ADDED : மார் 18, 2025 10:11 PM
சென்னை:'தமிழகத்தில் உள்ள, 5,348 நலவாழ்வு மையங்களிலும், புதன்கிழமைதோறும் ஒருங்கிணைந்த தடுப்பூசி போடப்படும்' என, பொது சுகாதாரத்துறை அறிவித்துள்ளது.
இதுகுறித்து, பொது சுகாதாரத்துறை இயக்குநர் செல்வவிநாயகம் வெளியிட்ட அறிவிப்பு:
தமிழகத்தில், 11 வகையான தடுப்பூசிகள் போடப்படுகின்றன. இந்த நடவடிக்கை வாயிலாக, 12 வகையான நோய்களில் இருந்து, குழந்தைகள் மற்றும் கர்ப்பிணியரை காக்க முடிகிறது.
ஆண்டுதோறும், 9.58 லட்சம் கர்ப்பிணியருக்கும், 8.76 லட்சம் குழந்தைகளுக்கும் தடுப்பூசி போடப்படுகிறது.
முக்கிய மருத்துவமனைகள் மற்றும் மருத்துவக் கல்லுாரி மருத்துவமனைகளில் தினமும்; ஆரம்ப சுகாதார நிலையங்களில், புதன்கிழமையன்றும் தடுப்பூசி போடப்படுகிறது.
இதுதவிர, 33 தனியார் மருத்துவமனைகளிலும் தேசிய அட்டவணை தடுப்பூசி திட்டம் செயல்படுத்தப்பட்டு வருகிறது. தடுப்பூசிகளின் பயன்பாடு, பயனாளிகள் விபரம், 'யூ - வின்' செயலியில் கண்காணிக்கப்படுகிறது.
தகுதியான அனைவரும் தடுப்பூசி செலுத்திக் கொள்வதை உறுதி செய்யும் வகையில், 4,848 ஊரக நலவாழ்வு மையங்களிலும், 500 நகர்ப்புற நலவாழ்வு மையங்களிலும், புதன்கிழமைதோறும் தடுப்பூசி வழங்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. இந்த வாய்ப்பை பொதுமக்கள் பயன்படுத்தி, தடுப்பூசிகளை தவணை தவறாமல் செலுத்தி கொள்ள வேண்டும்.
இவ்வாறு அறிவிப்பில் கூறியுள்ளார்.