ADDED : நவ 13, 2024 04:18 AM

சென்னை: சென்னை எழும்பூர் - திருநெல்வேலி, 'வந்தே பாரத்' ரயிலில், பயணியர் முன்பதிவு, 100 சதவீதத்துக்கும் மேல் அதிகரிப்பதால், 16 பெட்டிகள் உடைய ரயிலாக மாற்ற பரிந்துரை செய்யப்பட்டு உள்ளது.
இந்த ரயிலில் ஏழு, 'ஏசி சேர் கார்' பெட்டிகள், ஒரு, 'எக்ஸிகியூட்டிவ்' பெட்டி என, மொத்தம் எட்டு பெட்டிகளில், 596 இடங்கள் உள்ளன. அதனால், முன்பதிவு செய்யும் பெரும்பாலான பயணியருக்கு டிக்கெட் கிடைப்பதில்லை. எனவே இதை, 16 பெட்டிகள் உடைய வந்தே பாரத் ரயிலாக இயக்க வேண்டும் என, சென்னை ரயில்வே கோட்ட வணிக பிரிவு, தெற்கு ரயில்வேக்கு பரிந்துரை செய்துள்ளது.
இதுகுறித்து, தெற்கு ரயில்வே அதிகாரிகள் கூறியதாவது: எழும்பூர் - திருநெல்வேலி வந்தே பாரத் ரயிலில், பயணியர் எண்ணிக்கை பல மடங்கு அதிகமாக இருக்கிறது. தொடர் விடுமுறை மற்றும் பண்டிகை காலங்களில் மட்டுமல்லாமல், வழக்கமான நாட்களிலும் முன்பதிவு அதிகமாகவே இருக்கிறது.
தற்போதுள்ள எட்டு பெட்டிகள் போதுமானதாக இல்லை. எனவே, 16 பெட்டி ரயிலாக மாற்ற பரிந்துரை செய்யப்பட்டுள்ளது. உரிய ஒப்புதல் கிடைத்தவுடன், 16 பெட்டிகள் இணைக்கப்படும். இவ்வாறு அவர்கள் கூறினர்.