தி.மு.க., - த.வெ.க., இடையே தான் போட்டி மதுரை மாநாட்டில் அறிவித்தார் விஜய்
தி.மு.க., - த.வெ.க., இடையே தான் போட்டி மதுரை மாநாட்டில் அறிவித்தார் விஜய்
UPDATED : ஆக 23, 2025 06:25 AM
ADDED : ஆக 22, 2025 02:30 AM

மதுரை: “வரும் சட்டசபை தேர்தலில் த.வெ.க.,வுக்கும், தி.மு.க.,வுக்கும் மட்டும் தான் போட்டி இருக்கும். எங்களின் கொள்கை எதிரி பா.ஜ.,- தான், ஒரே அரசியல் எதிரி தி.மு.க., தான்,” என, மதுரையில் நடந்த தமிழக வெற்றிக் கழக இரண்டாவது மாநில மாநாட்டில் அக்கட்சியின் தலைவர் விஜய் பேசினார்.
அவர் பேசியதாவது: தமிழகத்தில், 1967லும், 1977லும் ஆட்சி மாற்றம் நடந்தது. அதைப்போல 2026ல் த.வெ.க., வெற்றியின் மூலம் வரலாறு திரும்பும். அரசியலுக்கு வருவதற்கு முன்னால், 'அவருக்கே வர விருப்பம் இல்லை. அவர் எப்படி வருவார்?' என கேட்டு ஜோசியம் சொன்னார்கள். கட்சிக்கு பெயர் வைத்ததும், மக்களிடம் பேர் வாங்க முடியாது என்றனர். இப்போது ஆட்சியை பிடிக்கிறது ஈசியில்லை; ஷூட்டிங் முடிச்சுட்டு வருகிறார் என்கின்றனர்.
நாமும், மக்களும் எப்படி இருக்கிறோம் என அரசியல்வாதிகளுக்கு நன்றாக தெரியும். பெண்கள், வயதானவர்களின் பாதுகாப்பு தான் முக்கியம். இளைஞர்கள், உழவர்கள், உழைப்பாளர்கள், நெசவாளர்கள், மீனவர்கள், மாற்றுத்திறனாளிகள், மூன்றாம் பாலினத்தவர், எல்லாருக்குமான அரசாக அமைப்பேன்.
ஆதாயம் நோக்கமல்ல த.வெ.க., கட்சி அரசியல் ஆதாயத்திற்காக துவங்கவில்லை; கொள்கை, கோட்பாடுக்காக துவங்கப்பட்டது. நம் நிலையில் சமரசமின்றி உறுதியாக உள்ளோம். நமக்கு, ஒரே கொள்கை எதிரி பா.ஜ., தான். ஒரே அரசியல் எதிரி தி.மு.க., தான். 'அண்டர்கிரவுண்ட்' ஆதாயத்திற்காக 'டீல்' போடும் கட்சியல்ல நாம். கூட்டணி அமைத்து ஊரை ஏமாற்றும் கட்சியல்ல. பாசிச பா.ஜ., உடன் நேரடியாகவோ, மறைமுகமாகவோ கூட்டணியுடன் உறவு வைக்க, நாம் என்ன உலக மகா ஊழல் கட்சியா? எனவே, அடிமை கூட்டணியில் சேர வேண்டிய அவசியம் நமக்கில்லை. இது, சுயமிழந்த கூட்டணியல்ல, சுயமரியாதை கூட்டணி.
ஆர்.எஸ்.எஸ்.,சுக்கு அடிபணிந்து மக்களை மதச்சார்பற்ற கூட்டணி என்று ஏமாற்ற வேண்டியதில்லை. நம்மை நம்பி வருபவர்களுக்கு ஆட்சியும், அதிகாரமும் தரப்படும்.
வரும் 2026 சட்டசபை தேர்தலில் தி.மு.க., - -த.வெ.க., இடையே தான் போட்டி. கூட்டணி வைத்து தப்பிக்கலாம் என்று கணக்கு போடுபவர்களின் கனவு மெய்ப்படாது. எதிர்காலம் வரும்; என் கடமை வரும்.
இஸ்லாமியர்களுக்கு எதிராக சதி
மறைமுக உறவுக்காரர்களான பாசிச பா.ஜ., -பாய்சன் தி.மு.க.,வுக்கு எதிராக, மக்கள் அரசியல் என்ற சவுக்கை கையில் எடுப்போம்.பிரதமர் மோடி, மூன்றாவது முறையாக ஆட்சியை கையில் வைத்துள்ளார். ஒட்டுமொத்த மக்களுக்கு நல்லது செய்யவா அல்லது இஸ்லாமியர்களுக்கு எதிராக சதி செய்யவா.
தமிழக மீனவர்கள், 800 பேர் தாக்கப்பட்டனர். இனிமேலாவது, தமிழக மீனவர்கள் பாதுகாப்பாக இருப்பதற்காக கச்சத்தீவை மீட்டுக் கொடுங்கள். தாமரை இலையில் தண்ணீர் கூட ஒட்டாது; அப்புறம் எப்படி தமிழக மக்கள் மனதில் ஒட்டும். ஒரு எம்.பி., சீட் கூட இல்லாததால், தமிழக மக்களுக்கு ஓரவஞ்சனை செய்கிறீர்கள்.
பொருந்தா கூட்டணி எம்.ஜி.ஆர்., இருந்தவரை முதல்வர் நாற்காலியைப் பற்றி யாருமே கனவு கூட காணவில்லை.எதிரியை கூட மக்களிடம் கெஞ்ச வைத்தவர் எம்.ஜி.ஆர்., அவர் ஆரம்பித்த கட்சியை கட்டி காப்பது யார்? இன்று அந்த கட்சி எப்படி இருக்கிறது, அக்கட்சியின் அப்பாவி தொண்டர்கள் வெளியில் சொல்ல முடியாமல் தவிக்கின்றனர்.
அதனால் பொருந்தா கூட்டணியாக பா.ஜ., எந்த வேஷம் போட்டு வந்தாலும், தமிழகத்தை கைப்பற்ற முடியாது. தி.மு.க., வெளியில் எதிர்ப்பது போல உள்ளுக்குள் உறவு வைத்து, 'டிராமா' போடுகிறது.எதிர்க்கட்சியாக இருக்கும் போது, 'போங்க மோடி' என்றும், ஆளும் கட்சியாக இருந்தால், 'வாங்க மோடி' என்றும் குடைபிடித்து கும்பிடு போடுகிறது.
வாட் ஸ்டாலின் அங்கிள் ? ரெய்டு வந்தால், இதுவரை போகாத டில்லி மீட்டிங்கிற்கு ஸ்டாலின் போகிறார். அப்புறம் அந்த பிரச்னை காணாமல் போய்விடும். ஸ்டாலின் அங்கிள்... வாட் அங்கிள்... ராங் அங்கிள். ஒரு தவறு செய்தால்... அதை தெரிந்து செய்தால்... கபட நாடக அங்கிளே... மனசாட்சி இருந்தால், பதில் சொல்லுங்க. நேர்மை, நியாயம், சட்டம் - ஒழுங்கு உங்கள் ஆட்சியில் இருக்கா மை டியர் அங்கிள். டாஸ்மாக்கில், 1,000 கோடி ரூபாய் ஊழல் என்கின்றனர். உலகத்தில், 'மிஸ்டர் கிளீன்' விருது உங்கள் உடன் இருப்பவர்களுக்கு தான் தரவேண்டும்.
பெண்களுக்கு மாதம் 1,000 ரூபாய் கொடுத்தால் போதுமா, பிரச்னையை மூடி மறைக்கலாம் என நினைக்கின்றனரா? உங்கள் ஆட்சியில் பெண்களுக்கு பாதுகாப்பில்லை என்று கதறுகின்றனர்.
உங்களை அப்பா என்று கூப்பிடுகின்றனரே, அந்த கதறல் கேட்கவில்லையா ஸ்டாலின் அங்கிள்? 'வொர்ஸ்ட் அங்கிள்' நீங்கள். கபட நாடக தி.மு.க., ஆட்சியை 2026 தேர்தலில் வீட்டுக்கு அனுப்புவோம்.
இவ்வாறு விஜய் பேசினார்.
வெயிலில் பலர் மயக்கம்
மாநாட்டில் வெயிலில் 17 பேர் மயக்கம்; 250 பேருக்கு மருத்துவ முகாமில் சிகிச்சை
* விக்கிரவாண்டியில் நடந்த முதல் மாநாட்டில் விஜய்யின் பெற்றோர் மேடைக்கு கீழே அமர்ந்திருந்தனர். இரண்டாவது மாநாடு நேற்று மதுரையில் நடந்த போது மேடையில் முன்வரிசையில் அமர வைக்கப்பட்டனர்.
* மதியம் 3:45 மணிக்கு மாநாட்டு சிறப்பு பாடலுடன் தலைவர் விஜய்க்கு வரவேற்பு அளிக்கப்பட்டது.
* மதியம் 3:50 மணிக்கு மேடை முன் அமைக்கப்பட்ட 'ரேம்ப் வாக்' மேடையில் நடந்தார். 10 நிமிடத்தில் ரேம்ப் வாக் முடிந்து விஜய் மேடைக்கு திரும்பினார். அரை மணி நேரம் பேசிய விஜய், மாலை 5:24க்கு பேச்சை முடித்தார்.
* 'ரேம்ப் வாக்'ன் போது தொண்டர்கள் உற்சாக மிகுதியில் தடுப்புகளைத் தாண்டி மேடையேறிய போது பவுன்சர்கள் தடுத்து நிறுத்தினர். அங்கே நின்று விஜய் 'செல்பி' எடுத்தார். தொண்டர்கள், கையில் வைத்திருந்த துண்டை விஜய்யை நோக்கி வீசினர்.
* மேடையருகே அமைக்கப்பட்டிருந்த 40 அடி கொடிக்கம்பத்தில் கொடியேற்றினார்.
* மாநாட்டு மேடையில் கட்சியின் மாவட்ட செயலாளர்கள் 118 பேர் அமர்ந்திருந்தனர்.
* 'உங்க விஜய் நா... வர்றேன்' என்கிற வரிகளில் விஜய் பாடி இசையமைப்பாளர் தமன் இசையமைத்த கட்சியின் கொள்கை விளக்கப்பாடல் காணொலி காட்சியாக திரையிடப்பட்டது.
* எக்ஸ் தளத்தில் கட்சி மாநாடு 'டிரெண்டிங்கில்' முதலிடம் பிடித்தது.
* விஜய்யை பார்த்த சந்தோஷத்துடன் அவரது பேச்சைக்கூட கேட்காமல் சிலர் பாதியிலேயே புறப்பட்டு சென்றனர்.
* குழந்தைகளை அழைத்து வர வேண்டாம் என விஜய் ஏற்கனவே உத்தரவிட்டிருந்த நிலையில் அவரது உத்தரவை மதிக்காமல் நிறைய பேர் கைக்குழந்தையுடன் மாநாட்டுக்கு வந்தனர். வெயிலின் கொடுமை தாங்காமல் குழந்தைகள் கதறி அழுத நிலையில் தடுப்புக் கம்பிகளைத் தாண்டி குழந்தைகளை அழைத்துக் கொண்டு வெளியே வந்து ஆசுவாசப்படுத்தினர்.
* மதியம் 3:15 மணிக்கு மாநாடு துவங்கிய நிலையில், காலை 6:00 மணி முதலே தொண்டர்கள் குவிந்தனர். காலை 10:00 மணிக்கு மேல் கொளுத்தும் வெயிலுடன் சூறைக்காற்றும் சேர்ந்து தொண்டர்களை பந்தாடியது.
* மாநாடு நடந்த 500 ஏக்கர் பரப்பளவில் ஒரு மரம் கூட இல்லாததால், வெயிலின் தாக்கத்தால் தொண்டர்கள் 17 பேர் மயக்கம் அடைந்தனர். அருகிலுள்ள 3 மருத்துவமனைகளுக்கு இவர்கள் சிகிச்சைக்காக அனுப்பப்பட்டனர். 250 பேருக்கு திடலில் உள்ள மருத்துவ முகாமில் சிகிச்சை அளிக்கப்பட்டது.
* வெயிலில் தவித்த தொண்டர்களின் மேல் ட்ரோன் மூலம் தண்ணீர் பீய்ச்சி அடிக்கப்பட்டது. வெயிலின் தாக்கத்தால் தரையில் விரித்திருந்த பச்சை துணியை எடுத்து தலைக்கு மேலாக பிடித்த படி நின்றனர்.
* மாநாடு நடந்த பாரப்பத்தி பகுதியில் அதிகபட்சமாக 102 டிகிரி பாரன்ஹீட் வெயில் பதிவானது.
* மாநாடு நடக்கும் இடத்திலிருந்து அரைகிலோ மீட்டர் தொலைவிற்கு முன்பாக வாகன பார்க்கிங் இருந்ததால் கொளுத்தும் வெயிலில் நடந்த தொண்டர்கள் களைப்படைந்தனர்.
* மதுரை - துாத்துக்குடி நெடுஞ்சாலையில் பொது போக்குவரத்திற்கு தடை விதிக்கப்பட்டுள்ள நிலையில், 3 பார்க்கிங் பகுதிகளிலும் வாகனங்கள் நிரம்பியதால், மாநாட்டிற்கு வந்திருந்த வாகனங்கள் நான்கு கிலோ மீட்டர் நீளத்திற்கு வரிசையாக ரோட்டோரம் நிறுத்தப்பட்டன.