பால் உற்பத்தியாளர்களுக்கு உதவ கால்நடை சேவை மையம் திறப்பு
பால் உற்பத்தியாளர்களுக்கு உதவ கால்நடை சேவை மையம் திறப்பு
ADDED : மே 08, 2025 12:58 AM

சென்னை:சென்னை, மாதவரம் பால் பண்ணையில் உள்ள ஆவின் திறன் மேம்பாட்டு மையத்தில், ஆவின் மையத்திற்கு பால் வழங்கும் உற்பத்தியாளர்களுக்கு உதவும் வகையில், கால்நடை சேவை மையத்தை, பால்வளத்துறை அமைச்சர் மனோ தங்கராஜ், நேற்று துவக்கி வைத்தார்.
பின், அவர் அளித்த பேட்டி:
கால்நடைகள் சிகிச்சைக்கு மருத்துவர்களை தேடிச் செல்வதை விட, இந்த கால்நடை சேவை மையத்தை தொடர்பு கொண்டால், மருத்துவர்கள் இல்லம் தேடி வருவர். இந்த மையத்திற்கு, 1800 4252577 என்ற இலவச தொலைபேசி எண் கொடுக்கப்பட்டு உள்ளது. முதற்கட்டமாக, 25 கணினிகளுடன், இந்த கால்நடை சேவை மையம் செயல்படும்.
தட்டுப்பாடு இல்லாமல் பால் மற்றும் பால் பொருட்களை வழங்கி வருகிறோம். கடந்த ஒன்றரை ஆண்டுகளில், 1,000 கோடி ரூபாய் வரை விவசாயிகளுக்கு கடன் வழங்கி இருக்கிறோம்; இது சரித்திர சாதனை. 60,000 ரூபாய் இருந்தால் நல்ல மாடு வாங்க முடியும். ஆவினில், 38 லட்சம் லிட்டர் பால் கொள்முதல் செய்து சாதனை செய்துள்ளோம்.
தனியார் பால் பற்றி கவலைப்படுவதில்லை. புலி வருகிறது, பூனை வருகிறது என்கின்றனர். புலியும் வரவில்லை; பூனையும் வரவில்லை; ஏன் என்றால் இங்கு இருப்பது சிங்கம். ஆவின் பெரிய கட்டமைப்பு உள்ள நிறுவனம். லட்சக்கணக்கான விவசாயிகள், பணியாளர்கள் உள்ளனர்.
எந்த சூழலிலும் விவசாயிகள் பாதிக்கப்படக்கூடாது. மக்களுக்கு முறையாக பொருட்கள் சென்றுசேர வேண்டும் என்று செயல்படும் நிலையில், சில சவால்கள் உள்ளன.
தனியார் போன்று லாப நோக்கத்தில் செயல்பட்டால், எங்கள் நிலையே வேறு மாதிரி ஆகி விடும். நாங்கள் சமூக நோக்கத்தோடு செயல்படுவதால், சில சவால்கள் ஏற்படுகின்றன.
ஆவின் பொருட்களை, எம்.ஆர்.பி., விலையை விட கூடுதலாக விற்கக்கூடாது. அப்படி விற்பனை செய்தால், புகார் அளிக்கலாம்; நடவடிக்கை எடுக்கப்படும்.
இவ்வாறு அவர் கூறினார்.