வேலூர் பா.ஜ., பிரமுகர் கொலை; தி.மு.க., ஊராட்சிமன்ற தலைவர், மகன் கைது
வேலூர் பா.ஜ., பிரமுகர் கொலை; தி.மு.க., ஊராட்சிமன்ற தலைவர், மகன் கைது
ADDED : டிச 21, 2024 05:30 PM

வேலூர்: வேலூர் பா.ஜ., பிரமுகர் கொலை வழக்கில் தி.மு.க., ஊராட்சிமன்ற தலைவர் மற்றும் அவரது மகனை போலீசார் கைது செய்தனர்.
வேலூர் மாவட்டம் கே.வி.குப்பத்தைச் சேர்ந்த விட்டல் குமார், 40, என்பவர் பா.ஜ., ஆன்மீக பிரிவு மாவட்ட துணை தலைவராக இருந்தார். கடந்த டிச.,16ம் தேதி, உடலில் படுகாயங்களுடன் மீட்கப்பட்டு, அடுக்கம்பாறை அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். ஆனால், அங்கு அவர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.
அந்த பகுதியை சேர்ந்த சிலர் திட்டமிட்டு தாக்கியதால் விட்டல் குமார் உயிரிழந்ததாகவும், குற்றவாளிகளை கைது செய்யும் வரை உடலை வாங்க மாட்டோம் என்று கூறி அவரது உறவினர்களும், பா.ஜ.,வினரும் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
இதையடுத்து, சந்தேக மரணம் என வழக்குப்பதிவு செய்து போலீசார் விசாரித்து வந்தனர். பா.ஜ.,வினரின் தொடர் போராட்டங்களுக்குப் பிறகு, கொலை வழக்காக பதிவு செய்யப்பட்டது.
இந்தக் கொலை வழக்கு தொடர்பாக நாகல் கிராமத்தைச் சேர்ந்த சந்தோஷ்குமார், கீழ் ஆலத்தூரைச் சேர்ந்த கமலதாசன் ஆகியோர் காட்பாடி கோர்ட்டில் சரணடைந்தனர்.
இந்த நிலையில், பா.ஜ., நிர்வாகி விட்டல் குமார் கொலை வழக்கு தொடர்பாக, தி.மு.க., நாகல் ஊராட்சி மன்ற தலைவர் பாலா சேட் மற்றும் அவரது மகன் தரணிகுமார் ஆகியோரை போலீசார் கைது செய்துள்ளனர்.

