தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/செய்திகள்/தமிழகம்/ எங்களின் வலிமைக்கேற்ப தொகுதிகள் வேண்டும்; கேட்கிறார் திருமாவளவன்

எங்களின் வலிமைக்கேற்ப தொகுதிகள் வேண்டும்; கேட்கிறார் திருமாவளவன்

எங்களின் வலிமைக்கேற்ப தொகுதிகள் வேண்டும்; கேட்கிறார் திருமாவளவன்


UPDATED : மார் 03, 2026 03:50 PM

ADDED : மார் 02, 2026 11:37 AM

Follow on GoogleFavourite on Google

UPDATED : மார் 03, 2026 03:50 PM ADDED : மார் 02, 2026 11:37 AM


Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

சென்னை: 'நாங்கள் பேரம் பேசும் கட்சி இல்லை. அதிகாரப்பகிர்வு என்பது எங்களின் வலிமைக்கு ஏற்ப அமைய வேண்டும்,' என்று திமுகவுடன் நடத்திய தொகுதிப் பங்கீடு பேச்சுவார்த்தைக்கு பிறகு, விசிக தலைவர் திருமாவளவன் தெரிவித்துள்ளார்.

செய்தியாளர்களிடம் அவர் பேசியதாவது; விசிக சார்பில் பேச்சுவார்த்தை நடத்தினோம். 2026 சட்டசபை பொதுத்தேர்தல் வழக்கமான, சராசரியான பொதுத்தேர்தல் அல்ல. இந்தத் தேர்தலில் வலதுசாரி சக்திகளை காலூன்ற விடாமல் தடுக்க வேண்டும் என்ற பொறுப்புணர்வோடு, மதச்சார்பற்ற முற்போக்கு கூட்டணியின் வெற்றியை 100 சதவீதம் உறுதிபடுத்த வேண்டும் என்ற அக்கறையோடு, இந்தக் கூட்டணியில் விசிக ஒரு அங்கம் என்ற உரிமை உணர்வுடன், எங்களின் கருத்துக்களை பகிர்ந்து கொண்டோம்.

நாங்கள் பேரம் பேசும் கட்சியாக இல்லை. திமுக தலைமையிலான கூட்டணியை வெற்றி பெறச் செய்ய வேண்டும். இது தமிழகத்திற்கான வெற்றி, தமிழக மக்களுக்கான வெற்றி, சமூக நீதி அரசியலுக்கான வெற்றி என்ற புரிதலோடு, எங்களின் அதிகாரப்பகிர்வு குறித்து எங்களின் கருத்துக்களை கேட்டுக் கொண்டார்கள்.

இந்தப் பேச்சுவார்த்தை சுமூகமான முறையில், அமைதியான முறையில் நடந்திருக்கிறது. எந்தெந்த தொகுதிகள் குறித்து பேசவில்லை. எங்களுக்கான அதிகாரப்பகிர்வு என்பது எங்களின் வலிமைக்கு ஏற்ப அமைய வேண்டும். எங்கள் பங்களிப்புக்கு ஏற்ப அமைய வேண்டும் என்பதை தெளிவுபடுத்தி இருக்கிறோம். எத்தனை தொகுதிகள் என்பது குறித்தும் திமுக குழுவுக்கு நாங்கள் தெரியப்படுத்தியுள்ளோம். அது உறுதியான பிறகு, வெளியிடுவோம்.

ராஜ்யசபா சீட் ஏதும் கேட்கவில்லை. புதுச்சேரியில் தொகுதிகளை ஒதுக்க கேட்டிருக்கிறோம். ஒரு பொதுத் தொகுதி உள்பட 3 தொகுதிகளைக் கேட்டுள்ளோம். தலைவரோடு கலந்து பேசி எங்களுக்கு அழைப்பு விடுப்பதாக சொல்லியிருக்கிறார்கள்.

தமிழகத்தைப் பொறுத்தவரையில் மோடி வித்தை எடுபடாது. எத்தனை முறை வந்தாலும், என்னென்ன பேசினாலும், அது தமிழக அரசியலில் எடுபடாது. தமிழகம் என்பது வேறு, இந்தியாவில் உள்ள பிற மாநிலங்கள் வேறு. 2026 தேர்தலில் தமிழக மக்கள் பாஜவுக்கு மீண்டும் உணர்த்துவார்கள். இங்கு மதவாத அரசியல் மற்றும் ஜாதி அரசியலுக்கு இடமில்லை. தமிழக மக்கள் இதனை அனுமதிக்கமாட்டார்கள் என்பதை உறுதி செய்ய வேண்டிய தேவை உள்ளது.

தொகுதி பங்கீட்டில் அதிகாரப் பகிர்வு என்பது அமைச்சரவையில் பங்கு கேட்பது கிடையாது. தொகுதி எண்ணிக்கையைத் தான் அதிகாரப் பகிர்வு என்னும் பெயரில் சொல்கிறோம். தொகுதி பங்கீட்டில் இழுபறி ஏற்பட்டாலும் காங்கிரஸ் திமுக கூட்டணியில் தான் இருக்கும். இந்தக் கூட்டணி கட்டுக்கோப்பாக தேர்தலை சந்திக்கும். இவ்வாறு அவர் கூறினார்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us