புயலால் பாதித்த மக்களை அலுவலகம் வரவழைத்து உதவி செய்த விஜய்
புயலால் பாதித்த மக்களை அலுவலகம் வரவழைத்து உதவி செய்த விஜய்
UPDATED : டிச 03, 2024 04:20 PM
ADDED : டிச 03, 2024 04:18 PM

சென்னை: புயலால் பாதிக்கப்பட்ட டி.பி.சத்திரம் பகுதி மக்கள் 250 பேரை கட்சி அலுவலகத்திற்கு வரவழைத்து த.வெ.க., தலைவர் விஜய் நிவாரண பொருட்களை வழங்கினார்.
தமிழக வெற்றிக் கழகத்தை துவங்கிய நடிகர் விஜய், 2026ல் கூட்டணி ஆட்சி அமைப்போம் எனக்கூறி தமிழக அரசியலில் பரபரப்பை கிளப்பினார். அதன் பிறகு அவர் பல அறிக்கை வெளியிட்டு உள்ளார். ஆனால், பெஞ்சல் புயல் காரணமாக, திருவண்ணாமலை, விழுப்புரம் உள்ளிட்ட மாவட்டங்கள் பாதிப்பை சந்தித்து உள்ளன. அங்கு நிவாரண பணிகளில் தமிழக அரசு ஈடுபட்டு உள்ளது. எதிர்க்கட்சிகளும் தங்கள் பங்குக்கு நிவாரண உதவிகளை வழங்கி வருகின்றன. ஆனால், த.வெ.க., கட்சியிடம் இருந்தோ, விஜய் தரப்பில் இருந்தோ எந்த அறிவிப்பும் வெளியாகவில்லை. இது விமர்சனத்தை கிளப்பி இருந்தது. இதனைத் தொடர்ந்து நேற்று, திருவண்ணாமலையில் நிலச்சரிவினால் சிக்கி உயிரிழந்தவர்களுக்கு இரங்கல் தெரிவித்து விஜய் அறிக்கை வெளியிட்டு இருந்தார்.
இந்நிலையில், டி.பி.சத்திரம் பகுதியில் புயலால் பாதிக்கப்பட்ட பகுதிகளில் உள்ள மக்களுக்கு நடிகர் விஜய் இன்று நிவாரண உதவிகளை வழங்கினார். பனையூரில் உள்ள கட்சியின் தலைமை அலுவலகத்திற்கு புயலால் பாதித்த பகுதிகளில் இருந்து வரவழைக்கப்பட்ட 250 பேருக்கு உதவிப் பொருட்களை வழங்கினார். இது குறித்த புகைப்படங்கள் மற்றும் வீடியோக்களை அக்கட்சி வழங்கி வெளியிட்டு உள்ளது.