ADDED : நவ 15, 2024 03:35 AM

சென்னை: ம.தி.மு.க., பொதுச்செயலர் வைகோவுக்கு தோளில் பொருத்தப்பட்டிருந்த, 'பிளேட்' அகற்றப்பட்டது.
கட்சி நிர்வாகி மகள் திருமணத்தில் பங்கேற்பதற்காக, கடந்த மே 25ம் தேதி, திருநெல்வேலியில் உள்ள தன் சகோதரர் வீட்டிற்கு, ம.தி.மு.க., பொதுச் செயலர் வைகோ, 80, சென்றிருந்தார். அங்கு எதிர்பாராதவிதமாக கால் இடறி விழுந்ததில், அவருக்கு இடது தோளில் லேசான எலும்பு முறிவு ஏற்பட்டது. பின், சென்னை திரும்பிய அவர், அப்பல்லோ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.
பரிசோதனையில் அவரது இடது தோளில், மூன்று இடத்தில் எலும்பு உடைந்திருப்பது கண்டறியப்பட்டது. அம்மாதம், 29ம் தேதி அறுவை சிகிச்சை செய்யப்பட்டு, 'டைட்டானியம் பிளேட்' வைக்கப்பட்டது. சில நாட்கள் வீட்டில் ஓய்வில் இருந்த வைகோ, பின் கட்சி நிகழ்ச்சிகள், பொது நிகழ்ச்சிகளில் பங்கேற்று வருகிறார்.
இந்நிலையில், தோளில் வைக்கப்பட்ட பிளேட்டை அகற்றுவதற்காக, நேற்று முன்தினம் இரவு வைகோ, அப்பல்லோ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அங்கு, பரிசோதனைக்கு பின், அவரது தோளில் பொருத்தப்பட்டிருந்த, 'பிளேட்' அகற்றப்பட்டது. அதற்கான சிகிச்சை முடிந்து, நேற்று பிற்பகலில் வீடு திரும்பினார்.