நயினார் நாகேந்திரனை சந்தித்த வேலுமணி: அரசியலில் பரபரப்பு
நயினார் நாகேந்திரனை சந்தித்த வேலுமணி: அரசியலில் பரபரப்பு
UPDATED : நவ 22, 2024 06:51 PM
ADDED : நவ 22, 2024 06:28 PM

திருநெல்வேலி: நெல்லையில், கள ஆய்வுக்கு சென்ற அ.தி.மு.க., மாஜி அமைச்சர் வேலுமணி, பா.ஜ., எம்.எல்.ஏ., நயினார் நாகேந்திரனை சந்தித்து பேசியது அரசியல் வட்டாரத்தில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
லோக்சபா தேர்தலுக்கு முன்னர், பா.ஜ., உடனான கூட்டணியை அ.தி.மு.க., முறித்துக் கொண்டது. இரு கட்சிகளும் தனித்தனியே களமிறங்கி உள்ளன. பா.ஜ., உடன் கூட்டணி அமைக்க மாட்டோம் என அ.தி.மு.க., பொதுச் செயலர் இ.பி.எஸ்., கூறி வருகிறார். கூட்டணி தொடர்பாக அ.தி.மு.க., தலைவர்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு பா.ஜ.,வினர் பதிலடி கொடுத்து வருகின்றனர்.
இரு கட்சிகளும் 2026ல் நடக்க உள்ள சட்டசபை தேர்தலுக்கு தயாராகி வருகின்றன. அ.தி.மு.க., சார்பில் மாவட்ட வாரியாக கள ஆய்வு துவங்கப்பட்டு உள்ளது. மாஜி அமைச்சர்கள் 10 பேர் அடங்கிய இக்குழுவினர் மாவட்ட வாரியாக சென்று கள ஆய்வு மேற்கொண்டு வருகின்றனர். அந்த வகையில் நெல்லையில் கள ஆய்வு நடந்தது.
திருநெல்வேலி ஜங்ஷனில் அ.தி.மு.க., மாநகர் மாவட்டம் சார்பில் கள ஆய்வுக் கூட்டம் நடந்தது. மாஜி அமைச்சர் எஸ்.பி., வேலுமணி கலந்து கொண்டு கள ஆய்வு கூட்டத்தை நடத்தினார்.
இந்நிலையில், மதியம் 3:00 மணியளவில் பெருமாள்புரம் பகுதியில் உள்ள பா.ஜ., துணைத் தலைவர் நயினார் நாகேந்திரன் வீட்டில் எஸ்பி வேலுமணி சந்தித்தார். உடன் மாவட்ட செயலாளர் கணேஷ்ராஜா சென்றிருந்தார். அ.தி.மு.க.,வுக்கும் பா.ஜ.,வுக்கும் இடையே ஒவ்வாமை உள்ள இச்சூழலில் இருவரும் சந்தித்து கலகலப்பாக பேசியுள்ளனர்.
இது குறித்து அ.தி.மு.க., வட்டாரத்தில் கூறுகையில், எஸ்.பி., வேலுமணியின் இல்ல திருமண விழாவிற்கு அனைத்து கட்சியினரையும் சந்தித்து அழைப்பிதழ் தருகிறார். நயினார் நாகேந்திரனுக்கும் அழைப்பிதழ் கொடுத்துள்ளார் என தெரிவித்தனர்.
முன்னதாக காலை நடந்த அ.தி.மு.க., கள ஆய்வுக் கூட்டத்தில் பேசிய வேலுமணி, 2016 தேர்தலில் அ.தி.மு.க., வேட்பாளராக போட்டியிட்ட நயினார் நாகேந்திரன் வெறும் 601 ஓட்டுகள் வித்தியாசத்தில் அதுவும் தபால் ஓட்டுக்களில் தான் தோற்றார் என நயினார் மீது பாசத்தை பொழிந்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.