்துக்களை கொண்டு போய் சேர்க்க முடியும். இந்த வழியில் பிரதமர் மோடியின் திட்டங்களை மக்களிடம் சேர்க்க வேண்டும் என்றார்.