உ.வே.சாமிநாதையர் பிறந்த நாள் தமிழ் இலக்கிய மறுமலர்ச்சி நாள்: சட்டசபையில் முதல்வர் அறிவிப்பு
உ.வே.சாமிநாதையர் பிறந்த நாள் தமிழ் இலக்கிய மறுமலர்ச்சி நாள்: சட்டசபையில் முதல்வர் அறிவிப்பு
UPDATED : டிச 10, 2024 11:37 AM
ADDED : டிச 10, 2024 10:52 AM

சென்னை: 'தமிழ்த்தாத்தா' உ.வே.சாமிநாதையரின் பிறந்தநாளான பிப்.,19ம் தேதி தமிழ் இலக்கிய மறுமலர்ச்சி நாளாக கொண்டாடப்படும் என முன்னாள் அமைச்சர் கே.பி.முனுசாமி கோரிக்கையை ஏற்று முதல்வர் ஸ்டாலின் சட்டசபையில் அறிவித்தார்.
தமிழ்த் தாத்தா என்று போற்றப்படுபவர் உ.வே.சாமிநாதையர். இவர் 1855ம் ஆண்டு பிப்ரவரி 19ம் தேதி தஞ்சாவூர் மாவட்டத்தின், சூரியமூலையில் வேங்கட சுப்பையர், சரசுவதி அம்மாள் தம்பதியருக்கு மகனாய்ப் பிறந்தார். இவர் 17 வயதில் நாகப்பட்டினம் மாவட்டம் திருவாவடுதுறை சைவ ஆதீனத்தில் மீனாட்சி சுந்தரம் பிள்ளையிடம் 5 ஆண்டு காலம் பயின்று தமிழறிஞர் ஆனார்.
சென்னை மாநில கல்லூரியில் ஆசிரியராக பணியாற்றிய இவர், புறநானூறு, நற்றிணை, குறுந்தொகையை பதிப்பித்தார். அவர் கண்டெடுக்காவிட்டால், பத்துப்பாட்டு, எட்டுத்தொகை மட்டுமல்ல, பழந்தமிழ் இலக்கியங்களே நம் பார்வைக்கு வராமல் போயிருக்கும். இந்த உழைப்புக்காகத் தான் அவர், தமிழ்த் தாத்தா என்று அனைவராலும் போற்றப்படுகிறார்.
உ.வே.சா., மீனாட்சி தமிழ்க் கல்லூரியில், 1924 முதல் 1927 வரை, முதல்வராக இருந்தார். 1942, ஏப்., 28ம் தேதி மறைந்தார். 'உ.வே.சா., பிறந்த நாளான பிப்ரவரி 19ம் தேதியை, தமிழ் இலக்கிய மறுமலர்ச்சி நாளாக கொண்டாட வேண்டும்' என முன்னாள் அமைச்சர் கே.பி. முனுசாமி இன்று சட்டசபையில் கோரிக்கை விடுத்தார். இவரது கோரிக்கையை ஏற்பதாக கூறிய முதல்வர் ஸ்டாலின், உ.வே.சாமிநாதையரின் பிறந்தநாளான பிப்.,19ம் தேதி தமிழ் இலக்கிய மறுமலர்ச்சி நாளாக கொண்டாடப்படும் என அறிவித்தார்.