'டவுட்' தனபாலு: வைகோ கட்சி மாறி, உங்க கட்சியும் மாறிடுச்சு
'டவுட்' தனபாலு: வைகோ கட்சி மாறி, உங்க கட்சியும் மாறிடுச்சு
ADDED : மார் 11, 2024 12:25 AM

மக்கள் நீதி மய்யம் கட்சி தலைவர் கமல்ஹாசன்:
'லோக்சபா தேர்தலில் நான் போட்டியிடவில்லை. தி.மு.க., கூட்டணிக்கு ஆதரவாக தமிழகம் முழுதும் பிரசாரம் செய்ய இருக்கிறேன். தி.மு.க., கூட்டணிக்கு, எங்களின் எல்லா ஒத்துழைப்பும் கிடைக்கும். இது, பதவிக்கான விஷயமல்ல; நாட்டுக்கான விஷயம். எனவே, எங்கு கை குலுக்க வேண்டுமோ, அங்கு கை குலுக்கியுள்ளேன்.
டவுட் தனபாலு:
அட, மூணு, 'சீட்' கேட்டு முட்டி, மோதிட்டு இருந்த உங்களை, இப்படி ஒரே ஒரு ராஜ்யசபா சீட்டுல சாய்ச்சுட்டாங்களே... தி.மு.க., வின் ஒரு அணியா வைகோ கட்சி மாறிய மாதிரி, உங்க கட்சியும் மாறிடுச்சு என்பதில், 'டவுட்'டே இல்லை!
சிறு, குறு தொழில் துறை அமைச்சர் அன்பரசன்:
'தி.மு.க.,வை ஒழித்து விடுவோம்' என்று பிரதமர் மோடி கூறியுள்ளார். தி.மு.க., ஒன்றும் சாதாரண இயக்கம் இல்லை. பலர் உயிர் தியாகம் செய்தும், ரத்தம் சிந்தியும் வளர்த்த இயக்கம். 'தி.மு.க.,வை ஒழிப்பேன்' என்று கூறியவர்கள் தான் ஒழிந்து போனார்கள். நான் அமைச்சர் என்பதால் அடக்கி வாசிக்கிறேன்; இல்லையெனில், பீஸ் பீஸாக ஆக்கிடுவேன்.
டவுட் தனபாலு:
இப்பவும் ஒண்ணும் கெட்டு போயிடலை... உங்களது வீரதீர பிரதாபங்களை காட்டுறதுக்கு, அமைச்சர் பதவி தான் தடையா இருக்குது என்றால், அதை ராஜினாமா பண்ணிட்டு, மோடிக்கு எதிரா களத்துல குதிச்சா, 'டவுட்'டே இல்லாம உங்க கட்சி விசுவாசத்தை பாராட்டலாம்!
பா.ஜ., மகளிர் அணி தேசிய தலைவர் வானதி சீனிவாசன்:
தி.மு.க.,வில் போட்டியிட சீட் கிடைக்காமல், மக்கள் நீதி மய்யம் கட்சி தலைவர் கமல், பிரசாரப் பணியை ஏற்றுக்கொண்டுள்ளார். அதையாவது, குறையின்றி செய்ய வேண்டும். அதற்கு ஈடாக, அவருக்கு ராஜ்யசபா இடம் ஒதுக்கப்பட்டுள்ளது. அவரது பேச்சுக்கும், செயலுக்கும் எவ்வளவு வித்தியாசங்கள் உள்ளன என்பதை, மக்களே புரிந்து கொள்வர்.
டவுட் தனபாலு:
இந்தியன் படத்தில், இதே கமலை, நடிகர் கவுண்டமணி, 'இங்க சந்துருன்னு ஒரு மானஸ்தன் இருந்தான்... அவனை எங்க காணோம்'னு காமெடி பண்ணுவாரு... அந்த காமெடி இப்ப, 'டிராஜெடி' ஆகிடுச்சு என்பதில், 'டவுட்'டே இல்லை!

