அரசியல் ஒப்பனைக்கு ஆயுள் கிடையாது; விஜய் பற்றி வி.சி.க., ரவிக்குமார் விமர்சனம்
அரசியல் ஒப்பனைக்கு ஆயுள் கிடையாது; விஜய் பற்றி வி.சி.க., ரவிக்குமார் விமர்சனம்
ADDED : டிச 07, 2024 08:22 AM

சென்னை: விஜய் கட்சி ஆரம்பித்ததே எங்களுடன் கூட்டணி வைக்கத் தான் போல என்று விடுதலை சிறுத்தைகள் பொதுச் செயலாளர் ரவிக்குமார் விமர்சித்து உள்ளார்.
சென்னை நந்தம்பாக்கத்தில் எல்லோருக்குமான தலைவர் அம்பேத்கர் என்ற நூல் வெளியீட்டு விழா நடைபெற்றது. விழாவில் அம்பேத்கர் பேரன் ஆனந்த் டெல்டும்டே, த.வெ.க., தலைவரும் நடிகருமான விஜய், முன்னாள் நீதிபதி கே.சந்துரு, விடுதலை சிறுத்தைகள் துணை பொதுச் செயலாளர் ஆதவ் அர்ஜூனா உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.
இந்த விழாவின் மேடையில் பேசிய நடிகர் விஜய், திருமாவளவனால் நிகழ்ச்சியில் பங்கேற்க முடியாமல் போனது. அம்பேத்கரின் புத்கக வெளியீட்டு விழாவில் கூட கலந்து கொள்ள முடியாத அளவுக்கு கூட்டணி கட்சிகள் சார்ந்து எவ்வளவு நெருக்கடி இருக்கும் என்று என்னால் யூகிக்க முடிந்தாலும் அவர் மனது முழுக்க, முழுக்க நம்முடன் தான் இருக்கும் என்று கூறி இருந்தார்.
அவரின் பேச்சு, சமூக வலைதளத்தில் பேசு பொருளானது. திருமாவளவன் கலந்து கொள்ளாததற்கு தி.மு.க.,வும், அதன் கூட்டணிக் கட்சிகளே காரணம் என்ற பேச்சுக்கு பல்வேறு தரப்பினரும் எதிர்வினையாற்றினர். திருச்சியில் செய்தியாளர்களிடம் பேசிய திருமாவளவன், விஜய் பேச்சில் தமக்கு உடன்பாடில்லை என்று விளக்கம் அளித்தார்.
இந் நிலையில் நடிகர் விஜய்யை விமர்சித்து விடுதலை சிறுத்தைகள் பொதுச் செயலாளர் ரவிக்குமார் பதிவு ஒன்றை வெளியிட்டு உள்ளார். அந்த பதிவுக்கு அரசியல் ஒப்பனையின் ஆயுள் என்றும் தலைப்பிட்டு உள்ளார்.
அவர் தமது பதிவில் கூறி உள்ளதாவது; திருமாவளவன் விரிவாக அறிக்கை கொடுத்ததற்குப் பிறகும் கூட விஜய் அவரைப் பற்றிப் பேசியதைப் பார்த்தால், அவர் கட்சி ஆரம்பித்திருப்பதே விடுதலைச் சிறுத்தைகளோடு எப்படியாவது கூட்டணி சேர்ந்துவிட வேண்டும் என்பதற்காகத் தானோ என எண்ணத் தோன்றுகிறது. தன்னம்பிக்கையோடு கட்சி ஆரம்பித்திருந்தால் இப்படி வலிந்து வலிந்து 'அழைப்பு' விடுக்கும் நிலை ஏற்பட்டிருக்காது.
இதையெல்லாம் பார்க்கும் எவரும், ரஜினிகாந்தை கட்சி ஆரம்பிக்கச் சொன்னவர்கள் தான் அவர் உடன்படாததால் விஜய் கட்சி தொடங்க வைத்திருக்கிறார்கள் என்பதை எளிதாகப் புரிந்துகொள்ளவார்கள் .
'விஜய், மணிப்பூரைப் பற்றிக் குறிப்பிட்டாரே' என்று அப்பாவியாகக் கேட்பவர்கள் அந்த மேடையில் இருந்த நீதிபதி கே.சந்துரு அவர்களிடம் அலிபி(Alibi) என்ற சொல்லுக்குப் பொருள் என்ன என்பதைக் கேட்டுத் தெரிந்துகொள்ளலாம்.
திரைப்பட ஒப்பனை அளவுக்குக்கூட அரசியல் ஒப்பனைக்கு ஆயுள் கிடையாது. இவ்வாறு அவர் கூறி உள்ளார்.