சென்னை மாநில கல்லுாரியில் படித்தவர் விஞ்ஞான் ரத்னா விருது பெறும் பத்மநாபன்
சென்னை மாநில கல்லுாரியில் படித்தவர் விஞ்ஞான் ரத்னா விருது பெறும் பத்மநாபன்
ADDED : ஆக 09, 2024 04:03 AM

சென்னை: அறிவியல் - தொழில் நுட்பத் துறையில் குறிப்பிடத்தக்க சாதனை படைத்ததற்கான விஞ்ஞான் ரத்னா விருதை வென்றுள்ள கோவிந்த ராஜன் பத்மநாபன், 86, தமிழகத்தின் தஞ்சாவூரை பூர்வீகமாகக் கொண்டவர்.
அறிவியல் மற்றும் தொழில்நுட்பத் துறைகளில் சிறந்த பங்களிப்பை அளித்தவர்களுக்கான, முதலாவது தேசிய அறிவியல் விருதுகளை, மத்திய அரசு நேற்று முன்தினம் அறிவித்தது.
'விஞ்ஞான் ரத்னா, விஞ்ஞான் ஸ்ரீ, விஞ்ஞான் யுவா, விஞ்ஞான் குழு' என, நான்கு பிரிவுகளில் விருதுகள் அறிவிக்கப்பட்டுள்ளன.
பூர்வீகம் தஞ்சாவூர்
இந்த பட்டியலில், அறிவியல் - தொழிநுட்பத் துறையில் வாழ்நாள் சாதனை படைத்தவர்களுக்கு வழங்கப்படும் மிக உயரிய விருதான விஞ்ஞான் ரத்னா விருது, தமிழகத்தைச் சேர்ந்த உயிரி வேதியியல் விஞ்ஞானி கோவிந்தராஜன் பத்மநாபனுக்கு அறிவிக்கப்பட்டுள்ளது.
இதுதவிர இளம் விஞ்ஞானிகள் 18 பேருக்கு விஞ்ஞான் யுவா விருதும், 13 பேருக்கு விஞ்ஞான் ஸ்ரீ விருதும் அறிவிக்கப்பட்டன. சந்திரயான் - 3 திட்டத்தை வெற்றிகரமாக செயல்படுத்திய குழு, விஞ்ஞான் குழு விருதுக்கு தேர்வாகி உள்ளது.
விஞ்ஞான் ரத்னா பெறும் கோவிந்தராஜன் பத்மநாபன், தமிழகத்தின் தஞ்சாவூரை பூர்வீகமாகக் கொண்டவர். இளம் வயதிலேயே பெற்றோருடன் கர்நாடகாவின் பெங்களூரில் குடியேறி னார். பெங்களூரில் பள்ளிப் படிப்பை முடித்தார்.
இவரது குடும்பத்தினர் அனைவருமே இன்ஜினியர்கள் என்பதால், பத்மநாபனும் பொறியியல் படிப்பில் சேர்ந்தார்.
பத்மபூஷண்
ஆனால், அதில் அவருக்கு ஆர்வம் ஏற்படவில்லை. பொறியியல் படிப்பை பாதியில் நிறுத்தியவர், சென்னை மாநிலக் கல்லுாரியில் சேர்ந்து இளநிலை வேதியியல் பட்டப்படிப்பு முடித்தார்.
அதன்பின், டில்லியில் உள்ள இந்திய வேளாண் ஆராய்ச்சி கல்வி நிறுவனத்தில், மண்வள வேதியியலில் முதுநிலை பட்டப்படிப்பு முடித்தார்.
பெங்களூரு இந்திய அறிவியல் கல்வி நிறுவனத்தில் உயிரி வேதியியல் துறையில் ஆராய்ச்சி படிப்பை முடித்தார். அதே கல்வி நிறுவனத்தில் இயக்குனராகவும் பணியாற்றினார்.
மஞ்சளில் உள்ள, 'குர்குமின்' என்ற வேதிப்பொருளின் மருத்துவப் பண்புகள் குறித்து இவரது குழு, வெற்றிகரமான ஆய்வு மேற்கொண்டது.
இவரது பணிகளுக்காக பத்மபூஷண், பத்மஸ்ரீ விருதுகளையும் பெற்றுள்ளார். தமிழகத்தின் திருவாரூரில் உள்ள தமிழ்நாடு மத்திய பல்கலையின் வேந்தராக உள்ளார்.