வேங்கைவயல் வழக்கு; சிறப்பு கோர்ட்டில் சி.பி.சி.ஐ.டி., மனு தாக்கல்
வேங்கைவயல் வழக்கு; சிறப்பு கோர்ட்டில் சி.பி.சி.ஐ.டி., மனு தாக்கல்
ADDED : ஜன 27, 2025 12:55 PM

புதுக்கோட்டை: வேங்கைவயல் வழக்கில் வன்கொடுமை தடுப்பு சட்டப்பிரிவை ரத்து செய்து நீதித்துறை நடுவர் கோர்ட்டிற்கு மாற்ற வேண்டும் என்று சி.பி.சி.ஐ.டி., மனு தாக்கல் செய்துள்ளது.
புதுக்கோட்டை மாவட்டம், வேங்கைவயல் கிராமத்தில் குடிநீர் தொட்டியில் மனித கழிவு கலக்கப்பட்ட வழக்கை, 2 ஆண்டுக்கு மேலாக விசாரித்து வந்த சி.பி.சி.ஐ.டி., புதுக்கோட்டை சிறப்பு கோர்ட்டில் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்தது. அதில், வேங்கைவயல் குடிநீர் தொட்டியில் மனிதக்கழிவை கலந்த விவகாரத்தில் 3 பேருக்கு தொடர்பு உள்ளது. முத்துக்கிருஷ்ணன், சுதர்சன் ஆகியோர் இந்த பாதகச்செயலை செய்துள்ளனர். முரளிராஜா பொய்த்தகவல் பரப்பியுள்ளார் என்று குற்றம் சாட்டப்பட்டிருந்தது.
முத்துக்காடு பஞ்சாயத்து தலைவரின் கணவரை பழிவாங்கும் நோக்கில் குற்றம் செய்துள்ளனர் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. குற்றம்சாட்டப்பட்டவர்கள் வேங்கை வயல் கிராமத்தைச் சேர்ந்தவர்கள் தான் என்றும், வெளியாட்கள் யாரும் இந்த செயலில் ஈடுபடவில்லை என்றும் கூறப்பட்டிருந்தது.
கோர்ட்டில் தாக்கல் செய்யப்பட்ட இந்த அறிக்கையில் முரண்பாடுகள் இருப்பதாகக் கூறி, எதிர்ப்புகளும், விமர்சனங்களும் கிளம்பியது. குறிப்பாக, தி.மு.க., கூட்டணியில் இடம்பெற்றுள்ள வி.சி.க., மற்றும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சிகள், இந்த அறிக்கையை கோர்ட் ஏற்கக் கூடாது என்று வலியுறுத்தி வருகின்றனர். மேலும், இது தொடர்பான வழக்கு விசாரணையை சி.பி.ஐ.,யிடம் ஒப்படைக்க வேண்டும் என கோரிக்கை விடுத்து வருகின்றனர்.
இந்த நிலையில், வேங்கைவயல் வழக்கை நீதித்துறை நடுவர் கோர்ட்டிற்கு மாற்ற வேண்டும் என்று சிறப்பு கோர்ட்டில் சி.பி.சி.ஐ.டி., மனு தாக்கல் செய்துள்ளது. அந்த மனுவில், 'குற்றம்சாட்டப்பட்ட 3 பேரும் பட்டியலின சமூகத்தைச் சேர்ந்தவர்கள் என்பதால், வன்கொடுமை தடுப்பு சட்டப்பிரிவை நீக்க வேண்டும்' என்று தெரிவிக்கப்பட்டிருந்தது.
முன்னதாக, குற்றப்பத்திரிக்கையில் பல்வேறு முரண்பாடுகள் இருப்பதால், அதனை ஏற்கக் கூடாது என்று குற்றம்சாட்டப்பட்டவர்கள் ஏற்கனவே மனு தாக்கல் செய்திருப்பது குறிப்பிடத்தக்கது.