துணை மேயர் மீது நடவடிக்கை மாநகராட்சி கமிஷனர் ஆலோசனை
துணை மேயர் மீது நடவடிக்கை மாநகராட்சி கமிஷனர் ஆலோசனை
ADDED : ஆக 24, 2011 12:22 AM
சேலம் : சேலம் மாநகராட்சிக்கு சொந்தமான காரில், மத்திய சிறைக்குச் சென்ற துணை மேயர் மீதான நடவடிக்கை குறித்து, மாநகராட்சி கமிஷனர் தலைமையில் ஆலோசனை நடந்தது.
சேலம் மாநகராட்சி துணை மேயரான, தி.மு.க.,வைச் சேர்ந்த பன்னீர்செல்வம், சேலம் சிறையில் அடைக்கப்பட்டுள்ள தி.மு.க., கவுன்சிலர், 'ஜிம்' ராமுவை நேற்று முன்தினம் சந்தித்து, ஆறுதல் கூறி வந்தார்.
சிறைச்சாலைக்கு முன் காரை நிறுத்தினால் பிரச்னை ஏற்படும் என கருதிய அவர், 50 அடி தூரம் தள்ளி காரை நிறுத்தியுள்ளார். இந்நிலையில், மாநகராட்சிக்குச் சொந்தமான காரில், துணை மேயர் சிறைக்குச் சென்று திரும்பிய சம்பவம், சர்ச்சையை ஏற்படுத்தியது. துணை மேயர் பன்னீர் செல்வத்தின் மீது நடவடிக்கை எடுக்கக் கோரி, ஒரு சிலர் கோரிக்கை விடுத்து வருகின்றனர்.
மாநகராட்சி கமிஷனர் லட்சுமிப்ரியா கூறுகையில், 'மாநகராட்சிக்கு சொந்தமான காரை, துணை மேயர் பன்னீர்செல்வம் பயன்படுத்தியது, விதிமுறைக்கு புறம்பானதா என்பது குறித்து, அதிகாரிகளுடன் ஆலோசிக்கப்பட்டு வருகிறது. ஆலோசனைக்குப் பிறகு உரிய நடவடிக்கை எடுக்கப்படும்' என்றார்.