ADDED : டிச 21, 2025 01:30 AM

புதுக்கோட்டை: 'விஜய் எந்த காலத்திலும் எம்.ஜி.ஆர்., ஆக முடியாது' என அமைச்சர் ரகுபதி கூறினார்.
புதுக்கோட்டையில் அவர் அளித்த பேட்டி:
சினிமாவில் எழுதிக் கொடுத்த வசனத்தை படிப்பது போல, தீய சக்தி,- துாய சக்தி என தமிழக வெற்றிக் கழக தலைவர் விஜய் பேசுகிறார். தி.மு.க.,வுடன் இருப்பது மக்கள் சக்தி.
விஜய்க்கு மக்கள் சக்தியும் தெரியாது; சிலப்பதிகாரமும் தெரியாது.
அரசியல் களத்தில் ஆறு மாதம் நடித்துவிட்டு, முதல்வராவது என்பது நடக்காத காரியம்; சினிமாவில் வேண்டுமானால் அப்படியெல்லாம் நடக்கலாம். கடந்த 1972ல் எம்.ஜி.ஆர்., துவங்கிய அ.தி.மு.க., திண்டுக்கல் இடைத்தேர்தலில் போட்டியிட்டு வென்றது. அவரைப் போல விஜய், விக்கிரவாண்டி, ஈரோடு கிழக்கு இடைத்தேர்தல்களில் போட்டியிட்டிருக்க வேண்டும்.
இப்படி எதையுமே செய்யாமல், எடுத்ததுமே ஆட்சியை பிடித்து விடுவேன் என்றால், அது நிஜமல்ல. அதனால் தான், அவரையும், எம்.ஜி.ஆரையும் ஒப்பிடக்கூடாது. விஜய் எந்த காலத்திலும் எம்.ஜி.ஆர்., ஆக முடியாது.
அ.தி.மு.க., பொதுச்செயலர் பழனிசாமிக்கு, 'கொள்கை வேறு; கூட்டணி வேறு' என்று சொல்ல தகுதியில்லை. அவர், கொள்கையை விட்டுவிட்டு தான் பா.ஜ.,வின் அடிமையாக இருக்கிறார்.
ஆனால், தி.மு.க.,வை மறைமுகமாக ஆதரித்தால் தான், தமிழகம் தலை நிமிர்ந்து நிற்கும் என்ற எண்ணம் ஒவ்வொரு அ.தி.மு.க., தொண்டருக்கும் இருக்கிறது.
இவ்வாறு அவர் கூறினார்.

