'வி.சி., மாநாடு: ஸ்டாலின், திருமா நாடகம்': மத்திய இணை அமைச்சர் முருகன்
'வி.சி., மாநாடு: ஸ்டாலின், திருமா நாடகம்': மத்திய இணை அமைச்சர் முருகன்
ADDED : செப் 29, 2024 05:46 AM

சென்னை: ''மது ஒழிப்பு மாநாடு என்பது முதல்வர் ஸ்டாலினும், வி.சி., தலைவர் திருமாவளவனும் இணைந்து நடத்தும் நாடகம்,'' என, மத்திய தகவல் ஒலிபரப்புத் துறை இணை அமைச்சர் முருகன் குற்றஞ்சாட்டினார்.
மத்திய புவி அறிவியல் அமைச்சகம் சார்பில், 'துாய்மையே சேவை' என்ற இயக்கம், பிரதமர் மோடி பிறந்த நாளான செப்டம்பர் 17ல் துவங்கப்பட்டது. வரும் அக்டோபர் 2ம் தேதி காந்தி ஜெயந்தி வரை, இந்த இயக்கம் நடக்கவுள்ளது.
இந்த ஆண்டு, 'இயற்கையின் துாய்மை, கலாசார துாய்மை' என்ற கருப்பொருளுடன் பல்வேறு நிகழ்ச்சிகளை மத்திய அரசு நடத்தி வருகிறது.
அதன்படி, சென்னை துார்தர்ஷன் தொலைக்காட்சி அலுவலகத்தில் நேற்று நடந்த, 'துாய்மையே சேவை' இயக்க நிகழ்வில், மத்திய இணை அமைச்சர் முருகன் கலந்து கொண்டார். அப்போது, துார்தர்ஷன் துணை தலைமை இயக்குனர் கிருஷ்ணதாஸ் உள்ளிட்ட அதிகாரிகள், ஊழியர்களுடன் இணைந்து, 'துாய்மையான இந்தியாவை உருவாக்குவோம்' என, உறுதிமொழி எடுத்துக் கொண்டனர்.
துாய்மை பணியாளர்களுக்கு பொன்னாடை அணிவித்து பரிசுகள் வழங்கி, மத்திய அமைச்சர் முருகன் மரியாதை செய்தார்.
பின், அவர் அளித்த பேட்டி:
சென்னை துார்தர்ஷன் அலுவலகத்தில், பாரதத் தாயின் பெயரில் மரக்கன்றுகளை நட்டோம். இந்தியாவின் பசுமைப் பரப்பை அதிகரிக்க வேண்டும். துாய்மை குறித்து மக்களிடம் விழிப்புணர்வை ஏற்படுத்த வேண்டும் என்பதே இத்திட்டத்தின் நோக்கம்.
உதயநிதி துணை முதல்வர் ஆவதால், தமிழகத்திற்கு எந்த நன்மையும் ஏற்படப் போவதில்லை; குடும்ப ஆட்சி தான் மேலும் வலுப்படும். தமிழகத்தில் 'என்கவுன்டர்' சம்பவங்கள் அதிகரித்து வருகின்றன. யாரை கண்டாலும் துப்பாக்கியில் போலீஸ் சுட்டால், நீதிமன்றங்கள், சட்டங்கள் எதற்கு?
துப்பாக்கியால் சுடுவதால் சட்டம் - ஒழுங்கை சரி செய்ய முடியாது. சட்டம் - ஒழுங்கை பாதுகாப்பதில் தோல்வி அடைந்துள்ள தி.மு.க., அரசு, அதை மறைக்கவே என்கவுன்டர் நடத்துகிறது.
பீஹார், குஜராத் போன்ற மாநிலங்களில் மதுவிலக்கு இருக்கும்போது, தமிழகத்திலும் மதுவிலக்கை அமல்படுத்த முடியும். ஆனால், மதுபான ஆலைகளை தி.மு.க.,வினர் நடத்துவதால், டாஸ்மாக் கடைகளை தி.மு.க., அரசு மூடவே மூடாது.
இது திருமாவளவனுக்கும் தெரியும். விடுதலை சிறுத்தைகள் நடத்தும் மது ஒழிப்பு மாநாடு என்பது, முதல்வர் ஸ்டாலினும், திருமாவளவனும் தமிழக மக்களை ஏமாற்றும் நாடகம்.
இவ்வாறு அவர் கூறினார்.