வைகை அணை நிரம்பி வீணாகும் உபரி நீர்: கவலையில் விவசாயிகள்
வைகை அணை நிரம்பி வீணாகும் உபரி நீர்: கவலையில் விவசாயிகள்
ADDED : ஜன 08, 2024 05:39 AM

ஆண்டிபட்டி : தேனி மாவட்டம் வைகை அணை நீர் மட்டம் முழு அளவில் 71 அடியாக உயர்ந்து நிரம்பியதால் உபரி நீர் ஆற்றின் வழியாக சென்று இரு நாட்களாக வீணாகிறது.
வைகை அணைக்கு பெரியாறு, தேனி முல்லை ஆறு, போடி கொட்டக்குடி ஆறு, வருஷநாடு மூல வைகை ஆறு மூலம் நீர்வரத்து கிடைக்கிறது. வடகிழக்கு பருவ மழையால் அணை நீர்மட்டம் நவ., 9ல் 70.51 அடியாக உயர்ந்தது. உபரியாக வந்த பல ஆயிரம் கன அடி நீர் ஆற்றின் வழியாக திறந்து விடப்பட்டது.
தொடர்ந்து நவ.,10ல் மதுரை, திண்டுக்கல் பாசனத்திற்கும், நவ.,23 முதல் மதுரை, ராமநாதபுரம், சிவகங்கை பாசனத்திற்கும் நீர் திறந்து விடப்பட்டது. பின் டிச.,8ல் அணை நீர்மட்டம் 62.86 அடியாக குறைந்தது.
ஆற்றில் உபரிநீர்
தேனி மாவட்டத்தில் மீண்டும் பெய்த மழையால் அணை நீர்மட்டம் உயர்ந்து ஜன., 6 அதிகாலை 4:45 மணிக்கு முழு அளவான 71 அடியாக உயர்ந்தது. அணை நிரம்பியதால் உபரியாக வந்த நீர் ஆற்றில் திறந்து விடப்பட்டது. துவக்கத்தில் வினாடிக்கு 3106 கன அடியாக இருந்த உபரி நீரின் அளவு அன்று இரவு 11:30 மணிக்கு வினாடிக்கு 4315 கன அடியாக உயர்ந்தது.
நேற்று காலை 10:00 மணிக்கு வினாடிக்கு 5457 கன அடியாகவும் உயர்ந்தது.
இரு மாதங்களாக அணையில் இருந்து பாசனக் கால்வாய், ஆற்றின் வழியாக நீர் தொடர்ந்து சென்றதால் விவசாயிகளின் பாசனத்திற்கான நீர் தேவை பூர்த்தியாகி உள்ளது. இரு நாட்களில் அணையில் இருந்து ஆற்றின் வழியாக வெளியேறும் பல ஆயிரம் கன அடி நீர் வீணாகியும் உள்ளது.
துார்வாராத அணை
விவசாயிகள் கூறியதாவது: எங்கள் கோரிக்கையை ஏற்று அணையை தூர்வாரி மண் படிமங்களை அப்புறப்படுத்தி இருந்தால் கூடுதலான நீரை தேக்கி வைத்திருக்க முடியும். 50 ஆண்டுகளுக்கும் மேலாக தூர்வாராததால் அணையில் தேங்க வேண்டிய நீர் உபரியாக வெளியேறி வீணாகிறது என்றனர்.