கரூர் சம்பவத்துக்கு வீடியோ வெளியீடு விஜய் இதயத்தில் வலி இல்லை: சீமான்
கரூர் சம்பவத்துக்கு வீடியோ வெளியீடு விஜய் இதயத்தில் வலி இல்லை: சீமான்
ADDED : அக் 03, 2025 04:03 AM

விருதுநகர்: ''த.வெ.க., தலைவர் விஜய் வெளியிட்ட வீடியோவில், அவருக்கு இதயத்தில் காயமோ, வலியோ இல்லை என்பது தெரிகிறது,” என நாம் தமிழர் கட்சி தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் தெரிவித்தார்.
விருதுநகரில் அவர் அளித்த பேட்டி:
சினிமாவில் நடித்து புகழ் பெற்றால், நாட்டை ஆள்வதற்கு தகுதி வந்து விட்டதாக நினைக்கும் ஒரு தலைமுறையை உருவாக்கியதில் அனைவரின் மீதும் பிழை உள்ளது.
ஆட்சியாளர்களின் மெத்தனத்தால் சாராயம் குடித்து 63 பேர் பலியானபோது, முதல்வர் ஸ்டாலின் அங்கு செல்லவில்லை. கரூரில், தன்னுடைய பிரசார கூட்ட நெரிசலில் சிக்கி 41 பேர் பலியானபோது த.வெ.க., தலைவர், நடிகர் விஜய் வரவில்லை. ஆனால், முதல்வர் ஸ்டாலின், இரவோடு இரவாக அங்கு சென்றார்.
சினிமா வசனம்
இச்சம்பவத்தில் பலியானவர்களின் குடும்பத்தினருக்கு லட்சங்களில் நிவாரணம் கொடுப்பதாக, இரு தரப்பிலும் அறிவித்துள்ளனர். நிவாரணம் கொடுப்பதால் மட்டும் எல்லாம் சரியாகி விடாது. நிவாரணத்தால் போன உயிர் திரும்பி வந்து விடுமா?
கரூரில் நடந்த உயிரிழப்புகளைத் தொடர்ந்து, மூன்று நாட்கள் கடந்த பின், சாவகாசமாக த.வெ.க., தலைவர் விஜய் வீடியோ வெளியிட்டார். அதை உற்று நோக்கியதில் ஒன்று மட்டும் புரிந்தது.
அவருக்கு இதயத்தில் காயமோ, வலியோ இல்லை என்பது போலவே வீடியோவில் பேசியிருக்கிறார். வீடியோ பேச்சு என்று துவங்கிய பின், தன்னுடைய வலியை உருக்கமாக கடத்தியிருக்க வேண்டும்.
அவர், வழக்கமாக சினிமாவில் வசனம் பேசி பழக்கப்பட்டவர் என்பதால், அதைப் போலவே பேசியுள்ளார்.
'சி.எம்., சார்' என்ற சொல் சிறு பிள்ளைத்தனமாக இருக்கிறது. கரூரில் நடந்த இத்தனை பெரிய துயர சம்பவத்துக்கு இடையிலும், நடிகர் விஜய் நடிப்பில் உருவான 'குஷி' திரைப்படம் மறு வெளியீடு செய்யப் பட்டிருக்கிறது.
அதற்கு, இளைஞர்களும் பெண்களும் ஆட்டம் போடுவதை பார்க்கும்போது, சமூகத்தை நினைக்க வேதனையாக உள்ளது; என்ன சொல்வது என்றே புரியவில்லை.
கரூர் நெரிசலில் சிக்கி காயமடைந்து மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டவர்களை பார்த்தபோது, கத்தியால் குத்தியதாக எதுவும் தெரியவில்லை. மயங்கி கீழே விழுந்தவர்களை கூட்ட நெரிசலில் சிக்கியவர்கள் மிதித்த காயம் மட்டுமே இருந்தது. கூட்டத்தில் இருந்து வெளியேற முயன்றவர்களை, தடுத்துள்ளனர்.
நகர விடாமல்
'விஜய் வந்து விடுவார்; பொறுத்திருந்து பார்த்துச் செல்லுங்கள்' என தெரிவித்து, நகர விடாமல் செய்து, மக்களை வெகு நேரம் நிற்க வைத்துள்ளனர்.
இனி வரும் காலங்களில் ஓட்டு கேட்கும் முறையை மாற்ற வேண்டும். வெளிநாடுகளில் இருப்பதைபோல தேர்தல் பிரசாரத்தை தேர்தல் கமிஷன் அனுமதியுடன் தான் நடத்த வேண்டும் என்ற நடைமுறையை கொண்டு வர வேண்டும்.
இவ்வாறு அவர் கூறினார்.