ADDED : அக் 02, 2024 08:42 PM
சென்னை:'கதர் உற்பத்தியில் ஈடுபட்டுள்ள அனைவருக்கும் கைகொடுக்கும் வகையில், கதர் மற்றும் கிராம பொருட்களை அதிகளவில் வாங்கி பயன்படுத்த வேண்டும்' என, முதல்வர் ஸ்டாலின் கூறியுள்ளார்.
அவரது அறிக்கை:
தமிழக கதர் நுாற்பாளர்கள் மற்றும் நெசவாளர்களின் பொருளாதார மேம்பாட்டையும், அவர்களது நலன்களையும் கருதி, கதர் கிராம தொழில் வாரியம் வாயிலாக, தமிழக அரசு பல்வேறு திட்டங்களை செயல்படுத்தி வருகிறது.
விடுதலை போராட்டத்தின்போது, அகிம்சை ஆயுதமாக காந்தியால் முன்மொழியப்பட்ட கதர், கைத்தறி ஆடைகளை நுாற்பதிலும், நெசவு நெய்வதிலும் தமிழகம் முன்னோடியாக திகழ்ந்து வருகிறது. கிராமங்களில் உள்ள கதர் நெசவாளர்களால், நவீன சூழலுக்கு ஏற்ப புத்தம் புது வடிவமைப்புகளில் கண்ணை கவரும் வண்ணத்தில் கதராடைகள் உற்பத்தி செய்யப்படுகின்றன.
கைவினை கலைஞர்களால் உற்பத்தி செய்யப்படும் பலதரப்பட்ட பொருட்களை, தமிழக கதர் அங்காடிகள் வாயிலாக விற்பனை செய்ய, அரசு உதவிகளை செய்து வருகிறது. ஆண்டு முழுதும் 30 சதவீத தள்ளுபடி விலையில், இப்பொருட்கள் விற்பனை செய்யப்படுகின்றன.
காந்தியின் 156வது பிறந்த நாளை ஒட்டி, கதர் உற்பத்தியில் ஈடுபட்டுள்ள அனைவருக்கும் கைகொடுக்கும் வகையில், கதர் மற்றும் கிராம பொருட்களை அதிகளவில் வாங்கி பயன்படுத்த வேண்டும். மாணவர், மாணவியர், இளைஞர்கள், அரசு ஊழியர்கள், ஆசிரியர்கள், பொதுமக்கள் அனைவரும், இப்பொருட்களை வாங்க வேண்டும்.
இவ்வாறு முதல்வர் கூறியுள்ளார்.