மதுவை ஒழிக்க மத்திய சட்டம் வேண்டும் வி.சி., மாநாட்டில் கட்சிகள் வலியுறுத்தல்
மதுவை ஒழிக்க மத்திய சட்டம் வேண்டும் வி.சி., மாநாட்டில் கட்சிகள் வலியுறுத்தல்
ADDED : அக் 03, 2024 12:35 AM
வி.சி., சார்பில் உளுந்துார் பேட்டையில் நேற்று நடந்த மது, போதை பொருள் ஒழிப்பு மகளிர் மாநாட்டில், வி.சி., பொதுச்செயலரும், எம்.பி.,யுமான ரவிக்குமார்: அண்ணாதுரை ஆட்சி பொறுப்பேற்றதும் 1 ரூபாய்க்கு 3 படி அரிசி போடுவோம் என்றார். ஆனால், முடியாமல் போனது.
மதுவிலக்கை அமல்படுத்தியிருந்தால் அதை செய்திருக்க முடியும். ஆனால், மக்கள் வாழ்வாதாரம் கருதி அதை செய்யவில்லை. கருணாநிதியும், 1971ல் மதுக்கடையை திறந்தார்; ஆனால், மக்கள் கோரிக்கையை ஏற்று 1974ல் மூடினார்.
இந்தியாவில் மது அருந்துவோர் 22 சதவீதம், தமிழகத்தில் 32 சதவீதம் என உள்ளனர்.
இந்திய அளவில் விதவைகள் 6.4 சதவீதம்; ஆனால் தமிழகத்தில் 9.7 சதவீதம் உள்ளனர். மதுப்பழக்கத்தால் தான் இந்த சமூக அவலம் உள்ளதை ஆய்வறிக்கை கூறுகிறது. இந்த அவலத்தை ஒழிக்க மாநில அரசு மட்டுமல்ல; மத்திய அரசுக்கும், மக்களுக்கும், கட்சிகளுக்கும், பொதுநல அமைப்புகளுக்கும் பொறுப்புள்ளது.
தி.மு.க., கூட்டணி கட்சித் தலைவர்கள் பேசியதாவது:
தி.மு.க., அமைப்பு செயலர் ஆர்.எஸ்.பாரதி: ஒவ்வொரு பெண்ணும் ஒரு உறுதிமொழி ஏற்க வேண்டும். ஒவ்வொருவரும் 10 பேரை குடிக்காமல் இருக்க மனமாற்றம் செய்ய வேண்டும். அப்படி செய்தால், மதுக் கடைகளை மூட வேண்டாம். அது தானாகவே மூடப்படும் நிலை வரும்.
தி.மு.க. செய்தி தொடர்பாளர் இளங்கோவன்: மது போதை, மனிதனின் மதிப்பை குறைக்கிறது. இந்தியா முழுதும் மது விலக்கை அமல்படுத்த வேண்டும். புதுச்சேரி, ஆந்திரா, கேரளா, கர்நாடகா உள்ளிட்ட அண்டை மாநிலங்களில் மது விற்பனை செய்யப்படுகிறது.
இங்கு டாஸ்மாக் கடைகள் மூடினாலும், மற்ற மாநிலங்களுக்கு சென்று மது குடிப்பர்.
இந்தியா முழுதும் மது விலக்கை அமல்படுத்த வேண்டும் என்பது தி.மு.க.,வின் நோக்கம்.
தமிழகத்தில் மதுவிலக்கு இருந்தபோது, சுற்றியுள்ள புதுச்சேரி, கர்நாடகா, கேரளா, ஆந்திரா ஆகிய மாநிலங்களில் மது இருந்தது. அதனால், தமிழகத்திலிருந்து மற்ற மாநிலங்களுக்கு சென்று குடித்தனர். இந்தியா முழுதும் மதுவிலக்கு கொண்டு வர வேண்டும். அப்போதுதான் மதுவை ஒழிக்க முடியும்.
காங்கிரஸ் எம்.பி., சுதா ராமகிருஷ்ணன்: ஒடுக்கப்பட்ட மக்களின் முன்னேற்றத்திற்கு மது தடையாக உள்ளது. எனவே, மது ஒழிக்கப்பட வேண்டும். மது இல்லாத தமிழகத்தை உருவாக்கிய பெருமை காமராஜருக்கு உண்டு.
இந்தியாவிலேயே முதன்முதலில் மதுவிலக்கை அமல்படுத்தியவர் ராஜாஜி. ஒட்டுமொத்த சமுதாயமும் இணைந்து செயல்பட்டால் மதுவை ஒழிக்க முடியும்.
மார்க்சிஸ்ட் மத்தியக் குழு உறுப்பினர் வாசுகி: 'தொண்டர்களுக்கு மது வாங்கி கொடுக்க மாட்டோம்; மதுபான ஆலை அதிபர்களிடம் இருந்து நன்கொடை வாங்க மாட்டோம்' என, அரசியல் கட்சிகள் உத்தரவாதம் அளிக்க வேண்டும்.
இந்திய கம்யூனிஸ்ட் மூத்த தலைவர் ஆனி ராஜா: தேசத்தின் வளர்ச்சிக்கே மது தடையாக உள்ளது. இப்போது மது மட்டுமல்லாது, மற்ற போதைப் பொருட்கள் கிராமங்கள் வரை வந்து விட்டன. பள்ளிகளுக்கு அருகே, பிரதான சாலைகளில் மதுக் கடைகளை முதலில் மூட வேண்டும்.
தமிழக வாழ்வுரிமை கட்சியின் செயலர் முத்துலட்சுமி வீரப்பன்: என் கணவர் வீரப்பன், 30 ஆண்டுகள் காட்டிலேயே இருந்தாலும் மது, சிகரட் பழக்கம் இல்லாமல் இருந்தார். மக்கள் மது குடிப்பதை நிறுத்தினால், அதை காய்ச்சுபவர்கள் நிறுத்திவிடுவர்.
பெரும்பாலும் வன்னியர், தலித் சமூகம் தான் மது குடிக்கின்றனர். பிற சமுகத்தினரின் எண்ணிக்கை குறைவு என்பதால், அதிகம் வெளியே தெரிவதில்லை.
தமிழகத்தில் பல லட்சம் விதவைகள் அதிகரித்துள்ளனர். உடலை கெடுக்கும் கஞ்சா, மது பழக்கத்தை கைவிடவும், மது விலக்கு கொண்டு வரவும் போராட வேண்டும்.
இவ்வாறு அவர்கள் பேசினர்.