வாச்சாத்தி கொடூரம்: 215 பேரின் தண்டனையை உறுதி செய்தது ஐகோர்ட்!
வாச்சாத்தி கொடூரம்: 215 பேரின் தண்டனையை உறுதி செய்தது ஐகோர்ட்!
UPDATED : செப் 30, 2023 10:53 AM
ADDED : செப் 29, 2023 11:07 AM

சென்னை: தர்மபுரி மாவட்டம், வாச்சாத்தி மலை கிராம மக்களுக்கு எதிரான பாலி யல் வன்முறை வழக்கில், 215 பேருக்கு விதிக்கப்பட்ட சிறை தண்டனையை, சென்னை உயர் நீதிமன்றம் உறுதி செய்தது.
பாலியல் வன்முறையில் பாதிக்கப்பட்ட 18 பேருக்கு, தலா, 10 லட்சம் ரூபாய் இழப்பீடு மற்றும் வேலைவாய்ப்பு வழங்கவும், அப்போதைய கலெக்டர், எஸ்.பி., மற்றும் வனத்துறை அதிகாரிக்கு எதிராக நடவடிக்கை எடுக்கவும், உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
தர்மபுரி மாவட்டம், வாச்சாத்தி மலை கிராம மக்கள் உதவியுடன், சந்தன கட்டைகள் பெருமளவில் கடத்தப்படுவதாக, வனத் துறைக்கு வந்த தகவலை தொடர்ந்து, அந்த கிராமத்தில், வனத் துறை, வருவாய் துறை, போலீசார் சேர்ந்து திடீர் சோதனை நடத்தினர்.
அப்போது, கிராமத்தைச் சேர்ந்த ஒரு சிறுமி, 8 மாத கர்ப்பிணி உள்ளிட்ட 18 பெண்களிடம், பாலியல் வன்முறை செய்ததாகவும் புகார் எழுந்தது. 1992 ஜூன் 20ல், அ.தி.மு.க., ஆட்சியின் போது, இச்சம்பவம் நடந்தது.
சம்பவம் குறித்து, சி.பி.ஐ., விசாரணைக்கு உயர் நீதிமன்றம் உத்தரவிட்டது. வனத் துறை, வருவாய் துறை, போலீஸ் அதிகாரிகள் உள்ளிட்ட, 269 பேருக்கு எதிராக வழக்குப் பதிவு செய்யப்பட்டது. இவர்களில் உயிருடன் இருந்த 215 பேரை, குற்றவாளிகள் என, தர்மபுரி மாவட்ட சிறப்பு நீதிமன்றம் தீர்ப்பு அளித்தது. 12 பேருக்கு தலா 10 ஆண்டு; 5 பேருக்கு தலா 7 ஆண்டு; மற்றவர்களுக்கு ஒன்று முதல் 3 ஆண்டுகள் என, சிறை தண்டனை விதித்தது.
சிறை தண்டனையை எதிர்த்து, உயர் நீதிமன்றத்தில் தாக்கல் செய்த மேல்முறையீடு மனுக்களில் கூறியிருப்பதாவது: வாச்சாத்தி கிராமத்துக்கு அதிகாரிகள் சென்ற போது, அங்குள்ள சிலர் சந்தன கட்டை கடத்தலில் ஈடுபட்டது தெரிய வந்தது. அவர்கள், அதிகாரிகளை சிறை பிடித்தனர். இரும்பு கம்பி, கற்களால் தாக்கினர்; 22 அதிகாரிகள் காயமடைந்தனர்.
இந்த வழக்கில் இருந்து தப்புவதற்காக, பெண்களை பாலியல் வன்முறை செய்ததாக கதை கட்டினர். வழக்கில் குற்றம் சாட்டப்பட்ட அனைவரும், சோதனைக்கு செல்லவில்லை. அதிகாரிகள் அங்கு இருந்ததற்கான ஆதாரங்களும் இல்லை. சிறப்பு நீதிமன்றம், பல அம்சங்களை பரிசீலிக்க தவறி விட்டது.இவ்வாறு மனுக்களில் கூறப்பட்டது.
மனுக்களை, நீதிபதி பி.வேல்முருகன் விசாரித்தார். சி.பி.ஐ., சார்பில், கூடுதல் சொலிசிட்டர் ஜெனரல் ஏ.ஆர்.எல்.சுந்தரேசன், சிறப்பு வழக்கறிஞர் ஜி.அர்ஜுனன் ஆஜராகினர்.
நீதிபதி வேல்முருகன் பிறப்பித்த உத்தரவு: வெவ்வேறு துறைகளின் சீருடை பணியாளர்கள், 18 பெண்களை வலுக்கட்டாயமாக கூட்டிச் சென்று, பாலியல் வன்முறை செய்ததாக குற்றம் சாட்டப்பட்டுள்ளது. அடையாள அணிவகுப்பை நடத்திய மாஜிஸ்திரேட், சீருடை பணியாளர்கள் நடத்திய கொடுமைகள் பற்றி குறிப்பிட்டுள்ளார். அதனால், அணிவகுப்பின் போது, குற்றவாளிகளை அடையாளம் காட்டவில்லை என்பதை ஏற்க முடியாது.
வழக்கில் குற்றம் சாட்டப்பட்ட அனைவரும், வனத் துறை, போலீஸ், வருவாய் அதிகாரிகள். குற்றத்தில் இவர்கள் பங்கேற்றுள்ளனர். இரவு முழுதும், அதிகாரிகளின் கட்டுப்பாட்டில் பெண்கள் இருந்துள்ளனர். அவர்களின் சாட்சியங்களை பார்த்தால், பாலியல் வன்முறை பற்றி தெரிவிக்கக் கூடாது என்று அச்சுறுத்தப்பட்டது தெளிவாகிறது.
மாஜிஸ்திரேட் முன் ஆஜர்படுத்தப்பட்ட போது, தங்களுக்கு நேர்ந்த கொடுமை குறித்து, அவர்கள் தெரிவிக்கவில்லை என்பதை, முகாந்திரமாக எடுத்துக் கொள்ள முடியாது. பாதிக்கப்பட்ட ஒருவர், 13 வயது சிறுமி. மனிதாபிமானம் இன்றி, அந்த சிறுமியையும் கூட்டிச் சென்று, பாலியல் வன்முறை செய்துள்ளனர். அதோடு நிற்காமல், சந்தன கட்டை கடத்துபவர்கள் என, அவர்கள் மீது வண்ணம் பூசியுள்ளனர். தன்னை தாக்கியதாகவும், பாலியல் வன்முறை செய்ததாகவும், 8 மாத கர்ப்பிணி வாக்குமூலம் அளித்துள்ளார். அதனால், சந்தன கட்டை கடத்தல் வழக்கில் இருந்து தப்பிக்க, பொய் குற்றச்சாட்டு கூறுவதாக தெரிவிப்பதை ஏற்க முடியாது.
தலைமை கான்ஸ்டபிள் அளித்த சாட்சியம், அதிர்ச்சியாக உள்ளது. நள்ளிரவு, 12:00 மணிக்கு, பெண்களை ஆஜர்படுத்தியதாகவும், அவர்கள் யாருடனும் பேசவில்லை என்றும், சோகமாக இருந்ததாகவும், பாலியல் வன்முறை செய்யப்பட்டதாக, ஒரு வாரத்துக்கு பின் தெரிவித்ததாகவும், பெண் கான்ஸ்டபிள் வாக்குமூலம் அளித்துள்ளார்.
மறைத்து வைக்கப்பட்ட சந்தன கட்டைகளை கண்டுபிடிக்க, பெண்களை கூட்டிச் சென்றதாக கூறினால், பெண் கான்ஸ்டபிளை உடன் அழைத்து சென்றிருக்க வேண்டும் அல்லது, கிராமத்தில் உள்ள ஆண்களை உடன் அழைத்து சென்றிருக்க வேண்டும். அருகில் பெண் கான்ஸ்டபிள் இருந்தும், அவரை அழைக்கவில்லை. 18 இளம் வயது பெண்களை தேர்ந்தெடுத்துள்ளனர். ஆண் யாரையும் கூட்டிச் செல்லவில்லை. இதிலிருந்தே, அவர்களின் நோக்கம் தெரிகிறது.
சோதனைக்காக சென்றதாக கூறப்படும் குறிக்கோள், சட்டப்படியானதாக இருக்கலாம் என அனுமானித்தாலும், அவர்கள் வரம்பு மீறியுள்ளனர். ஒட்டுமொத்த கிராமத்தையும் அழிக்கும் விதமாக, சட்டவிரோத செயல்களில் ஈடுபட்டுள்ளனர். பாதிக்கப்பட்ட பெண்களுக்கு எதிரான வழக்குகள் பொய்யானது என்பதால், அவற்றை இந்த நீதிமன்றம் ரத்து செய்தது. அதிகாரிகள் செய்த குற்றத்தில் இருந்து தப்பிக்க, சந்தன கடத்தல் என, பொய் வழக்கு போட்டது, இதில் இருந்து உறுதியாகிறது.
ஆதாரங்களை முழுமையாக பரிசீலனை செய்ததில், மனுதாரர்கள் குற்றம் புரிந்தது தெரிகிறது. வாச்சாத்தி கிராமத்தினரின் சொத்துக்களை சேதப்படுத்தி, கால்நடைகளை வெட்டி, சமைத்து சாப்பிட்டுள்ளனர். மூன்று நாட்கள் இவ்வாறு செய்துள்ளனர். கிராமத்தில் உள்ளவர்கள், பழங்குடியின சமூகத்தைச் சேர்ந்தவர்கள். அதிகாரிகளின் செயல், அலுவல் ரீதியான கடமை அல்ல; சட்டவிரோத செயல்களை, அப்பாவி கிராமத்தினருக்கு எதிராக நடத்தி உள்ளனர்.
கலெக்டர், மாவட்ட வன அதிகாரி, எஸ்.பி., உள்ளிட்ட அதிகாரிகளுக்கு, உண்மையான குற்றவாளிகள் யார் என்பது தெரிந்தும், அவர்களுக்கு எதிராக நடவடிக்கை எடுக்காமல் பாதுகாத்திருப்பது, சாட்சியங்களில் இருந்து தெளிவாகிறது. மேல்முறையீட்டாளர்கள் அனைவரும் குற்றம் புரிந்துள்ளனர் என்பதை, அரசு தரப்பு நிரூபித்துள்ளது என்ற முடிவுக்கு, இந்த நீதிமன்றம் வந்துள்ளது.
சந்தன கட்டைகளை வெட்டி கடத்துவதாக, கிராமத்தினருக்கு எதிராக, அரசு தரப்பு குற்றம் சாட்டுகிறது. அப்படியென்றால், அங்கு சோதனை சாவடி அமைக்க, அரசு நடவடிக்கை எடுத்திருக்க வேண்டும். ஆனால், கடத்தலை தடுக்க, கண்காணிக்க, வனத் துறை அதிகாரிகள், எந்த தீவிர நடவடிக்கையும் எடுக்காதது, உண்மையான கடத்தல்காரர்களுடன் அதிகாரிகள் கைகோர்த்திருப்பதையே காட்டுகிறது.
அப்போதைய அரசு, பழங்குடியின பெண்களை பாதுகாக்க தவறி விட்டது; தவறு செய்த அதிகாரிகளை தான் பாதுகாத்துள்ளது; உண்மையான கடத்தல்காரர்களை கண்டுபிடிக்கவும் தவறி விட்டது.இவ்வாறு நீதிபதி உத்தரவிட்டார்.
பழங்குடியினத்தவர் மகிழ்ச்சி
நீதிமன்ற தீர்ப்பு குறித்து பாதிக்கப்பட்ட பெண்கள் கூறுகையில், 'வாச்சாத்தி வழக்கில் நல்ல தீர்ப்பு கிடைத்துள்ளது. நீண்ட நாட்கள் நாங்கள் அனுபவித்த கொடுமைகளுக்கு சரியான தீர்ப்பு வழங்கிய, சென்னை உயர்நீதிமன்ற நீதிபதிக்கு வாச்சாத்தி மக்கள் சார்பில் நன்றி தெரிவிக்கிறோம்' என்றனர்.
தீர்ப்பு வழங்கப்படுவதை முன்னிட்டு, ஊரின் மையப்பகுதியில் உள்ள ஆலமரத்தின் அடியில், காலை, 10:00 மணி முதல் பாதிக்கப்பட்ட பெண்கள் அமர்ந்தனர். தீர்ப்பு வந்தவுடன் அங்கிருந்த மாரியம்மன் கோவிலில் அம்மனை வழிபட்டனர்.
தொடர்ந்து, 11:20 மணிக்கு தமிழ்நாடு மலைவாழ் மக்கள் சங்க மாநிலத்தலைவர் டில்லிபாபு மற்றும் மார்க்சிஸ்ட் கம்யூ., நிர்வாகிகள் வாச்சாத்திக்கு வந்தனர். அதன்பின், பட்டாசுகள் வெடித்து, பாதிக்கப்பட்ட பெண்கள் இனிப்பு வழங்கியும், ஊட்டியும் தங்களது மகிழ்ச்சியை வெளிப்படுத்தினர்.
பி.டில்லிபாபு, மாநில தலைவர், மலைவாழ் மக்கள் சங்கம்:
வரலாற்று சிறப்புமிக்க தீர்ப்பாக இதை நாங்கள் வரவேற்கிறோம். 12 ஆண்டுகள் நடந்த மேல்முறையீடு வழக்கில், நீதிபதி வேல்முருகன், நேரடியாக வாச்சாத்திக்கு வந்து ஆய்வு மேற்கொண்டு பாதிக்கப்பட்ட பெண்கள் மற்றும் மக்களிடம் விசாரித்து சென்றார். அவர் நேரிடையாக வந்து சென்றது, எங்களுக்கு தன்னம்பிக்கையை ஏற்படுத்தியது. இந்த தீர்ப்பு, தமிழகம் முழுவதும் இருக்கும் ஆதிவாசி மக்கள், பழங்குடியின மக்களுக்கு தன்னம்பிக்கையை ஏற்படுத்தி உள்ளது.