கொடை, ஊட்டியில் பிளாஸ்டிக் பை, பாட்டிலுக்கு தடை மீறி எடுத்து சென்றால் வாகனங்கள் பறிமுதல்: ஐகோர்ட்
கொடை, ஊட்டியில் பிளாஸ்டிக் பை, பாட்டிலுக்கு தடை மீறி எடுத்து சென்றால் வாகனங்கள் பறிமுதல்: ஐகோர்ட்
ADDED : ஏப் 17, 2025 01:03 AM
சென்னை:ஊட்டி, கொடைக்கானல் உள்ளிட்ட மேற்கு தொடர்ச்சி மலை பகுதிகளில், 28 வகையான பிளாஸ்டிக் பொருட்களுக்கு தடை விதித்தும், தடையை மீறி பிளாஸ்டிக் பொருட்களை எடுத்து செல்லும் வாகனங்களை பறிமுதல் செய்யவும் சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
நீலகிரி மாவட்டத்தில், 'பெட் பாட்டில்'கள், பிளாஸ்டிக் பொருட்களை தடுக்க உத்தரவிடக்கோரி, அதே மாவட்டத்தைச் சேர்ந்த சுப்பிரமணிய கவுசிக் என்பவர், சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார்.
இந்த வழக்கை விசாரித்து வரும் நீதிபதிகள் என்.சதீஷ்குமார், டி.பரதசக்கரவர்த்தி அடங்கிய சிறப்பு அமர்வு, அவ்வப்போது இடைக்கால உத்தரவை பிறப்பித்து வந்தது.
அந்த வரிசையில், இந்த அமர்வு நேற்று பிறப்பித்த உத்தரவு:
தமிழகத்தில், 28 வகையான பிளாஸ்டிக் பொருட்களை தடை செய்து, அரசாணை பிறப்பிக்கப்பட்டு உள்ளது.
வழக்கு தொடரணும்
அதன் அடிப்படையில், நீலகிரி முதல் கன்னியாகுமரி வரையிலான மேற்கு தொடர்ச்சி மலை முழுதும், 28 வகையான பிளாஸ்டிக் பொருட்களை பயன்படுத்த, இருப்பில் வைக்க, எடுத்துச் செல்ல, உற்பத்தி செய்ய தடை விதிக்கப்படுகிறது.
நீலகிரி மற்றும் கொடைக்கானல் பகுதிகளுக்கு, தடை செய்யப்பட்ட பிளாஸ்டிக் பொருட்களை எடுத்து செல்லக்கூடாது என, மோட்டார் வாகன சட்டத்தில் நிபந்தனையை சேர்த்து, தமிழக அரசு அறிவிப்பு வெளியிட வேண்டும்.
அதன் அடிப்படையில், அங்கு செல்ல வாகனங்களுக்கு அனுமதி அளிக்க வேண்டும். தடை செய்யப்பட்ட பிளாஸ்டிக் பொருள்களை எடுத்து செல்லும் வாகனங்களை பறிமுதல் செய்து, வழக்கு தொடர வேண்டும்.
ஊட்டி, கொடைக்கானல் போன்ற மலைவாசஸ்தலங்களில் உள்ள கடை உரிமையாளர்கள், பிளாஸ்டிக் பைகளில் அடைத்து விற்பனைக்கு வரும் பிஸ்கட் போன்ற உணவுப் பொருட்களை பிரித்து இலை, காகிதம் போன்ற மக்கும் தன்மையுடைய பொருட்களில் பொதிந்து, பொது மக்களுக்கும், நுகர்வோருக்கும் வழங்க வேண்டும்.
உணவு பொருட்கள் எடுத்து வரப்படும் பிளாஸ்டிக் பைகளை, வனப்பகுதியில் போடாமல், மீண்டும் உணவு பொருட்கள் உற்பத்தியாளர்களிடமே ஒப்படைக்க வேண்டும்.
சுற்றுலா பைகள்
மீண்டும், 'மஞ்சள் பை' திட்டத்தின் விரிவாக்கமாக சுற்றுலா பயணியருக்கு தேவையான குடிநீர் பாட்டில்கள், பைகள் உள்ளிட்ட அன்றாடம் தேவைப்படும் பொருட்கள் அடங்கிய சுற்றுலா பைகளை வாடகைக்கு விடும் திட்டத்தை அமல்படுத்தலாம்.
பொது இடங்களில் குப்பைகள் சேர்வதை தடுக்க, வியாபாரிகளுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும். ஹோட்டல்கள், குடிநீர் வழங்கும் தானியங்கி மையங்கள், சுற்றுலா பைகள், மின்சார, 'சார்ஜிங்' மையங்கள் உள்ளிட்டவை குறித்து, சுற்றுலா பயணியர் அறியும் வகையில், உள்ளூர் வணிகர்கள் ஈடுபாட்டுடன் சிறப்பு மொபைல் போன் செயலி அல்லது வலைதளத்தை உருவாக்கலாம்.
நீலகிரி மற்றும் கொடைக்கானலுக்குள் நுழைவதற்கு முன், ஐந்து அல்லது ஆறு இடங்களில், குறைந்தபட்சம் ஒவ்வொரு, 2 கிலோ மீட்டருக்கும் கண்காணிப்பு மையத்தை நிறுவி, விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும். மேற்கு தொடர்ச்சி மலைகள் மற்றும் சரணாலயங்களின் பிற நுழைவு வாயில்களிலும், இந்த நடவடிக்கையை மேற்கொள்ள வேண்டும்.
இந்த உத்தரவுகளை அமல்படுத்தியது குறித்து, அறிக்கை தாக்கல் செய்ய வேண்டும். விசாரணை ஜூன் 6ம் தேதிக்கு தள்ளிவைக்கப்படுகிறது.
இவ்வாறு உத்தரவில் கூறப்பட்டுள்ளது.