துணைவேந்தர்களுக்கு மிரட்டல்; அத்துமீறிய தி.மு.க., எம்.பி.,: அச்சத்தில் கல்வியாளர்கள்!
துணைவேந்தர்களுக்கு மிரட்டல்; அத்துமீறிய தி.மு.க., எம்.பி.,: அச்சத்தில் கல்வியாளர்கள்!
UPDATED : ஏப் 23, 2025 10:21 AM
ADDED : ஏப் 23, 2025 07:05 AM

சென்னை: பல்கலை துணைவேந்தர்களை மிரட்டும் வகையில் முன்னாள் மத்திய அமைச்சரும், தி.மு.க., எம்பி.,யுமான டி.ஆர்.பாலு கருத்து தெரிவித்திருப்பது, கல்வியாளர்கள் மத்தியில் அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது.
ஆண்டுதோறும் கவர்னர் சார்பில் பல்கலை துணைவேந்தர்களுக்கான மாநாடு நடத்தப்படும். இந்தாண்டு ஏப்., 25, 26ல் ஊட்டியில் நடக்கும் என கவர்னர் தரப்பு அறிவித்துள்ளது. இம்மாநாட்டில் 'உயர் கல்வியை ஏ.ஐ., தொழில் நுட்பம் மூலம் எவ்வாறு மேம்படுத்தலாம்' என்ற தலைப்பில் விவாதிக்கப்படவுள்ளது.
தி.மு.க., எம்.பி., மிரட்டல்
இந்த மாநாட்டில் பல்கலை துணைவேந்தர்களுக்கு பங்கேற்க அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. ஆனால், மாநாட்டில் பங்கேற்க விடாமல், துணைவேந்தர்களை மிரட்டும் வகையில், தி.மு.க., எம்பி., டி.ஆர்.பாலு பேசியுள்ளார். அவர், ''கவர்னர் மாநாட்டில் துணைவேந்தர்கள் பங்கேற்பார்களா என பொறுத்திருந்து பாருங்கள். சுயநினைவோடு இருப்பவர்கள், நியாயமாக சிந்திப்பவர்கள் இப்படி நிச்சயம் செய்ய மாட்டார்கள்'' என பேசியுள்ளார்.
இவரது பேச்சு, துணைவேந்தர்களை அச்சுறுத்தும் வகையில் உள்ளதாக கல்வியாளர்கள் கருத்து தெரிவித்துள்ளனர். இதுகுறித்து துணைவேந்தர்கள் சிலர் கூறியதாவது:
* இச்சூழ்நிலை முதல்முறையாக ஏற்பட்டுள்ளது. எங்களை நியமிக்கும் கவர்னரும், சம்பளம் வழங்கும் அரசின் முதல்வரும் முக்கியம். மாநில அரசு தாக்கல் செய்த மசோதாக்கள் அடிப்படையில் உச்சநீதிமன்றம் வழங்கிய உத்தரவில், வேந்தர் என்ற நிலைப்பாட்டில் இருந்து ஒரு துணைவேந்தரை நியமிக்க, நீக்கும் அதிகாரம் மட்டுமே முதல்வருக்கு இருக்கலாம்.
* ஆனால் பட்டமளிப்பு விழாக்களில் மாணவர்களுக்கான பட்டச் சான்று வழங்கும் 'கிரேஸ் போர்டு'க்கு ஒப்புதல் அளிக்கும் அதிகாரம் இன்னும் கவர்னர் தலைமையில் உள்ள 'செனட்'டுக்கு தான் உள்ளது. இது உட்பட யு.ஜி.சி., வழிகாட்டுதல்கள் கவர்னர் சார்ந்ததாக தான் உள்ளது.
* எனவே பல்கலையை வழிநடத்த கவர்னர், முதல்வர் என இருவரின் உறவும் அவசியம். ஆனால் எம்.பி., பாலு பேசியது அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது. இதுவரை கவர்னர் மாநாட்டில் பங்கேற்பதா வேண்டாமா என எந்த முடிவும் எடுக்கவில்லை.
* இதுபோன்ற சூழல் உயர்கல்வியை வலுவிழக்க செய்யும். துணைவேந்தர்கள் மாநாட்டில் பங்கேற்பது தொடர்பாக தமிழக அரசின் உத்தரவும், அதற்கு கவர்னரின் எதிர்வினைக்கு ஏற்ப முடிவு எடுக்கும் நிலையில் உள்ளோம் என்றனர்.
* கவர்னர் கூட்டிய மாநாட்டில் பங்கேற்க எதிர்ப்பு தெரிவிக்கும் வகையில், தி.மு.க.,. எம்.பி., மிரட்டல் விடுக்கும் வகையில் பேசியிருப்பதற்கு துணைவேந்தர்கள் மற்றும் கல்வியாளர்கள் மத்தியில் அதிருப்தியை ஏற்படுத்தி உள்ளது.