ADDED : ஆக 12, 2025 04:04 AM
துாத்துக்குடி: ' 'வி.சி.க.,வினர் எவ்வளவு பெரிய ஆபத்தானவர்கள் என்பதை உணராமல் உசுப்பிவிட்டவர் அ.தி.மு.க., பொதுச்செயலர் பழனிசாமி,'' என புதிய தமிழகம் கட்சித் தலைவர் கிருஷ்ணசாமி குற்றஞ்சாட்டினார்.
துாத்துக்குடி மாவட்டம், கோவில்பட்டியில் நேற்று அவர் அளித்த பேட்டி:
தமிழக அரசின் மாநில கல்வி கொள்கையில் குறிப்பிட்டு சொல்லும்படியான அளவுக்கு சிறப்பம்சம் எதுவும் இல்லை. புதிய தமிழகம் கட்சி கூட்டணி அமைத்து தான் போட்டியிடும். இயந்திரத்தனமாக கூட்டணி அமைக்க மாட்டோம். ஆட்சி அதிகாரத்தில் பங்கு பெறக்கூடிய முக்கியமான கொள்கையோடு தான் கூட்டணி அமைப்போம்.
விடுதலை சிறுத்தைகள் கட்சியை உசுப்பி விட்டது, துாக்கி விட்டது, பெரிதாக பேசியது என எல்லாம் செய்தது, அ.தி.மு.க., பொதுச்செயலர் பழனிசாமி தான். அவர்கள் எவ்வளவு பெரிய ஆபத்தானவர்கள் என்பதை உணராமல், வாங்க வாங்க என பழனிசாமி அழைப்பு விடுத்து, அவர்களை பெரிய ஆளாக உருவாக்கி விட்டார்.
ஆட்டை கடித்து, மாட்டை கடித்து தற்போது எம்.ஜி.ஆர்., ஜெயலலிதாவையே தாக்குகின்றனர். இவற்றுக்கெல்லாம் பழனிசாமி தான் பதில் சொல்ல வேண்டும்.
இவ்வாறு அவர் கூறினார்.