'வந்தே மாதரம் 150': தமிழக அரசு விழாவாக கொண்டாட கோரிக்கை
'வந்தே மாதரம் 150': தமிழக அரசு விழாவாக கொண்டாட கோரிக்கை
ADDED : நவ 06, 2025 03:32 PM

சென்னை: தமிழக பா.ஜ., செய்தி தொடர்பாளர் ஏ.என்.எஸ். பிரசாத் வெளியிட்ட அறிக்கையில் கூறியுள்ளதாவது: பிரதமர் நரேந்திர மோடியின் அழைப்பை ஏற்று, இந்தியாவின் தேசிய பாடலான வந்தே மாதரம் பாடலின் 150வது ஆண்டு விழா கொண்டாட்டத்தில் தமிழக மக்கள் அனைவரும் தங்கள் இல்லங்களில் உள்ள குழந்தைகள் மாணவர்கள் அனைவரையும் ஊக்குவித்து குடும்பத்துடன் கொண்டாட வேண்டும்.
இந்திய சுதந்திரப் போராட்டத்தில் பாரதத்தின் அனைத்து மக்களுக்கும் தேசபக்தியை ஊட்டி வளர்த்த, வந்தே மாதரம் பாடலின் 150வது ஆண்டு விழா பள்ளி கல்லூரிகளில் நடத்த தமிழக அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும். இந்த தேச பக்தி திருவிழாவில் பங்கு கொள்ளும் வகையில் தமிழக முதல்வர் ஸ்டாலின் உரிய வழிகாட்டலை அனைத்து துறைகளுக்கும் வழங்க வேண்டும்.
சாதி, மத, இன பாகுபாடு இல்லாமல் கட்சி வேதங்களை மறந்து, அரசியலுக்கு அப்பாற்பட்டு, பல நூறு ஆண்டுகளைக் கடந்த இந்திய சுதந்திரப் போராட்டத்தின் தியாக வரலாற்றையும், 75 ஆண்டுகளுக்கு மேலான இந்திய சுதந்திரத்தின் மகிழ்ச்சியையும் வெற்றியையும் மனமகிழ்ந்து கொண்டாடும் வகையில், தமிழக அரசும்'வந்தே மாதரம்' திருவிழாவை தமிழக மக்கள் அனைவரும் கொண்டாடி மகிழ அனைத்து ஏற்பாடுகளையும் செய்ய வேண்டும்.
தமிழக பா.ஜ.,வும் வந்தேமாதரம் பாடலின் 150 வது விழா திருநாளை சிறப்பாக தமிழக மக்களுடன் இணைந்து கொண்டாட இருக்கிறது. இவ்வாறு அதில் கூறியுள்ளார்.

