UPDATED : நவ 19, 2026 08:28 PM
ADDED : நவ 19, 2026 08:28 PM
சென்னை: கொளத்துார் த.வெ.க., – எம்.எல்.ஏ., பாபு மறைவை தொடர்ந்து, தமிழகத்தில் காலியாக உள்ள, சட்டசபை தொகுதிகளின் எண்ணிக்கை, ஆறாக உயர்ந்துள்ளது.
தமிழகத்தில், சட்டசபை தேர்தல், கடந்த ஏப்ரல் மாதம் நடந்தது. த.வெ.க., 108 தொகுதிகளில் வெற்றி பெற்றது. தி.மு.க.,வின் கூட்டணி கட்சிகளான காங்கிரஸ் – வி.சி.க.,– இந்திய யூனியன் முஸ்லீம் லீக் கட்சிகளின் ஆதரவுடன், த.வெ.க., ஆட்சி அமைத்தது. தமிழகத்தின் முதல்வராக, மே 10ம் தேதி விஜய் பதவியேற்றார்.
திருச்சி கிழக்கு மற்றும் பெரம்பூர் தொகுதிகளில் வெற்றி பெற்றிருந்த முதல்வர் விஜய், தேர்தல் கமிஷன் விதிகளின்படி, திருச்சி கிழக்கு தொகுதி எம்.எல்.ஏ., பதவியை ராஜினாமா செய்தார்; இதனால், அந்த தொகுதி காலியானது.
அ.தி.மு.க., சார்பில் வெற்றி பெற்ற, மதுராந்தகம் – மரகதம் குமரவேல்; தாராபுரம் – சத்தியபாமா; பெருந்துறை – ஜெயகுமார்; அம்பாசமுத்திரம் – இசக்கி சுப்பையா; கரூர் – எம்.ஆர்.விஜயபாஸ்கர்; விராலிமலை – சி.விஜயபாஸ்கர் ஆகியோர், தங்கள் எம்.எல்.ஏ., பதவியை, ராஜினாமா செய்துவிட்டு, த.வெ.க.,வில் இணைந்தனர்.
இதனால், காலியான தொகுதிகள் எண்ணிக்கை ஏழாக உயர்ந்தது. சமீபத்தில் மதுராந்தகம் மற்றும் தாராபுரம் தொகுதிகளுக்கு, இடைத்தேர்தல் நடந்தது. த.வெ.க., சார்பில் போட்டியிட்டு மரகதம் குமரவேல், சத்யபாமா ஆகியோர் வெற்றி பெற்றனர். மீதமுள்ள ஐந்து சட்டசபை தொகுதிகளுக்கு, நீதிமன்ற வழக்கு காரணமாக தேர்தல் நடத்தப்படவில்லை.
இந்நிலையில், கொளத்துார் தொகுதி த.வெ.க., – எம்.எல்.ஏ., பாபு, நேற்று உடல்நலக் குறைவால் மறைந்தார். இதனால், தமிழகத்தில் காலியாக உள்ள சட்டசபை தொகுதிகளில் எண்ணிக்கை, ஆறாக உயர்ந்துள்ளது. த.வெக., – எம்.எல்.ஏ.,க்கள் எண்ணிக்கை, 108 ஆக குறைந்துள்ளது.
